2014-11-07 15:29:12

போரின் நாசவேலைகளிலிருந்து சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு ஐ.நா. வலியுறுத்தல்


நவ.07,2014. நிலத்தை மாசுபடுத்துவது தொடங்கி, இயற்கை வளங்களைக் கொள்ளையடித்து சுற்றுச்சூழலை நாசம் செய்யும் நடவடிக்கைகள், போரின் விளைவுகளையொத்த சேதங்களை நீண்டகாலமாக மௌனமாக ஏற்படுத்தி வருகின்றன என்று ஐ.நா.பொதுச்செயலர் பான் கி மூன் அவர்கள் கூறியுள்ளார்.
இக்காலத்தில் வேகமாக மாறிவரும் போரின் யுக்திகள், வருங்காலத்தின் அமைதிக்கும், உறுதியான வளர்ச்சிக்கும் அச்சுறுத்தலாக உள்ளன என்பதால், இதற்கான தீர்வுகள் காணப்பட வேண்டியது இன்றியமையாதது என்று மேலும் கூறியுள்ளார் பான் கி மூன்
அக்டோபர் 06, இவ்வியாழனன்று கடைப்பிடிக்கப்பட்ட, போரிலும், ஆயுதம் ஏந்திய மோதல்களிலும் சுற்றுச்சூழல் சுரண்டப்படுவதைத் தடுக்கும் உலக தினத்திற்கென வெளியிட்ட செய்தியில் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார் பான் கி மூன்.
மேலும், ஐ.நா. வளர்ச்சித்திட்ட அமைப்பின்(UNEP) அறிக்கையின்படி, கடந்த அறுபது ஆண்டுகளில் இடம்பெற்றுள்ள உள்நாட்டுச் சண்டைகளில், குறைந்தது நாற்பது விழுக்காடு, இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதோடு தொடர்புடையது எனத் தெரிகிறது.
போரிலும், ஆயுதம் ஏந்திய மோதல்களிலும் சுற்றுச்சூழல் சுரண்டப்படுவதைத் தடுக்கும் உலக தினத்தை 2001ம் ஆண்டில் ஐ.நா. பொது அவை உருவாக்கியது.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.