2014-11-06 16:00:05

'காணாமற்போன குழந்தைகளின் பாட்டிகள்' என்ற அமைப்பை அர்ஜென்டீனாவில் உருவாக்கியவர் திருத்தந்தையுடன் சந்திப்பு


நவ.06,2014. அர்ஜென்டீனா நாட்டின் ஒரு முக்கிய சமுதாய அமைப்பைச் சேர்ந்த Estela Barnes de Carlotto என்ற 84 வயது தாயையும், அவரது பேரனும், இசைக் கலைஞருமான Ignacio Guido Carlotto அவர்களையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதன் மாலை வத்திக்கானில் சந்தித்தார் என்று திருப்பீடச் செய்தித் தொடர்பாளர், அருள்பணி Federico Lombardi அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்..
1976ம் ஆண்டு முதல் 82ம் ஆண்டு முடிய அர்ஜென்டீனா நாட்டில் நிலவிய சர்வாதிகார இராணுவ ஆட்சியின்போது, அதை எதிர்த்த பலர், அடையாளம் தெரியாதபடி கொல்லப்பட்டனர். அவர்களின் குழந்தைகளைத் தேடி, 'காணாமற்போன குழந்தைகளின் பாட்டிகள்' என்ற அமைப்பை உருவாக்கியவர், Estela Carlotto அவர்கள்.
அவருடைய பேரன் Ignacio Guido அவர்கள், 36 ஆண்டுகளுக்குப் பின்னர் இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் கண்டுபிடிக்கப்பட்டார். காணாமற்போன குழந்தைகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இந்த அமைப்பின் தலைவர் Estela Carlotto அவர்களைச் சந்தித்தத் திருத்தந்தை, அக்குடும்பத்தைச் சேர்ந்த 18 பேரையும் சந்தித்தார்.
இசைக் கலைஞரான Ignacio Guido அவர்கள், தான் உருவாக்கிய இசை குறுந்தகட்டையும், அர்ஜென்டீனா நாட்டில் கிராமங்களில் வாழ்வோர் அணியும் 'pancho' என்ற பாரம்பரியத் துணியையும் திருத்தந்தைக்குப் பரிசாக அளித்தார்.
'காணாமற்போன குழந்தைகளின் பாட்டிகள்' என்ற அமைப்பை உருவாக்கிய, Estela Carlotto அவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் புனித பேதுரு வளாகத்தில் சந்தித்து வாழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.