2014-11-04 15:08:58

பாரம்பரியத் திருமணங்கள் குறித்த பல்சமயக் கருத்தரங்கில் திருத்தந்தை


நவ.04,2014. “தாழ்மையாக இருப்பது, பிறரின் சுமைகளைப் பகிர்ந்து கொள்வதற்கு நமக்கு உதவுகின்றது”என்ற வார்த்தைகளை இச்செவ்வாயன்று தனது டுவிட்டர் செய்தியாக வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், குடும்பம் குறித்த உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றம் நிறைவடைந்துள்ள இவ்வேளையில், பாரம்பரியத் திருமணங்கள் குறித்த பல்சமயக் கருத்தரங்கு ஒன்றை இம்மாதத்தில் தொடங்கி வைக்கவுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருப்பீட விசுவாசக் கோட்பாட்டுப் பேராயம், இம்மாதம் 17 முதல் 19 வரை நடத்தும் இக்கருத்தரங்கில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தொடக்கவுரையாற்றி முதல் அமர்விலும் கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மூன்று நாள் கருத்தரங்கில், 23 நாடுகளிலிருந்து முப்பதுக்கும் மேற்பட்ட சொற்பொழிவாளர்கள் கலந்துகொண்டு உரையாற்றுவார்கள். மேலும், இதில் பல்வேறு கிறிஸ்தவ சபைகளின் பிரதிநிதிகள், இன்னும், யூதம், இஸ்லாம், இந்து, ஜைனம், தாவோயிசம், சீக்கியம் ஆகிய மதங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொள்வார்கள்.
“ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நிலவும் உறவு” என்ற தலைப்பில் இக்கருத்தரங்கு நடைபெறவிருக்கிறது. செழுமையான ஒரு மனித சமுதாயத்தை வளர்ப்பதற்காக, திருமணம் மற்றும் குடும்ப வாழ்வுக்கு ஆதரவளித்து அவற்றை உயிரூட்டம் பெறச் செய்யும் வகையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான உறவின் அழகை ஆராய்ந்து அதைப் புதுப்பிப்பதற்குப் பரிந்துரைகள் இக்கருத்தரங்கில் வழங்கப்படும்.
திருப்பீட விசுவாசக் கோட்பாட்டுப் பேராயத்துடன், திருப்பீட குடும்ப அவை, பல்சமய உரையாடல் அவை, கிறிஸ்தவ ஒன்றிப்பு அவை ஆகிய துறைகளும் சேர்ந்து இக்கருத்தரங்கை நடத்தவுள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.