2014-11-08 15:49:18

3டி படங்களால் குழந்தைகளின் கண்திறனில் பாதிப்பு, அறிவியலாளர் எச்சரிக்கை


நவ.08,2014. ஆறு வயதிற்கும் குறைவான பிள்ளைகள் முப்பரிமாண 3டி படங்களை பார்க்க அனுமதிக்கக்கூடாது என பிரான்சின் மக்கள்நலக் கண்காணிப்பு அமைப்பான ANSES பரிந்துரைத்துள்ளது.
வளர்ந்து வருகின்ற குழந்தைகளின் கண்களில் முப்பரிமாணப் படங்கள் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் பற்றி ஆராய்ந்த பின்னர் அன்செஸ் இவ்வாறு பரிந்துரைத்துள்ளது.
ஒரு முப்பரிமாண படத்தில் இரண்டு வெவ்வேறு இடங்களை நம் கண்கள் ஒரே நேரத்தில் பார்க்க வேண்டும். அதன் பின்னர்தான் நமது மூளை அதனை ஒரே படமாக புரிந்துகொள்ளும். இவ்வாறாகத்தான் முப்பரிமாண படங்களை நாம் கிரகித்துக்கொள்கிறோம்.
ஆறு வயதுக்கு குறைவான குழந்தைகளின் கண்கள் முழுமையான வளர்ச்சி அடைந்திருக்காத சூழ்நிலையில், முப்பரிமாணப் படங்களைப் பார்க்கும்போது அவர்களுக்கு அப்படங்களை கிரகித்துக்கொள்ள அதிகச் சிரமமாக இருக்கும். அதனால் அவர்களின் உடல்நலனில் ஏற்படும் தாக்கம் பெரியவர்களைக் காட்டிலும் அதிகமாக இருக்கிறது என அன்செஸ் கூறியுள்ளது.
தற்போது அதிகமான நிறுவனங்கள் முப்பரிமாணப் படங்களுக்கான கருவிகளை உருவாக்கி வருகின்றன.

ஆதாரம் : பிபிசி







All the contents on this site are copyrighted ©.