2014-11-04 14:16:37

விவிலியத்
தேடல் புதையல், முத்து, வலை உவமைகள் பகுதி - 3


RealAudioMP3 "பட்ட காலிலேயே படும்; கெட்ட குடியே கெடும்", "ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையாது", என்ற பழமொழிகள் வழியே நன்னெறி வாழ்வு வலியுறுத்தப்படுகிறது. "அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்" என்ற பழமொழி வழியே, நீதி கட்டாயம் நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கை நம் மனங்களில் விதைக்கப்படுகிறது. ஆனால், நடைமுறை உலகம், நம் நம்பிக்கையையும், நன்னெறியையும் கேலியாக்குகிறது, கேள்வியாக்குகிறது.

இந்தியாவில் ஓர் அரசியல் தலைவர் மீது தொடுக்கப்பட்ட ஒரு வழக்கு, பல ஆண்டுகள் நீதிமன்றங்களில் வாதாடப்பட்டது. நீதிமன்றங்கள் மாற்றப்பட்டன. இறுதியாக, சில வாரங்களுக்கு முன், மனசாட்சி, நேர்மை, துணிவு இவை ஒருங்கிணைந்த ஒரு நீதிபதி, இவ்வழக்கின் தீர்ப்பை வழங்கினார். தீர்ப்பு வெளியானதும், வேறுபட்ட கருத்துக்களும், உணர்வுப்பூர்வமான கொந்தளிப்புகளும், வன்முறைகளும் தொடர்ந்தன. தற்போது, கொந்தளிப்புகள் அடங்கி, மேல்முறையீடு என்ற பெயரில், இந்த வழக்கு மீண்டும் நீதிமன்றங்களில் வலம் வருகிறது.
சட்டம், ஒழுங்கு, நீதி எதுவும் தன்னைத் தொடமுடியாது என்று வாழ்ந்துவரும் பல அரசியல் தலைவர்கள், பெரும் செல்வந்தர்கள், வன்முறையாளர்கள் அனைவருமே இந்த வழக்கில் தரப்பட்ட தீர்ப்பினால் ஓர் இரவாகிலும் தங்கள் தூக்கத்தை இழந்திருப்பர் என்பது என் கணிப்பு. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற உணர்வு இந்தத் தீர்ப்பினால் ஒரு சில நாட்களாகிலும் நமக்கு உறுதியானது.
உலகின் முடிவு, இறைவனின் நீதிமன்றம், தீர்ப்பு என்ற உண்மைகளை, மத்தேயு நற்செய்தியில் இயேசு கூறிய வலை உவமை வழியே இந்த விவிலியத் தேடலில் சிந்திக்க வந்திருக்கிறோம். இத்தருணத்தில், இவ்வுலக வழக்குகள், அங்கு வழங்கப்படும் தீர்ப்புகள், நாம் வாழ்வின் இறுதியில் சந்திக்கப் போகும் இறுதித் தீர்ப்பு ஆகியவற்றைச் சிந்திக்க இன்றையத் தேடலைப் பயன்படுத்துவோம்.

உலகின் அனைத்து நாடுகளிலும் ஆயிரக்கணக்கான வழக்குகள் ஒவ்வொரு நாளும் நடைபெற்றவண்ணம் உள்ளன. அவற்றின் தீர்ப்புகள் வெளியாகும்போது, ஏற்பு, மறுப்பு என்ற மாறுபட்ட உணர்வுகள் எழுகின்றன. உலக நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளில் எப்போதும் நியாயமான, நீதியான, உண்மையான தீர்ப்புகள் வெளியாவதில்லை. இவ்வேளைகளில், பாதிக்கப்பட்டவர்கள், அதிலும் குறிப்பாக வறியோர், நீதிமன்ற வாசலில் நின்று, இறைவனிடம் முறையிடுவதை கேட்டிருக்கிறோம், பார்த்திருக்கிறோம். அநீதிகளால் நாம் பாதிக்கப்படும்போது நாமும் இத்தகைய எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளோம். இவ்வுலகில் கிடைக்காத நீதி, இறைவன் அரசில், அவரது நீதி மன்றத்தில் கிடைக்கும் என்ற நம்பிக்கை, பலரை வாழவைத்து வருகிறது.

ஈரான் நாட்டில், ரெஹானே ஜப்பாரி என்ற 19 வயது இளம்பெண் மீது, கொலைக் குற்றம் சுமத்தப்பட்டு, கடந்த 7 ஆண்டுகள், கேள்விக்குரிய முறையில் வழக்கு ஒன்று நடத்தப்பட்டது. உலக நாடுகளும், மனித உரிமை அமைப்புக்களும் வன்மையாகக் கண்டனம் தெரிவித்தாலும், ஈரான் அரசு, அக்டோபர் 25ம் தேதியன்று இளம்பெண் ரெஹானே அவர்களைத் தூக்கிலிட்டது. தன் மரணம் உறுதி என்பதை அறிந்த இளம்பெண் ரெஹானே அவர்கள், தன் தாய்க்கு அனுப்பியிருந்த ஓர் ஒலிவடிவச் செய்தியை சென்ற ஞாயிறு சிந்தனையில் கேட்டோம். அச்செய்தியின் இறுதியில் ரெஹானே அவர்கள் கூறியுள்ள வார்த்தைகள் இன்றையத் தேடலோடு தொடர்புடையனவாகத் தெரிகின்றன.

