2014-11-06 15:55:35

திருத்தந்தை பிரான்சிஸ் - திருமுழுக்கும், நற்செய்திப் பணியும் அனைத்து கிறிஸ்தவர்களையும் ஒருங்கிணைக்கும் அடித்தளம்


நவ.06,2014. கிறிஸ்தவ வரலாற்றின் துவக்கத்திலிருந்தே உருவானப் பிரிவுகள், இன்றும் நம் மத்தியில் இருப்பது, நற்செய்தியை உலகெங்கும் பறைசாற்ற ஆண்டவர் வழங்கிய கட்டளைக்கு இடையூறாக உள்ளது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
உலக நற்செய்தி கூட்டமைப்பு (World Evangelical Alliance) என்ற பன்னாட்டு அமைப்பைச் சார்ந்த பிரதிநிதிகளை இவ்வியாழன் காலை திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, திருமுழுக்கும், நற்செய்திப் பணியும் அனைத்து கிறிஸ்தவர்களையும் ஒருங்கிணைக்கும் அடித்தளம் என்று கூறினார்.
நம்மிடம் காணப்படும் பிரிவுகள், நமக்கு வழங்கப்பட்டுள்ள கிறிஸ்து என்ற ஆடையில் கறைகளை உருவாக்கியுள்ளனவே அன்றி, இந்த ஆடையை முற்றிலும் சீர்குலைக்கவில்லை என்று திருத்தந்தை தன் உரையில் குறிப்பிட்டார்.
உலக நற்செய்தி கூட்டமைப்பு, பல நாடுகளில் கத்தோலிக்கர்களுடன் நல்லுறவை வளர்த்து வருவது தனக்கு மகிழ்வளிப்பதாகக் கூறியத் திருத்தந்தை, கிறிஸ்தவ ஒன்றிப்பிற்கென உழைத்து வரும் திருப்பீட அவை வழியே இந்த நல்லுறவு இன்னும் உறுதி பெறும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.
நற்செய்தியைப் பறைசாற்றுவதில் நம்மிடையே உருவாகும் ஆர்வம், நம் பிரிவுகளைக் குறைத்து ஒன்றிணைக்க, தூய ஆவியார் நமக்குத் துணை வருவார் என்ற நம்பிக்கை வார்த்தைகளோடு திருத்தந்தை தன் உரையை நிறைவு செய்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.