2014-11-10 15:11:09

வாரம் ஓர் அலசல் – எதுவுமே மாறாமல் என்றும் நிலைத்திருப்பதில்லை


நவ.10,201 RealAudioMP3 4. மகிமையின் கடவுளே, அன்பின் ஆண்டவரே, மகிழ்வோடு நாங்கள் உம்மை வணங்குகிறோம். இதழ்கள் விரிந்த மலர்களைப் போன்று எம் இதயங்கள் விரிந்துள்ளன, மேலேயுள்ள கதிரவனுக்கு அவை திறந்துள்ளன. பாவம் மற்றும் சோர்வின் மேகங்கள் கரைந்துள்ளன, சந்தேகத்தின் இருள் விரட்டப்பட்டுள்ளது, அழியாத பேரின்பத்தைத் தருபவரே, இந்நாளின் ஒளியால் எங்களை நிரப்பும். உம் கைவேலைப்பாடுகள் அனைத்தும் மகிழ்வோடு உம்மைச் சூழ்ந்துள்ளன, மண்ணகமும் விண்ணகமும் உம் சுடர்க்கதிர்களைப் பிரதிபலிக்கின்றன, விண்மீன்களும் வானதூதர்களும் உம்மைச் சூழ்ந்து நின்று இசைக்கின்றன, எல்லையில்லாத புகழின் மையமே, வயலும் வனமும், பள்ளத்தாக்கும் மலையும், பூத்துக்குலுங்கும் பசும்புல் நிலமும், நுரைபொங்கும் கடலும், பறவைகளும் நீரூற்றுகளும் உம்மில் அகமகிழ எங்களை அழைக்கின்றன. நீர் கொடுப்பதிலும் மன்னிப்பதிலும் வல்லவர். என்றும் மகிழ்வுக்குக் காரணமானவர்...
“மகிழ்ச்சியான பாடல்”(Ode to Joy) என்று கூறப்படும் இந்தப் பாடலின் வரிகள், இஞ்ஞாயிறன்று ஜெர்மனியின் பிரான்டன்பெர்க்(Brandenburg) நகரின் வாயிலுக்கருகில், எக்காள இசைக் கருவியில் முழங்கப்பட்டன. ஜெர்மானிய இசை மேதையான லுட்விக் பீத்தோவன் அவர்களின் மிக உன்னத இசையில் அமைந்த இப்பாடல் முழங்கப்பட்டபோது பெருந்திரளான மக்கள் நன்றியும், மகிழ்வும் நிறைந்த உள்ளத்தோடு ஆனந்தக் கண்ணீரில் நனைந்தனர். இறைவனுக்கு மகிழ்வோடு நன்றிப்புகழ் பாடினர். ஆம். நவம்பர் 09, இஞ்ஞாயிறன்று, ஜெர்மனியில், பெர்லின் சுவர் இடிக்கப்பட்டதன் 25ம் ஆண்டு நிறைவு சிறப்பிக்கப்பட்டது. கடுங்குளிரையும் பொருட்படுத்தாது ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் இந்த 25-வது ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு, மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். முன்னர் சுவர் இடிந்து மறைந்ததன் அடையாளமாக, அங்கு 15 கி.மீட்டர் தூரத்துக்கு ஒளி வீசும் வெண்மைநிற எட்டாயிரம் பலூன்கள் 3.6 மீட்டர் உயரக் கம்பங்களில் நடப்பட்டு இருந்தன. 155 கி.மீட்டர் நீளம் இருந்த அந்தச் சுவர் தற்போது 3 கி.மீட்டர் மட்டுமே இடிக்கப்படாமல் அப்படியே நினைவுச் சின்னமாகத் திகழ்கிறது.