தானும், தன் தாயும் மறு உலகில் கடவுளின் நீதிமன்றத்தில் செய்யக்கூடிய, செய்ய வேண்டிய ஒரு பணியைப் பற்றி இளம்பெண் ரெஹானே இவ்விதம் கூறியுள்ளார்:
இந்த உலகம் நான் வாழ்வதை விரும்பவில்லை. நான் மரணத்தைத் தழுவுகிறேன். கடவுளின் நீதிமன்றத்தில் நான் அந்த காவல் துறையினர் மீது வழக்குத் தொடுப்பேன். காவல் துறையினர், நீதிபதி, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல்லாரும் பதில் சொல்லியாக வேண்டும்... குற்றம் இழைத்தவர்கள், அதற்கு உடந்தையாக இருந்தவர்கள், நீதியை நிலைநிறுத்தாமல் வேடிக்கை பார்த்தவர்கள் என்று எல்லாருமே கடவுளிடத்திலே பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள்.
இளகிய மனம் படைத்த என்னுடைய தாயே, கடவுளின் நீதிமன்றத்தில் நீயும் நானும் வாதிகளாக இருப்போம், நம்மீது குற்றம்சாட்டியவர்கள் எல்லாம் பதில் சொல்லக் கடமைப்பட்ட பிரதிவாதிகளாக இருப்பார்கள் என்று இளம்பெண் ரெஹானே அவர்கள் கூறியுள்ளது, நம் உள்ளத்தில் காயங்களை உருவாக்கினாலும், அதேவேளை, நம்பிக்கையையும் வளர்க்கிறது.

கடந்த 3 ஆண்டுகளாக சிரியா நாட்டில் தொடர்ந்துவரும் உள்நாட்டுப் போரினால், குழந்தைகள் படும் வேதனைகள், மனசாட்சியுள்ள அனைவரையும் பாதித்து வருகின்றன. இக்குழந்தைகளில் ஒரு சிறுவனைப் பற்றி ஊடகங்களில் வெளியான ஒரு செய்தி மனதை இரணமாக்குகிறது. ஏதோ ஒரு தாக்குதலில் காயப்பட்டு, இரத்தம் வழியும் முகத்தோடு ஒரு கட்டில் மீது கிடக்கும் அச்சிறுவன், "நான் இங்கு நடப்பதையெல்லாம் கடவுளிடம் சொல்லப் போகிறேன்" என்று சொல்லிவிட்டு இறந்ததாக ஊடகங்கள் கூறின. இந்நிகழ்ச்சி உண்மையிலேயே நடந்ததா என்ற விவாதங்கள் எழுந்தாலும், அச்சிறுவனின் கூற்று, உலகின் கவனத்தை கட்டியிழுத்தது; சங்கடமான உணர்வுகளைத் தந்தது என்பது உண்மை.

இவ்வுலக வாழ்வு கல்லறையோடு முடிவதில்லை; மறு உலகில் தொடரும் வாழ்வில் நமது இவ்வுலக வாழ்வுக்கு ஏற்ற விளைவுகளைச் சந்திப்போம் என்ற எண்ணங்களை, இஞ்ஞாயிறன்று நாம் சிறப்பித்த கல்லறைத் திருநாள் நமக்கு நினைவுறுத்தியது. இத்தருணத்தில், உலக முடிவில் நிகழப்போகும் தீர்ப்புகள் குறித்து இந்த விவிலியத் தேடலில் நாம் சிந்திக்க வந்திருப்பது பொருத்தமாகத் தெரிகிறது.
உலக முடிவைப் பற்றி இயேசு கூறிய வலை உவமை, மத்தேயு நற்செய்தி, 13ம் பிரிவில் காணப்படுகிறது. இப்பிரிவில் நற்செய்தியாளர் மத்தேயு கூறியுள்ள 7 உவமைகளில் இறுதி உவமை இதுதான். பொதுவாக, இயேசு கூறும் உவமைகளில், அதன் உட்பொருளை நேரடியாக அவர் விளக்கிச் சொல்வதில்லை. இவ்வுவமையிலோ, இயேசு உவமையைத் தொடர்ந்து, அதன் பொருளையும் விளக்குகிறார். இவ்வுவமைக்குச் செவிமடுப்போம்:
மத்தேயு நற்செய்தி 13, 47-50
இயேசு தன் சீடர்களிடம் கூறியது: விண்ணரசு கடலில் வீசப்பட்டு எல்லா வகையான மீன்களையும் வாரிக் கொண்டுவரும் வலைக்கு ஒப்பாகும். வலை நிறைந்ததும் அதை இழுத்துக்கொண்டு போய், கரையில் உட்கார்ந்து, நல்லவற்றைக் கூடைகளில் சேர்த்து வைப்பர்; கெட்டவற்றை வெளியே எறிவர். இவ்வாறே உலக முடிவிலும் நிகழும். வானதூதர் சென்று நேர்மையாளரிடையேயிருந்து தீயோரைப் பிரிப்பர்; பின் அவர்களைத் தீச்சூளையில் தள்ளுவர். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்.

