2014-11-03 15:05:36

வாரம் ஓர் அலசல் – கடவுளை ஓரங்கட்டும் அழிவின் தொழிற்சாலை


நவ.03,2014 RealAudioMP3 . அன்பு நேயர்களே, ஒவ்வொரு நாளும் நாம் தொலைக்காட்சியில் கேட்கும் செய்திகளே, கடவுளை ஓரங்கட்டும் அழிவின் தொழிற்சாலைகள் எவை என்பதை நமக்குப் புரிய வைத்துவிடும். இத்திங்கள் காலையில் தினத்தாள்களைப் புரட்டினவுடன் வாகா எல்லைத் தற்கொலைப்படை தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை அறுபது ஆக அதிகரித்துள்ள நிலையில், சர்வதேச எல்லையில் வர்த்தகம் மூன்று நாட்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது என்ற தடித்த எழுத்துக்களை வாசித்தோம். இந்திய - பாகிஸ்தான் எல்லையில் சர்வதேச எல்லைக்கு 500 மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள வாகாவில் இஞ்ஞாயிறு மாலை கொடி இறக்கும் நிகழ்ச்சி நடந்த சிறிது நேரத்தில் சக்திவாய்ந்த குண்டுவெடித்தது. கொடி இறக்கும் நிகழ்ச்சியைக் கண்டுகளிக்க வந்த பலர் இதில் பலியாகியுள்ளதோடு நூற்றுக்கணக்கானோர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்செவ்வாய்கிழமையன்று உலக இஸ்லாமியர்கள் மொகரம் திருநாளைச் சிறப்பிக்கவுள்ள நிலையில் வாகா எல்லைப் பகுதியில் இப்படியொரு பதற்றமான சூழல்... மேலும், நைஜீரியாவில் கடந்த 2009ம் ஆண்டிலிருந்து வன்முறையில் இறங்கியுள்ள போகோ ஹராம் இஸ்லாம் தீவிரவாத அமைப்பு கடந்த வெள்ளிக்கிழமையன்று வெளியிட்டுள்ள ஒரு காணொளிச் செய்தி நமக்குச் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போகோ ஹராம் அமைப்புடன் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த அமைப்பினர் கடத்தி வைத்திருக்கும் 219 பள்ளி மாணவிகளையும் விடுவிப்பதற்கு ஒப்புக்கொண்டுள்ளதாகவும் நைஜீரிய இராணுவம் கடந்த 17ம் தேதி தெரிவித்தது. ஆனால் போகோ ஹராம் அமைப்பின் தலைவர் அபுபக்கர் ஷேகாவு(Abubakar Shekau) இதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார். எங்களுடன் போர் நிறுத்த ஒப்பந்தமும், மாணவிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தமும் மேற்கொண்டுள்ளதாக அரசு கூறுவது முற்றிலும் பொய். நாங்கள் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. நடத்தவும் மாட்டோம். கடத்தப்பட்ட அனைத்து மாணவிகளும் இஸ்லாம் மதத்துக்கு மாறிவிட்டனர். அவர்கள் அனைவருக்கும் திருமணமும் செய்து வைக்கப்பட்டுவிட்டது என்று அவர் அறிவித்துள்ளார். அதோடு, அவ்வமைப்பு அதேநாளில் நடத்திய தொடர் வெடிகுண்டுத் தாக்குதலில் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். Human Rights Watch எனப்படும் மனித உரிமைகள் கழகம் கடந்த வாரத்தில் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், போகோ ஹராம் அமைப்பினரிடம் ஐந்நூறுக்கு மேற்பட்ட பெண்களும் வளர்இளம் சிறுமிகளும் உள்ளனர், இவர்களின் முகாம்களில் கட்டாயத் திருமணம் நடைபெறுவது பொதுவான வழக்கம் எனக் கூறப்பட்டுள்ளது.
ஈரானின் மனச்சாட்சியைத் தட்டி எழுப்பும் ரெய்ஹானே ஜபாரி பற்றிய செய்தியை நம் ஞாயிறு சிந்தனை நிகழ்ச்சியிலும் கேட்டோம். அனைத்துலக அளவில் எழுந்த கடுமையான அழுத்தங்களைப் புறக்கணித்துவிட்டு, ஈரான் அரசு 26 வயது ரெய்ஹானேவைத் தூக்கிலிட்டுள்ளது(அக்.25,2014). ஈரான் அரசுத்தலைவர் ஹசான் ருஹானி(Hassan Rouhani) அவர்கள், ''மனித உரிமைகளை நிலைநாட்டுவேன் என்று கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை முற்றிலுமாக மறந்துவிட்டார். ஈரானில் 2013ம் ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து 852 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டு உள்ளது என ஐ.நா. குறை கூறியுள்ளது. மேலும், கடலில் எல்லை தாண்டி வந்தார்கள் என்று கைது செய்யப்படும் தமிழக மீனவர்கள்மீது போதை மருந்து வைத்திருந்தார்கள், ஆயுதம் வைத்திருந்தார்கள் என்று வழக்குப் போடுவது இலங்கை அரசின் வழக்கம். அப்படிச் சிக்கிய ஐந்து மீனவர்களுக்கு, தற்போது மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்றும் ஊடகங்களில் வாசித்தோம்.
