2014-11-08 15:48:30

சலேசிய சபை அருள்சகோதரிகளிடம் திருத்தந்தை : நம்பிக்கை மற்றும் மகிழ்வின் மறைப்பணியாளர்களாக வாழுங்கள்


நவ.08,2014. தங்களின் சபையின் பொதுப்பேரவையை நடத்தி முடித்துள்ள சலேசிய சபையின் ஏறக்குறைய இருநூறு அருள்சகோதரிகளை இச்சனிக்கிழமையன்று வத்திக்கானில் சந்தித்து உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்தச் சகோதரிகள் எப்பொழுதும், நம்பிக்கை மற்றும் மகிழ்வின் மறைப்பணியாளர்களாக வாழுமாறு கேட்டுக்கொண்டார்.
இளையோரின் வாழ்வு எப்பொழுதும் கிறிஸ்துவை மையப்படுத்தியதாய், அது இறைவார்த்தையால் வடிவமைக்கப்பட்டு, அதனால் வழிநடத்தப்படுவதாய் இருக்கும் விதத்தில் இளையோருக்கான பணி அமைதல் வேண்டும் என்று திருத்தந்தை கூறினார்.
துறவு வாழ்வை எவ்வளவு தூரம் திருஅவை போற்றுகின்றது என்பதை சகோதரிகளாகிய நீங்கள் அறிவீர்கள், முதலில் நீங்கள் ஒருவர் ஒருவரின் குறை நிறைகளை ஏற்று, சமத்துவத்தைப் போற்றி, ஒருவர் ஒருவரின் திறமைகளை மதித்து உங்கள் மத்தியில் சகோதரத்துவ ஒன்றிப்புக்குச் சாட்சிகளாய் வாழுங்கள் என்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.
இளையோரை உள்ளடக்கிய உங்கள் நற்செய்தி அறிவிப்புப் பணிகளில், விசுவாசப் பயணத்தை ஊக்குவிப்பதில் பொறுப்புக்களைப் பகிர்ந்து வாழும் சூழலை உருவாக்குமாறும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இளையோரை வரையறையின்றி ஏற்பதன்மூலம், எல்லா இடங்களிலும் இறைவாக்குச் சான்றுகளாய்த் திகழுங்கள் என்றும் பரிந்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.