2014-11-10 15:40:53

திருத்தந்தை பிரான்சிஸ் : மன்னிக்கத் தெரியாதவர் கிறிஸ்தவராக இருக்கமுடியாது


நவ.10,2014. ஒவ்வொரு கிறிஸ்தவரும் மற்றவரை மன்னிப்பவராகவும், பிறர் இடறிவிழ காரணமாக இல்லாதவராகவும் இருக்கவேண்டும் என்று அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
பிறருக்கு இடறலாக இருப்பது என்பது, விசுவாசத்தை அழிவுக்கு உள்ளாக்குகின்றது என்று, இத்திங்கள் காலை சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலய திருப்பலியில் மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்தவர் என்று பறைசாற்றிக் கொண்டு, வாழ்வு நடவடிக்கைகளில் அதன் அடையாளமின்றி இருப்பது, பிறர் இடறிவிழ காரணமாகிறது என்று கூறினார்.
"நான் கோவிலுக்குச் செல்வதில்லை; ஆனால், நாணயமானவராக வாழ்கிறேன், மற்றவரோ கோவிலுக்குச் செல்கின்றனர்; ஆனால், செய்யக் கூடாததையெல்லாம் செய்கின்றனர்" என்று பிறர் சொல்வதை நாம் கேட்கும்போது, அது அதிர்ச்சி தருவதாக உள்ளது என்று கூறினார் திருத்தந்தை.
பாவம், மன்னிப்பு, விசுவாசம் என்று மூன்று கூறுகள் குறித்து தன் மறையுரையில் குறிப்பிட்டத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் அனைவரும் மன்னிப்பின் அவசியம் குறித்து அறிந்திருக்கவேண்டும் என்று விளக்கினார்.
மன்னிக்கத் தெரியாதவர் கிறிஸ்தவராக இருக்கமுடியாது என்பதையும் வலியுறுத்திக் கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுள் நம்மை மன்னிக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ளாதவர்களாலேயே, பிறரை மன்னிக்காமல் இருக்க முடியும் என்று எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.