2014-11-08 15:48:51

போஹோ ஹராம் அமைப்பைத் தோற்கடிப்பதற்கு அரசியல் ஆர்வம் அவசியம்


நவ.08,2014. எபோலா நோய்ப் பரவலைத் தடுப்பதற்கு காட்டிய அரசியல் ஆர்வத்தைப் போன்று, போஹோ ஹராம் இஸ்லாமியத் தீவிரவாத அமைப்பை ஒடுக்குவதற்கும் காட்டப்பட்டால் நைஜீரியாவில் போஹோ ஹராம் அமைப்பு தோற்கடிக்கப்படும் என்று நைஜீரிய ஆயர் பேரவைத் தலைவர் கூறினார்.
மான்செஸ்டரில் இயேசு சபையினர் பணியாற்றும் திருப்பெயர் ஆலயத்தில் உரையாற்றிய நைஜீரிய ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் இக்னேஷியஸ் கைகாமா அவர்கள், நைஜீரிய அரசு உண்மையிலேயே விரும்பினால், கிறிஸ்தவர்கள் மற்றும் பிற குடிமக்கள் மீதான போஹோ ஹராம் அமைப்பின் தாக்குதல்களை நிறுத்த முடியும் என்று கூறினார்.
நைஜீரியாவில், எபோலா நோய்க் கிருமிகள் பரவாமல் தடைசெய்வதில் வெற்றி கண்டுள்ள அரசு, அதேபோன்ற உறுதியான அரசியல் ஆர்வத்துடன் செயல்பட்டு போஹோ ஹராம் அமைப்பின் நடவடிக்கைகளையும் நிறுத்த வேண்டுமெனக் கூறினார் பேராயர் கைகாமா.
இதற்கிடையே, இம்மாதம் நான்காம் தேதி பிரித்தானிய நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சமய சுதந்திரம் குறித்த அறிக்கையில், உலகில் சமய அடக்குமுறை உச்சத்தில் உள்ள இருபது நாடுகளில் நைஜீரியாவும் ஒன்றாக இடம்பெற்றுள்ளது.

ஆதாரம் : CNS







All the contents on this site are copyrighted ©.