இந்தச் சுவர் எழுந்ததன் பின்னணி என்ன? இரண்டு உலகப் போர்களிலும் முக்கியப் பங்கு வகித்த ஜெர்மனியை, பிற வல்லரசுகள் பெரும் அச்சுறுத்தலாகவே பார்த்தன. எனினும், இரண்டாம் உலகப் போரின் இறுதியில் ஜெர்மனி படுதோல்வி அடைந்தது. ஜெர்மனி மீண்டும் பலம்பெற்றுவிடக் கூடாது என்று நினைத்த பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா, சோவியத் யூனியன் ஆகிய நான்கு பெரிய வல்லரசுகள் அந்நாட்டைக் கூறுபோட்டன. சோவியத் யூனியனைத் தவிர்த்த பிற நாடுகள் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை ஒன்றாக்கி நிர்வகித்தன. அதுதான் மேற்கு ஜெர்மனி. சோவியத் யூனியனின் பொறுப்பில் இருந்த பகுதி கிழக்கு ஜெர்மனி என்று அழைக்கப்பட்டது. இந்தப் பிரிவினை அத்தோடு நிற்கவில்லை, தலைநகர் பெர்லினும் பாகம் பிரிக்கப்பட்டது. கிழக்கு பெர்லின் சோவியத் வசம் வந்தது. ஆனால், கிழக்கு ஜெர்மனியில் இருந்தவர்கள் சோவியத்தின் அடக்கியாளும் போக்கை விரும்பவில்லை. கிழக்கு ஜெர்மனியில் நிலங்களும் தொழிற்சாலைகளும் அரசுடமையாக்கப்பட்டன. சொகுசு வாழ்க்கை மற்றும் கேளிக்கைகளுக்குத் தடை விதிக்கப்பட்டன. தங்கள் வளர்ச்சி, குழந்தைகளின் எதிர்காலக் கல்வி போன்றவற்றைக் கருதி ஏராளமானோர் மேற்கு ஜெர்மனிக்கும், அங்கிருந்து பிற ஐரோப்பிய நாடுகளுக்கும் செல்லத் தொடங்கினர். இந்த எண்ணிக்கை நாளாக நாளாக அதிகரித்தது. 1953ன் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் 2,26,000 பேர் வெளியேறினர். இதனால், இரண்டாம் உலகப் போருக்கு முன்னர் கிழக்கு ஜெர்மனியில் 70.5 விழுக்காடாக இருந்த, வேலைசெய்யும் வயதுடைய மக்கள், 1960ம் ஆண்டில் 61 விழுக்காடாகக் குறைந்தனர். பொறியியலாளர்கள், தொழில்நுட்பத் திறனாளிகள், மருத்துவர்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், பயிற்சிபெற்ற தொழிலாளிகள் போன்றோரில் இந்த இழப்பு அதிகமாக இருந்தது. இதனால் கிழக்கு ஜெர்மனிக்கு 700 கோடி முதல் 900 கோடி டாலர் வரை இழப்பு ஏற்பட்டது. இது கிழக்கு ஜெர்மனியின் அரசியல் நம்பகத்தன்மையையும், பொருளாதார வளமையையும் பாதித்தது. எனவே இந்நிலையைத் தடுப்பதற்காக, கிழக்கு ஜெர்மனியின் நில எல்லைக்குள்ளாகவே பெரிய தடுப்பை ஏற்படுத்தும் பணி, சோவியத் அதிபர் ஜோசப் ஸ்டாலினின் ஆணையின்பேரில் 1961ம் ஆண்டு ஆகஸ்ட் 13ம் தேதி தொடங்கப்பட்டது. முதலில் முள்கம்பி வேலி அமைக்கப்பட்டது. பிறகு, 1962 முதல் 1965ம் ஆண்டு காலத்தில் அந்த வேலியே வலுவாக அமைக்கப்பட்டது. பின்னர் கான்கிரீட் சுவராக 1965 முதல் 1975ம் ஆண்டுக் காலத்தில் கட்டி முடிக்கப்பட்டது. பிறகு, அதுவே எல்லைப்புறச் சுவராக மேம்படுத்தப்பட்டது. இச்சுவரின் உயரம் 12 அடி, அகலம் 3.9 அடி. யாரும் சுவரைத் தாண்டிவிடாமலிருக்கவும் சுவரைத் துளைக்காமலிருக்கவும் 116 காவல்கோபுரங்களும், சுவர் பாதுகாப்பு வீரர்கள் தங்கி ஓய்வெடுக்க 20 பதுங்கு குழிபோன்ற சுரங்க அறைகளும் கட்டப்பட்டன. இதற்கிடையே, கிழக்கு ஜெர்மனியில் பொதுவிநியோக முறையில் தாங்கள் வழங்கும் கோதுமை, முட்டை போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை மலிவாக இருப்பதால், மேற்கிலிருந்து வந்து வாங்கிவிடுவார்கள், இன்னும், மேற்கிலிருந்து சதிகாரர்களும் பாசிஸ்டுகளும் கிழக்குப் பகுதிக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காகச் சுவரை எழுப்பியதாக சோவியத் யூனியன் காரணம் கூறியது. ஆனால் பெர்லின் சுவர், சகோதரர்களைப் பிரித்துவைக்கும் கொடுஞ்சுவர் என்று பொதுமக்கள் சாடினார்கள்.