இயேசு தன் சீடர்களோடு தனித்திருந்த வேளையில் இவ்வுவமையைச் சொல்கிறார். எனவே, இயேசு இவ்வுவமையில் விவரித்தக் காட்சியை சீடர்களால் முழுமையாகக் கற்பனை செய்து பார்த்திருக்க முடியும்.
கலிலேயக் கடலில் மீன்பிடித்து வாழ்ந்த சீடர்கள் இருவகை வலைகளைப் பயன்படுத்தினர். ஒன்று சிறிய பரப்பளவு கொண்ட வலை. கடலின் குறிப்பிட்டப் பகுதிகளில் எவ்வகை மீன்கள் இருக்கும் என்பதை உணர்ந்து, அப்பகுதிகளுக்குச் சென்று பயன்படுத்தக்கூடியது இவ்வகை சிறிய வலைகள். இவ்வலைகளில் பிடிபடுவது பெரும்பாலும் மீனவர்கள் விரும்பித் தேர்ந்த மீன்களே.
இயேசு இவ்வுவமையில் கூறியுள்ள வலை, "எல்லா வகையான மீன்களையும் வாரிக்கொண்டு வரும் வலை". மீன்கள் மட்டுமல்ல, கடலில் காணப்படும் பல கழிவுப் பொருள்கள், கடல் பாசி என்று இன்னும் தேவையற்ற அனைத்தையும் வாரிக் கொணரும் வலை இது. இவ்விதம் அனைத்தையும் அள்ளிக் கொணரும் வலையை கரைக்கு இழுத்துவந்து, மீனவர்கள் அமர்ந்து, தங்களுக்குத் தேவையானவற்றைக் கூடையில் சேர்ப்பதும், தேவையற்றவைகளை மீண்டும் கடலில் எறிவதும் வழக்கம்.

இயேசு கூறிய உவமைகளில் ஒவ்வொரு அம்சத்திற்கும் நாம் பொருள் தரும்போது, உவமையின் மையக் கருத்தை இழக்கும் ஆபத்து உள்ளது. எடுத்துக்காட்டாக, இவ்வுவமையில், கடலை இவ்வுலகம் என்றும், வலையை விண்ணரசு என்றும், மீன்களை மனிதர்கள் என்றும், மீன்பிடிப்போரை வானத்தூதர்கள் என்றும் நேருக்கு நேர் ஒப்புமைப்படுத்திக் கொண்டிருந்தால், மையக் கருத்திலிருந்து நம்மைத் திசை திருப்பும் கேள்விகள் அதிகம் எழும்.
விண்ணரசில் அனைவரும் கூட்டிச் சேர்க்கப்படுவர்; அங்கு, தீர்ப்புகள் வழங்கப்பட்டு, அவரவருக்குரிய முடிவை அடைவர் என்பதே, இயேசு இவ்வுவமை வழியே சொல்லவந்த மையக் கருத்து. உலக முடிவு, தீர்ப்பு என்ற எண்ணங்கள் நமக்குள் சங்கடங்களை எழுப்புகின்றன. அதுவும், இஞ்ஞாயிறன்று இறந்தோர் அனைவரின் நினைவு நாளைக் கொண்டாடியபோதும், அந்நாளன்று கல்லறைகளுக்குச் சென்று நம் வணக்கத்தையும், செபங்களையும் எழுப்பியபோதும், வாழ்வின் ஒரு சில உண்மைகளை, இறுதி உண்மைகளை நாம் உணர்ந்திருப்போம்.

மனித வாழ்வு இவ்வுலகோடு முடிவடைவதில்லை, மறு உலகில் நிரந்தரமாகத் தொடரும். அந்த நிரந்தர வாழ்வில் பங்கேற்க வரைமுறைகள் உண்டு. அந்த வரைமுறைகளுக்கு ஏற்ப வாழ்ந்தால், நிரந்தர வாழ்வில் மகிழ்வுடன் இணைவோம். இல்லையேல், தீச்சூளையில், அழுகை, அங்கலாய்ப்புடன் வாழ வேண்டியிருக்கும். 'அனைத்தையும் வாரிக் கொண்டு வரும் வலை' உவமை வழியே இக்கருத்துக்களை இயேசு நமக்கு சொல்லித் தந்ததற்காக நன்றி கூறுவோம்.








All the contents on this site are copyrighted ©.