2014-11-06 16:08:27

சந்திக்கும் கலாச்சாரத்தின் வழியே, மனிதரின் தனித்துவமும், மாண்பும் பாதுகாக்கப்படுகின்றன - பேராயர் மம்பெர்த்தி


நவ.06,2014. மனிதர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்க விழையும் கலாச்சாரம் வளரவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் தலைமைப் பணியை ஏற்ற நாள் முதல் கூறிவருவதை, வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் ஒரு பன்னாட்டு கருத்தரங்கில் எடுத்துரைத்தார்.
ஜெர்மனி நாட்டின் Munich நகரில், Interpol எனப்படும் பன்னாட்டு காவல்துறை அமைப்பு, நவம்பர் 3, இத்திங்கள் முதல், 7, இவ்வெள்ளி முடிய நடத்திவரும் ஒரு கருத்தரங்கில், திருப்பீட பன்னாட்டு உறவுத் துறையின் தலைவராகப் பணியாற்றும் பேராயர் தோமினிக் மம்பெர்த்தி அவர்கள் இவ்வாறு கூறினார்.
சந்திக்கும் கலாச்சாரத்தின் வழியே, ஒவ்வொரு மனிதரின் தனித்துவமும், மாண்பும் பாதுகாக்கப்படுகின்றன என்று கூறிய பேராயர் மம்பெர்த்தி அவர்கள், அத்தகைய கலாச்சாரத்தை இத்தகைய பன்னாட்டு கருத்தரங்குகள் வளர்க்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இன்றையச் சூழலில் குற்றங்கள் புரிவோர், ஒரு நாட்டு எல்லையைக் கடந்து பன்னாட்டுத் தொடர்புகளுடன் செயலாற்றுவது காவல் துறையினருக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது என்பதையும் பேராயர் மம்பெர்த்தி அவர்கள் எடுத்துரைத்தார்.
பன்னாட்டளவில் நடைபெற்றுவரும் பல்வேறு குற்றங்களில், மனித வர்த்தகம் என்பது, மனித குலத்தின் மீது விழுந்துள்ள கடினமான அடி என்று கூறிய பேராயர் மம்பெர்த்தி அவர்கள், இன்றைய உலகில் 2 கோடியே 70 இலட்சம் மக்கள் மனித வர்த்தகத்தால் அடிமைப்பட்டுள்ளனர் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத தீமை என்று சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.