கிழக்கு ஜெர்மனியில் மக்களின் போராட்டம் தொடர்ந்து நடந்தது. 1989ம் ஆண்டில் போலந்தும், ஹங்கேரியும் கம்யூனிச சோவியத்திலிருந்து பிரிந்ததைத் தொடர்ந்து கிழக்கு ஜெர்மனியில் மக்களின் போராட்டம் மேலும் வலுவடைந்தது. இறுதியில் வேறு வழியில்லாமல் பாதைகளைத் திறந்துவிட முடிவு செய்தது கிழக்கு ஜெர்மனி. அது நடந்த நாள் 1989ம் ஆண்டு நவம்பர் 09. அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கானோர் சுவரில் ஏறி மேற்கிற்குள் நுழைந்தனர். பல்லாயிரக்கணக்கான மேற்கு ஜெர்மானியர்கள், இவர்களை மறுபக்கத்தில் இருந்து வரவேற்றனர். அடுத்த சில தினங்களில் சுத்தியல் மற்றும் உளிகளைக் கொண்டு சுவரைத் தகர்த்தனர். இச்சுவரால் 28 ஆண்டுகளாக பிரிந்திருந்த இரண்டு ஜெர்மனிகளும் ஒரே நாடாக, 1990ம் ஆண்டு, அக்டோபர் 3ம் தேதியன்று இணைந்தன. பெர்லின், தலைநகராகவும் மாற்றப்பட்டது.
இந்தப் பெர்லின் சுவர் தகர்ப்பின் 25வது ஆண்டு நிறைவு விழாவில் ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல், போலந்தின் முன்னாள் தொழிற்சங்கத் தலைவர் லேக் வவென்சா, முன்னாள் சோவியத் யூனியனின் கடைசித் தலைவரான மிஷேல் கோர்ப்பசேவ் ஆகியோர் இருந்தனர். இதில் பேசிய ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் அவர்கள், கனவுகள் உண்மையாகும். எந்த ஒரு விடயமும் கடினமாக இருந்தாலும்கூட அது அப்படியே எப்பொழுதும் இருப்பதில்லை, பெர்லின் சுவர், ஒரு நம்பிக்கையின் செய்தியை அனுப்புகிறது. கடந்த காலங்களில் துன்புற்றவர்களை நாம் மறக்க முடியாது, இன்னும் நல்ல நிலைக்காக, காரியங்களை நம்மால் மாற்ற இயலும், இக்காலத்தில் மனித உரிமைகள் அச்சுறுத்தப்படும் உக்ரேய்ன், ஈராக் மற்றும் பிற பகுதிகளுக்கு இந்நாள் வழங்கும் செய்தி இதுவே என்று கூறினார். இவர் கிழக்கு ஜெர்மனியில் வளர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பெர்லின் சுவர் இடிப்புப் பற்றிக் கூறிய தி இந்து நாளிதழ்,
இந்தச் சுவர் மட்டுமல்ல, நாடுகளுக்கு இடையிலான எல்லைக்கோடுகளும்கூட நாமாகப் போட்டுக்கொண்டவைதான். அந்தக் கோடுகளையே நில எல்லைகளாகக் கருதி உணர்ச்சிவசப்பட்டுப் போரிடுகிறோம். இரண்டு உலகப் போர்களுக்குக் காரணமாக இருந்த ஜெர்மனி, பெர்லின் சுவர் உடைப்பு மூலம் உலகுக்குக் கற்றுத்தந்த ஒப்பற்ற பாடம், சகோதரத்துவம்தான்!
