2014-11-08 15:49:05

இலங்கை அரசின் அணுகுமுறை குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையர் கண்டனம்


நவ.08,2014. இலங்கையில் இடம்பெற்ற கடும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் நடத்திவரும் புலன்விசாரணைகளின் நம்பகத்தன்மை, நேர்மை ஆகியவற்றை இலங்கை அரசு தொடர்ந்து குறைகூறி வருவதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார் அந்த ஆணையத் தலைவர் Zeid Ra’ad Al Hussein .
இந்த புலன்விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு தர விழையும் தனிநபர்களையும் இலங்கை அரசு தடுப்பதாகவும் Al Hussein அவர்கள் குறைகூறியுள்ளார்.
இந்த விசாரணைக்கு எதிரான தவறான தகவல்களைக் கூறி அதனைத் தாக்குவது, அந்த விசாரணைக் குழுவுக்கு சாட்சியமளிக்க விரும்புவர்களைத் தடுப்பது ஆகியவை, இந்த விசாரணைக்கான ஆணையைப் பெற்றுள்ள ஐநா மனித உரிமைகள் ஆணையக்குழுவை அவமதிக்கும் செயலாகும் என்றும் Al Hussein அவர்கள் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் இறுதிப் போரில் இருதரப்பினரும் பன்னாட்டுச் சட்டங்களைக் கடுமையாக மீறியதாக பரவலாக குற்றச்சாட்டுகள் இருக்கும் நிலையில், இலங்கை அங்கு ஒரு சுயாதீனமான புலன் விசாரணை நடைபெறுவதை தொடர்ச்சியாக தடுத்து வருகின்றது என்றும் அவர் கூறியுள்ளார்.
இலங்கையின் சமூக அமைப்புகளும், மனித உரிமை ஆர்வலர்களும், தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்பட்டு, துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதுடன், ஏனைய வகையிலான மிரட்டல்களையும் எதிர்கொள்வதாகவும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் தெரிவித்துள்ளார்.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.