2014-11-05 15:28:29

புனிதரும் மனிதரே : இயேசு சபை புனிதர் ஹோசே மரிய ரூபியோ (St. Jose Maria Rubio)


இஸ்பெயினின் மத்ரித் மறைமாவட்டத்தைச் சேர்ந்த ஹோசே மரிய ரூபியோ என்ற அருள்பணியாளர், ஒப்புரவு அருளடயாளத்தை மக்களுக்கு வழங்குவதில் மிகவும் பிரபலமானவராக இருந்தார். இவர் வழியாக இறைவனிடம் தங்கள் பாவங்களை அறிக்கையிட மக்கள் தினந்தோறும் வரிசையில் காத்திருப்பது உண்டு. அருள்பணியாளர் ரூபியோ இந்த மக்களின் பாவ அறிக்கையின்போது வழங்கிய அறிவுரைகளே இதற்கு முக்கிய காரணம். ஒருநாள் இவர் ஒப்புரவு அருளடையாளத்தை நிறைவேற்றிக்கொண்டிருந்தபோது ஒரு வயதான பெண்மணி இவர் அருகே வந்து, ஒருவர் சாகும் தறுவாயிலிருப்பதாகவும், அவருக்கு ஒப்புரவு அடையாளத்தை வழங்கவேண்டுமென்றும் கூறி, முகவரி ஆகிய விவரங்களை வழங்கினார். அன்று மாலை அருள்பணி ரூபியோ, அந்த முகவரியைத் தேடிச் சென்றார். மூன்று மாடிகள் படியேறிச் சென்றார் அவர். அவ்விடத்திற்கு சென்றபோது, இவர் சந்திக்கவேண்டிய மனிதர் முழுவதும் குணமாகி இருப்பதைக் கண்டார். அந்த மனிதர் அருள்பணி ரூபியோவிடம், 'மன்னிக்கவும். யாரோ உங்களை ஏமாற்றியிருக்கிறார்கள். நான் நல்ல பூரண சுகத்துடனேயே இருக்கிறேன். இவ்வளவு கஷ்டப்பட்டு மூன்று மாடி ஏறி வந்திருக்கிறீர்கள். ஏதாவது தாகத்துக்குக் குடியுங்கள்' என்றார். அருள்பணி ரூபியோவும் அவர் கொடுத்ததைக் குடித்துக்கொண்டிருந்தபோது சுவரில் மாட்டியிருந்த முதியப் பெண்மணியின் புகைப்படத்தைக் கண்டார். 'இந்த படம் யாருடையது. இதில் இருக்கும் பெண்மணிதான் இன்று காலையில் என்னை வந்து சந்தித்தது' என அந்த மனிதரிடம் கூறினார் ரூபியோ. அந்த மனிதர் சிரித்துக்கொண்டே கூறினார், 'அது எப்படி இருக்கமுடியும். இது என் அம்மாவின் புகைப்படம். அவர்கள் இறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அவரைப் போன்ற தோற்றமுடைய யாராவது உங்களை ஏமாற்றியிருக்கிறார்கள்' என்று. அந்த மனிதர் மீண்டும் ரூபியோவை நோக்கி, 'எப்படியும் நீங்கள் வந்துவிட்டீர்கள். நானும் என் பாவங்களை அருள்பணியாளரிடம் அறிக்கையிட்டு பலகாலம் ஆகிவிட்டது. எதற்கும் ஒப்புரவு அருளடயாளத்தைப் பெற்றுக்கொள்கிறேன்' என்று கூறி அதனை நிறைவேற்றினார். அன்றிரவே அந்த மனிதர் இறைபதம் சேர்ந்தார். இதுபோன்ற நிகழ்வுகள் அருள்பணி ரூபியோவின் வாழ்வில் பலமுறை இடம்பெற்றுள்ளன.
இந்தப் புனித ஹோசே மரிய ரூபியோ 1864ம் ஆண்டு இஸ்பெயினில் பிறந்து தனது 23ம் வயதில் அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டு மத்ரித் மறைமாவட்டத்தில் பணிபுரியத் துவங்கினார். அப்போது அங்கு ஏறக்குறைய 23 ஆண்டுகள் தந்தை ஜோக்கிம் டோரஸ் என்ற அருள்பணியாளரிடம் மிக நெருக்கமான தோழமை கொண்டு அவரைத் தன் ஆன்மீக வழிகாட்டியாகக் கொண்டிருந்தார். மறைமாவட்ட குருவாக இருக்கும்போது, தன்னை இயேசு சபையின் விசிறி என அழைத்துக்கொள்வார் ரூபியோ. இயேசு சபையில் சேர வேண்டுமென்ற இவரின் விருப்பத்திற்கு தடைப் போட்டுவந்தார் அருள்பணி டோரஸ். ஒரு நாள் அருள்பணி டோரஸ் திடீரென்று மரணமடைந்தார். அதன்பின் ரூபியோ இயேசு சபையில் சேர்ந்து கிரனாடா நகரில் இளந்துறவு நிலையைத் தொடர்ந்தார். அப்போது இவரின் வயது 42. அதன்பிறகு 3 ஆண்டுகள் கழித்து தனது துறவற வார்த்தைப்பாடுகளைக் கொடுத்தார். பின்பு மீண்டும் மத்ரித் வந்து 18 ஆண்டுகள் தொடர்ந்து இறைபணியை ஆற்றினார். இவரின் மறையுரைகளில் காணப்பட்ட எளிமை, மற்றவர்களின் மனதை மாற்றியது. கடவுளை அன்பு செய்யும் எளிய முறைகளைக் கற்றுக்கொடுத்தார். திருஇருதய பக்தியையும், திருநற்கருணை பக்தியையும் பரப்பி வந்தார். பிரான்ஸ் நாட்டில் புனித மரிய வியான்னியை அவர் வாழ்ந்தபோதே எப்படி மதித்துப் போற்றினார்களோ, அதேபோல் தந்தை ரூபியோவையும், மத்ரித் நகரினர் மதித்து வந்தனர். ரூபியோ அவர்கள் தனது 64ம் வயதில் 1929ம் ஆண்டு இதய நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். இவர், மத்ரித் நகர் திருத்தூதர் என்றழைக்கப்படுகிறார். இயேசு சபை துறவியான இவரை 2003ம் ஆண்டு புனிதராக அறிவித்தார் புனித திருத்தந்தை இரண்டாம் ஜான் பால்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.