என்று கருத்துச் சொல்லியிருந்தது. இன்றும் இஸ்ரேல், அமெரிக்க ஐக்கிய நாடுகள் போன்றவை, பிற நாட்டினரை வரவிடாமல் தடுக்கும் சுவர்களை எழுப்பியுள்ளன. இந்த 25வது நிறைவு விழா பற்றி இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,
RealAudioMP3 நீண்ட காலமாக அந்தச் சுவர் நகரை இரண்டாகப் பிரித்திருந்தது. இது ஐரோப்பா மற்றும் உலகின் கருத்தியல்கோட்பாட்டுப் பிரிவின் அடையாளமாக இருந்தது. இந்தச் சுவர் இடிப்பு திடீரென நிகழ்ந்தது. இந்நிகழ்வு நடப்பதற்கு பலர் அயராது போராடியுள்ளனர், துன்புற்றுள்ளனர், செபித்துள்ளனர், ஏன், பலர் தங்கள் வாழ்வையே இழந்துள்ளனர். அவர்களுக்காக நன்றி சொல்வோம். சந்திப்புக் கலாச்சாரம் தொடர்ந்து பரவவும், உலகைப் பிரிக்கும் எல்லாச் சுவர்களையும் தகர்த்தெறிய மனிதருக்குச் சக்தி கிடைக்கவும் இறைவனிடம் செபிப்போம். அதன்மூலம் இன்றும் உலகில் தங்களின் மத நம்பிக்கைக்காக அப்பாவி மக்கள் நசுக்கப்படுவதும், கொல்லப்படுவதும் நிறுத்தப்படும். எங்கே சுவர் இருக்கின்றதோ அங்கே இதயங்கள் மூடப்பட்டிருக்கும். நமக்குச் சுவர்கள் அல்ல, பாலங்களே தேவை. பெர்லின் சுவர் தகர்க்கப்படுவதில் புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் முக்கிய பங்கு விகித்தார்
என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார் RealAudioMP3 . அக்காலத்தில் பெர்லின் சுவரைத் தாண்டி மேற்கு ஜெர்மனிக்குள் தப்ப முயன்றபோது குறைந்தது 135 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அன்பர்களே, எந்த ஒரு பொருளும், எந்த ஒரு காரியமும், எந்த ஒரு செயலும்... எதுவுமே அது இருப்பதுபோல் எப்பொழுதும் நிலைத்து இருப்பதில்லை. ஓடுகின்ற ஆற்றுத் தண்ணீர்போன்று எல்லாமே மாறுபவை. ஒரு காலக்கட்டத்தில் புகழின் உச்சியைத் தொடும் எந்த வீரர்களும், திரைப்படக் கலைஞர்களும்... இப்படி எவருமே அடுத்த காலக் கட்டத்தில் கீழே இறங்கி விடுகின்றனர். ஏனெனில் அவர்களின் சாதனையை முறியடிப்பதற்கு வேறு ஒருவர் அந்த இடத்திற்கு வந்து விடுகிறார். இதுதான் வாழ்க்கையின் எதார்த்தம். மாறிக்கொண்டே இருப்பதுதான் வாழ்க்கை. மனம் மாறுகிறபோது, வெளிச்சூழல்கள் மாறுகிறபோது எல்லாமே மாறுகின்றன. வேதங்கள் போதிப்பதுபோன்று, இந்த உலகில் எதுவும் யாருக்கும் நிரந்தரமானதல்ல. எந்த ஒரு மனிதராலும் இதைப்போன்ற பூமியை படைக்க முடியாது. ஒன்றை அழிப்பது எளிது, ஆனால் உருவாக்குவது கடினம். "இதுவும் கடந்து போகும்", எதுவும் நிரந்தரமில்லை, எல்லாமே நம்மைவிட்டு கடந்து போகக்கூடியவை என்பதே உண்மை. நமது இன்பம், துன்பம், பசி, வெற்றி, தோல்வி, புகழ், விரக்தி, இளமை, அழகு என்று எதுவுமே நம்மோடு நிலைத்திருக்கப் போவதில்லை. எனவே பிரிவினைச் சுவர்களைத் தகர்த்துப் பாலங்கள் கட்டி, உடன்பிறப்பு அன்புணர்வை வளர்ப்போம். இதுதான் பெர்லின் சுவர் இடிப்பு நிகழ்வு நமக்குச் சொல்லித்தரும் பாடம். நமக்குச் சுவர்கள் அல்ல, பாலங்களே தேவை. உலகில் எதுவுமே என்றும் மாறாமல் நிலைத்திருப்பதில்லை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி










All the contents on this site are copyrighted ©.