அன்பு நேயர்களே, தட்டிக்கேட்க யாரும் இல்லாவிட்டால் வெட்டிப் போடுவார்கள் என்ற நிலையைத்தான் இன்று பல இடங்களில் காண முடிகின்றது. இன்று உலகில் இடம்பெறும் அழிவுகள், அதற்குப் பலியாகுவோர் பற்றி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நவம்பர் முதல் நாள் மாலையில் உரோம் வெரானோ கல்லறைத் தோட்டத்தில் நிறைவேற்றிய திருப்பலியில் கூறினார்.
RealAudioMP3 நிலத்தையும் கடலையும் அழிக்க அதிகாரம் பெற்றிருந்த வானதூதர்களிடம் மற்றொரு வானதூதர், நிலத்தையோ, கடலையோ, மரத்தையோ அழிக்க வேண்டாமெனக் கூறினார். மனிதர்கள் இப்பூமியை அழிப்பதில் வானதூதர்களைவிட திறமைமிக்கவர்களாக உள்ளனர். மனிதர்களாகிய நாம் படைப்பையும், மனித வாழ்வையும், கலாச்சாரங்களையும், நல்ல விழுமியங்களையும், நம்பிக்கையையும் அழித்து வருகிறோம். இந்தக் கல்லறைகள் உள்ள சான் லொரென்சோ பகுதி 71 ஆண்டுகளுக்கு முன்னர் இரண்டாம் உலகப் போரில் குண்டுவீச்சால் அடைந்த சேதங்களைப் படங்களில் காண முடிகின்றது. மனிதர் அனைத்துக்கும் தானே முதலாளியாகி, தானே கடவுள், தானே அரசன் என்று நம்புகின்றனர். தொடர்ந்து நடக்கும் போர்கள் வாழ்வை விதைப்பதற்கு உதவாமல், அழிவுக்கு உதவுகின்றன. இவை அழிவின் தொழிற்சாலைகள். இந்த வாழ்வுமுறையில் சிறாரும், வயதானவர்களும், வேலையில்லாமல் இருக்கும் இளையோரும் புறக்கணிக்கப்படுகின்றனர். இந்த அழிவுகள், தூக்கியெறியும் கலாச்சாரத்தின் விளைவுகள். இதில் பாதிக்கப்படும் எண்ணற்ற மக்கள், எங்களுக்கு மீட்பு வேண்டும், அமைதி வேண்டும், உணவு வேண்டும், மாண்புடன்கூடிய வேலை வேண்டும் என கடவுள் முன் கெஞ்சுகின்றனர்....
இவ்வாறு அழிவின் தொழிற்சாலைகளால் துன்புறும் மக்களின் நிலையை விவரித்து, இதில் ஈடுபடுவோர் தங்கள் வாழ்விலிருந்து கடவுளை ஓரங்கட்டி இப்பூமியை அழிக்கின்றனர் எனச் சாடினார் திருத்தந்தை.
RealAudioMP3 அன்பர்களே, இரண்டு உலகப் போர்கள், வியட்னாம் போர், ருவாண்டா இனப்படுகொலைப் போர், வளைக்குடாச் சண்டை, தற்போது ஈராக்கிலும் சிரியாவிலும், ஆப்ரிக்க நாடுகளிலும் நடந்துவரும் சண்டை... இவை பற்றி எண்ணிப் பார்ப்போமே. எடுத்துக்காட்டாக, முதல் உலகப் போரில் 2 இலட்சத்து 60 ஆயிரம் அப்பாவி மக்கள் உட்பட, 13 இலட்சம் பேர் உயிரிழந்தனர். மேலும், அச்சமயத்தில் வேதிய ஆயுதங்களால் கணக்கிட முடியாத மண்அரிப்புகள், காடுகள் அழிவு, தண்ணீர் மாசடைந்தது ... இப்படி பல அழிவுகள். பீரங்கிகள் உமிழ்ந்த வேதியப் பொருள்களால் பாதிக்கப்பட்டதால், போர் முடிந்து பல ஆண்டுகள் கழித்தும் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தனர். மனிதரின் பேராசை, பணவெறி, பதவி வெறி, இனவெறி, மதவெறி.... இவற்றில் மனிதரே மனிதரைக் கொலை செய்யும் அவலம். இவை தவிர, மனிதரே காரணமாகும் பருவநிலை மாற்றங்கள் ஏற்படுத்தும் அழிவுகள். புவி வெப்பமடைந்து வருவதற்கு மனிதச் செயலே முக்கிய காரணம் என நாற்பது பக்க அறிக்கை ஒன்றை இஞ்ஞாயிறன்று வெளியிட்டுள்ளது ஐ.நா. நிபுணர் குழு ஒன்று. இந்த உலகத்தை மேலும் ஆபத்தான வெப்பநிலை மாற்றத்திலிருந்து காப்பாற்ற வேண்டுமானால், 2050ம் ஆண்டுக்குள், கரிம வெளியேற்றம் இல்லாத தயாரிப்பு முறைகளிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்பட வேண்டுமென இக்குழு வலியுறுத்தியுள்ளது. வெப்பவாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நிவர்த்தி செய்ய முடியாத பாதிப்புகளை உலக நாடுகள் சந்திக்க நேரிடும் எனவும் அக்குழு எச்சரித்துள்ளது. பருவநிலை மாற்றங்களுக்கு அதிகம் பங்களிக்காத ஏழைகளே இதனால் பெரிதும் பாதிக்கப்படுகின்றவர்கள் என்று பான் கி மூன் அவர்களும் தெரிவித்தார்.
