இந்திய அரசு, கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளை கேள்விகேட்காமல்
இருப்பது வேதனை தருகிறது - அருள்பணி சார்ல்ஸ் இருதயம்
நவ.05,2014. இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் உருவாகியுள்ள அரசு,
சிறுபான்மை கிறிஸ்தவர்களுக்கு எதிராக வெளிப்படையாக எதுவும் செய்யவில்லை என்றாலும், கிறிஸ்தவர்களுக்கு
எதிராக நடைபெறும் வன்முறைகளை கேள்விகேட்காமல் இருப்பது வேதனை தருகிறது என்று இந்திய ஆயர்
பேரவையின் அதிகாரி ஒருவர் கூறினார். இந்திய ஆயர் பேரவையின் நீதி, அமைதி, மனித முன்னேற்றம்
பணிக்குழுவின் செயலர், அருள்பணி சார்ல்ஸ் இருதயம் அவர்கள், Fides செய்திக்கு அண்மையில்
அளித்த பேட்டியொன்றில் இவ்வாறு கூறினார். அடிப்படைவாத இந்துக்கள், கிறிஸ்தவர்களுக்கு
எதிராக சத்தீஸ்கர் மாநிலத்தில் அண்மையில் மேற்கொண்ட வன்முறைகளை கண்டனம் செய்யாமலும்,
கேள்விகள் எழுப்பாமலும் இருக்கும் மத்திய அரசின் மௌனம் நல்லதொரு அடையாளம் அல்ல என்று
அருள்பணி இருதயம் அவர்கள் கூறினார். நீதியையும், அமைதியையும் நிலைநாட்ட திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள் மேற்கொண்டு வரும் செபங்கள் வழியே துன்புறும் இந்திய கிறிஸ்தவர்களோடு
அவர் இணைகிறார் என்பதை உணரும் நாங்கள், தொடர்ந்து, இந்திய மண்ணில் நீதியும், சமய நல்லுணர்வும்
உருவாக வன்முறையற்ற, ஆன்மீக வழிகளைத் தேடுவோம் என்றும் அருள்பணி இருதயம் சுட்டிக்காட்டினார். இந்தியாவைத்
தூய்மைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள மத்திய அரசு, மக்கள் மனங்களில் நிலவும் அநீதி,
கொடுமை ஆகிய அழுக்குகளையும் அகற்றும் முயற்சிகளில் ஈடுபடுவது அவசியம் என்று நீதி, அமைதி,
மனித முன்னேற்றம் பணிக்குழுவின் செயலர், அருள்பணி சார்ல்ஸ் இருதயம் அவர்கள் எடுத்துரைத்தார்.