2014-11-08 15:48:23

திருத்தந்தை, இத்தாலிய சாரணர் இயக்கத்தினர் சந்திப்பு


நவ.08,2014. கல்வியின் முதல் தளமாகவும், வாழ்வு மற்றும் அன்பின் சமூகமாகவும் இருக்கின்ற குடும்பத்தில் பிறரோடும், உலகோடும் உள்ள உறவை ஒவ்வொரு மனிதரும் கற்றுணர்கிறார் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
இத்தாலிய கத்தோலிக்க வயதுவந்தோர் சாரணர் இயக்கம் தொடங்கப்பட்டதன் அறுபதாம் ஆண்டை முன்னிட்டு இச்சனிக்கிழமையன்று வத்திக்கான் ஆறாம் பவுல் அரங்கத்தில் கூடியிருந்த ஏழாயிரத்துக்கு மேற்பட்ட அவ்வியக்கத்தினர்களைச் சந்தித்து உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாறு கூறினார்.
இவ்வியக்கத்தின் பயிற்சிப் பண்பை விளக்கும் “பாதை” என்ற கூறில் தொடர்ந்து செல்லுமாறு ஊக்கப்படுத்திய திருத்தந்தை, குடும்பம், படைப்பு, நகரம் ஆகிய மூன்று பாதைகளைக் கோடிட்டுக் காட்டி விளக்கினார்.
எல்லா அழைப்புகளுமே முதலில் குடும்பங்களிலிருந்து ஆரம்பிக்கின்றன என்றும், தொடர் கல்வியில் அடிப்படையைக் கொண்ட இந்த இயக்கத்திலுள்ள கிறிஸ்தவப் பெற்றோர், தங்களது பணிக்கான மூலத்தை திருமணம் எனும் அருளடையாளத்தில் காண்கின்றனர் என்றும், இதில் குழந்தை வளர்ப்பு திருஅவையில் உண்மையான பணியாக உள்ளது என்றும் கூறினார் திருத்தந்தை.
மேலும், சுற்றுச்சூழல் விவகாரம் மனிதரின் உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாததாக இருக்கின்றது, எனவே படைப்பைப் பராமரிப்பதில் இவ்வியக்கத்தினர் செல்லும் பாதையில் தொடர்ந்து பயணிக்குமாறும் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, இவ்விவகாரத்தில் எவரும் ஆர்வம் காட்டாமல் இருக்க முடியாது என்றும் கூறினார்.
நம் ஆண்டவர் இயேசுவின் நல்ல மறைப்பணித் திருத்தூதர்களாகச் செயல்படுமாறு சாரணர் இயக்கத்தினரிடம் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
Masci எனப்படும் இத்தாலிய கத்தோலிக்க வயதுவந்தோர் சாரணர் இயக்கம்(Italian Catholic Movement of Adult Scouts), Mario Mazza என்பவரால் 1954ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இதில் திருப்பீடச் செய்தித் தொடர்பாளரும், வத்திக்கான் வானொலி இயக்குனருமான அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி அவர்களும் உறுப்பினராக உள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.