இந்நிலையில், போர்களிலும், ஆயுதம் ஏந்திய மோதல்களிலும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் அனைத்துலக நாள் ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 6ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. போர்களால் மனித உயிர்கள் மட்டுமன்றி, சுற்றுச்சூழலும் சேதமடைகின்றது. மத்திய மற்றும் கிழக்கு ஆப்ரிக்காவில் கனிம வளங்களும், மரங்களும், வனவிலங்களும், கட்டைக் கரியும், போதைப்பொருள்களும் சட்டத்துக்குப் புறம்பே வணிகம் செய்யப்படுவது, ஆயுதம் ஏந்திய குழுக்களுக்கும், குற்றக்கும்பல் வலையமைப்புக்கும் தவறான வழியில் நிதியுதவி செய்வதற்கே. எடுத்துக்காட்டாக, சொமாலியாவில் தீய்ந்து கரியான மரக்கட்டை வணிகத்தால் புரட்சியாளர்கள் மற்றும் பயங்கரவாதக் குழுக்களுக்கு ஆண்டுக்கு 38 கோடியே 40 இலட்சம் டாலர் வரை வருவாய்க் கிடைக்கின்றது. ஒரு காலத்தில் 90 விழுக்காட்டுப் பகுதியை அடர்ந்த காடுகளாகக் கொண்டிருந்த சியெரா லியோன் நாட்டில் உள்நாட்டுச் சண்டைக்குப் பிறகு தற்போது 4 விழுக்காட்டுக்குக் குறைவான காடுகளே உள்ளன.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவுறுத்தியுள்ளதுபோன்று, தங்கள் வாழ்விலிருந்து கடவுளை ஒதுக்குபவர்களின் செயல்கள் வன்முறை நிறைந்ததாய், பிற மனிதர்களின் உணர்வுகளையும் மாண்பையும் மதிக்காததாய் ... இப்படி எதிர்மறைகள் கொண்டதாய், அழிவுகளின் பாதையாகத்தான் இருக்கும். சீன ஞானி சுவாங்த்ஸீ அவர்கள் சொல்வார்- காட்டில் இருட்டில் பாதையைத் தவறவிட்டவர், வழிதெரியாமல் தவிப்பவர் மின்னல் அடிக்கிற போது பாதையைப் பிடித்துக் கொள்கிறார். முட்டாள்தான் பாதையை விட்டுவிட்டு மின்னலைப் பார்த்து, கண்களைப் பறிகொடுக்கிறார் என்று. அன்பு நேயர்களே, நாமும் வாழ்க்கையில் செல்லும் திசைதெரியாமல் தத்தளிக்கும்போது கடவுள் என்ற ஒளியை நாடுவோம். ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொள்ளும் ஒவ்வொரு வீரரும் அவரவருக்கு நிர்ணயிக்கப்பட்ட பாதையில் ஓடினால்தான் வெற்றிபெற முடியும். அடுத்தவர் பாதையில் நுழைந்தால் அவர் வெளியேற்றப்படுவார். அதேபோல் நாம் ஒவ்வொருவரும் நம் இயல்புக்கேற்ப பாதையைத் தேர்ந்துகொண்டு இறைவனை நோக்கி ஓடுவோம். ஏனெனில் நாம் இறைவனை நோக்கி ஓரடி எடுத்து வைத்தால் அவர் நம்மை நோக்கி பத்தடி எடுத்து வைப்பார் என ஸ்ரீராமகிருஷ்ணர் சொல்லியிருக்கிறார். நம் வாழ்வில் கடவுளை மையப்படுத்துவோம். அப்போது அழிவின் செயல்கள் பக்கம் நாம் செல்ல மாட்டோம்.







All the contents on this site are copyrighted ©.