2014-11-05 16:13:44

திருமணத்தில் இணையும் ஆணும், பெண்ணும் என்ற கருத்தை மையப்படுத்திய ஒரு பன்னாட்டு கருத்தரங்கு - திருப்பீடம் ஏற்பாடு


நவ.05,2014. திருமணத்தில் இணையும் ஆணும், பெண்ணும் எவ்வாறு ஒருவருக்கொருவர் துணையாளர்களாக உள்ளனர் என்ற கருத்தை மையப்படுத்திய ஒரு பன்னாட்டு கருத்தரங்கை திருப்பீடம் ஏற்பாடு செய்துவருகிறது.
விசுவாசக் கோட்பாட்டு பேராயமும், குடும்பங்கள், பல்சமய உரையாடல், கிறிஸ்தவ ஒன்றிப்பு ஆகிய பணிகளில் ஈடுபட்டுள்ள திருப்பீட அவைகளும் இணைந்து நவம்பர் 17 முதல் 19 முடிய நடத்தவிருக்கும் இந்தக் கருத்தரங்கை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் துவக்கி வைக்கிறார்.
திருமணத்தில் இணையும் ஆணும், பெண்ணும் ஒருவருக்கொருவர் துணையாளர்கள் என்ற கருத்து உலகின் பல்வேறு மதங்களில் காணப்படுகிறது என்பதை இக்கருத்தரங்கு வெளிப்படுத்தும் என்று கருத்தரங்கின் அமைப்பாளர்கள் கூறுகின்றனர்.
23 நாடுகளிலிருந்து வருகைதரும் 14 மதங்களைச் சேர்ந்தவர்கள், இந்த கருத்தரங்கில் கலந்துகொள்வர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண் பெண் உறவின் உன்னதம், திருமண உறவின் நிலையற்ற போக்கு, குடும்ப உறவுகள் காணாமற் போவதால் சமுதாயத்தில் உருவாகும் விளைவுகள் ஆகிய கருத்துக்கள் இக்கருத்தரங்கில் விவாதிக்கப்படும் என்று Zenit செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
மேலும், இக்கருத்தரங்கின் ஒவ்வோர் அமர்விலும் திருமணம், குடும்பம் ஆகிய கருத்துக்களை மையப்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ள ஆறு குறும்படங்கள் திரையிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : Zenit








All the contents on this site are copyrighted ©.