2014-11-08 14:26:51

புனிதரும் மனிதரே - கத்தோலிக்கத் திருமறையின் தாய் ஆலயம்


கி.பி. 324ம் ஆண்டு, நவம்பர் 9ம் தேதி, திருத்தந்தை புனித சில்வெஸ்டர் அவர்கள், உரோம் நகரில் கிறிஸ்தவக் கோவில் ஒன்றை அர்ச்சித்தார். கிறிஸ்தவர்கள் தங்கள் வழிபாட்டிற்கென்று உலகறிய கட்டிய முதல் கோவில் அதுவே. 300 ஆண்டுகளாக, உரோமையர்களும், யூதர்களும் கிறிஸ்தவர்களை வேட்டையாடிவந்த கொடுமைகள் தீரும் வண்ணம், உரோமையப் பேரரசர் கான்ஸ்டன்டைன் அவர்கள், கிறிஸ்தவர்களுக்கு வழங்கிய மதச் சுதந்திரத்தையடுத்து, கட்டப்பட்ட அக்கோவிலே கத்தோலிக்கத் திருமறையின் தாய் ஆலயம் என்று அழைக்கப்படுகிறது.
'புனித மீட்பர் ஆலயம்' என்ற பெயரில் அர்ச்சிக்கப்பட்ட அக்கோவில், 10ம் நூற்றாண்டில், புனித திருமுழுக்கு யோவான் பெயராலும், 12ம் நூற்றாண்டில் நற்செய்தியாளரான திருத்தூதர் யோவான் பெயராலும் அர்ச்சிக்கப்பட்டது. எனவே, தற்போது, இப்பேராலய நுழைவு வாயிலில், மிகத் தூய மீட்பர், புனிதர்களான திருமுழுக்கு யோவான், நற்செய்தியாளர் யோவான் ஆகியோரின் பெயரால், இலாத்தரனில் அமைந்துள்ள தலைமை பசிலிக்கா (Archbasilica of the Most Holy Saviour and Saints John the Baptist and the Evangelist at the Lateran) என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.
வத்திக்கானில் அமைந்துள்ள புனித பேதுரு பசிலிக்காப் பேராலயம், திருஅவையின் தலைவர் என்ற முறையில், திருத்தந்தையின் கோவிலாகவும், புனித ஜான் இலாத்தரன் பசிலிக்காப் பேராலயம், உரோம் மறைமாவட்டத்தின் ஆயர் என்ற முறையில், திருத்தந்தையின் கோவிலாகவும் அமைந்துள்ளன. கத்தோலிக்கத் திருஅவையின் முதன்மையான, தாய் ஆலயமாகக் கருதப்படும் புனித ஜான் இலாத்தரன் பசிலிக்காப் பேராலயத்தின் அர்ச்சிப்புத் திருநாள், நவம்பர் 9ம் தேதி சிறப்பிக்கப்படுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.