2014-11-03 15:03:10

புனிதரும் மனிதரே : இறையழைத்தலுக்கு அரண்மனை சுகம் ஒரு தடையல்ல (St. Charles Borromeo)


வட இத்தாலியில் பிரபுக்கள் பரம்பரையில் 1538ம் ஆண்டு பிறந்தவர் சார்லஸ் பொரோமேயோ. இத்தாலியிலுள்ள Lago Maggiore என்ற பெரிய ஏரியில் ஒருமுறை பயணம் செய்தாலே, இவரது குடும்பத்தின் செல்வவளத்தை அறிந்து கொள்ளலாம். சார்லஸ் பொரோமேயோ அவர்கள், குடியுரிமைச்சட்டம் மற்றும் திருஅவைச் சட்டம் பயின்றவர். இவரது தாய்மாமாவாகிய கர்தினால் ஜொவான்னி ஆஞ்சலோ மெதிச்சி அவர்கள், 1559ம் ஆண்டில்(டிச.25) திருத்தந்தை நான்காம் பத்திநாதராக, பணியைத் தொடங்கினார். அதற்கு அடுத்த ஆண்டின் தொடக்கத்திலேயே சார்லசை உரோமைக்கு அழைத்து கர்தினாலாக உயர்த்தி திருப்பீடச் செயலராக்கினார் அவர். அதோடு மிலான் உயர்மறைமாவட்ட நிர்வாகியாகவும் ஆக்கினார். இதற்கிடையே, 1562ம் ஆண்டு (நவம்பர் 19) சார்லசின் மூத்த சகோதரர் பெதரிக்கோ திடீரென இறந்தார். பெதரிக்கோவுக்குக் குழந்தைகளும் இல்லை. இதனால் சார்லசின் குடும்பமும், திருத்தந்தையும் இவரை திருஅவைப் பணிகளைக் கைவிட்டு திருமணம் செய்து குடும்பச் சொத்தை நிர்வகிக்குமாறு கட்டாயப்படுத்தினர். ஆனால், தான் குருவாக விரும்புவதாக உறுதியாகச் சொல்லிவிட்டார் சார்லஸ். பின்னர் குருத்துவப் பயிற்சியை முடித்து குருவாக அருள்பொழிவு செய்யப்பட்டார். 1563ல் மிலான் பேராயராகத் திருப்பொழிவு செய்யப்பட்ட இவர், குருக்களின் தூய வாழ்வில் முதலில் கவனம் செலுத்தினார். நன்னெறி வாழ்வில் முறைதவறி நடந்த குருக்கள் மற்றும் பொதுநிலையினரின் வாழ்வைச் சரிப்படுத்தினார். வீட்டில் இருந்தபடியே மூன்றாம் சபைபோல் எளிய வாழ்வு வாழ்கிறோம் என்று சொல்லிக்கொண்டு சொத்து சேர்ப்பதில் தீவிரமாக இருந்த குருக்களை நெறிப்படுத்தினார். இதனால் எதிரிகளால் சுடப்பட்டார், ஆயினும் உயிர் பிழைத்தார் பேராயர் சார்லஸ். மிலானில் தொற்றுநோய் பரவியபோது, காலில் ஆணிகுத்தி இரத்தம் வடிந்ததையும் பொருட்படுத்தாது சிலுவையைத் தூக்கிக்கொண்டு வீதிகளில் நடந்தார். அச்சமயங்களில் தினமும் ஏறக்குறைய எழுபதாயிரம் மக்களுக்கு உணவளித்தார். ஆலயங்களில் பக்தி மிகுந்த பாடல்களை அறிமுப்படுத்தினார். ஆலயங்களில் தேவையற்ற நடைமுறைகளை ஒழித்தார். பேராயர் சார்லஸ் செய்த சீர்திருத்தப் பணிகளுக்கென திருத்தந்தை உட்பட பலரிடமிருந்து எதிர்ப்பைச் சந்தித்தார். பலமுறை கூட்டப்பட்டும் பல்வேறு காரணங்களால் தடைப்பட்ட திரிதெந்து பொதுச்சங்கத்தைக் கூட்டி பல முக்கிய தீர்மானங்கள் எடுப்பதற்குக் காரணமானவர்களில் இவரும் ஒருவர். பேராயர் சார்லஸ் பொரோமேயோ அவர்கள், 1584ம் ஆண்டு நவம்பர் 4ம் தேதி தனது 46வது வயதில் காலமானார். கத்தோலிக்கத் திருஅவையில் குழப்பம் நிறைந்திருந்த 16ம் நூற்றாண்டில் பெரும் சீர்திருத்தங்களைக் கொண்டுவந்த லொயோலா இஞ்ஞாசியார், பிலிப் நேரி உட்பட்ட புனிதர்களில் புனித சார்லஸ் பொரோமேயோ அவர்களும் ஒருவர். இவர் கற்றலுக்கும் கலைகளுக்கும் பாதுகாவலராக நோக்கப்படுகிறார். இவரின் விழா நவம்பர் 04.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.