2014-11-03 15:53:27

திருத்தந்தை : எல்லைகளற்ற ஒரு வாழ்வை நோக்கிச் சென்றுகொண்டிருப்பவர் மனிதர்


நவ.03,2014. மரணம் என்பது மனித வாழ்வின் கடைசி வார்த்தையல்ல, ஏனெனில் இறைவனில் தன் மூலத்தையும் அதன் நிறைவையும் கொண்டுள்ள, எல்லைகளற்ற வாழ்வை நோக்கிச் சென்றுகொண்டிருப்பவர் மனிதர் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அனைத்து ஆன்மாக்களின் நினைவைச் சிறப்பித்த இஞ்ஞாயிறன்று வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எவராலும் நினைவுகூரப்படாத ஆன்மாக்கள், போரில் பலியானோர், பசியாலும் சித்ரவதைகளாலும் இறந்தோர் ஆகியோரை நினைவுகூர்ந்து அவர்களுக்காகச் செபிப்போம் என அழைப்புவிடுத்தார்.
இம்மாதம் முதல் தேதி சிறப்பிக்கப்பட்ட அனைத்து புனிதர்கள் விழாவும், இரண்டாம் தேதியின் அனைத்து ஆன்மாக்கள் நினைவு நாளும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையவை என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனிதர்களின் பரிந்துரை குறித்து திருஅவை மகிழும் அதேவேளை, தங்கள் உறவுகளையும் நண்பர்களையும் இழந்துள்ள விசுவாசிகளின் துன்பங்களிலும் பங்கெடுக்கிறது என்றார்.
இறுதி நாளில் உயிர்த்தெழுவதற்காக இறந்தோர் அனைவரும் காத்திருக்கும் இளைப்பாறுதலின் இடமாக கல்லறைத் தோட்டத்தை நாம் நோக்குகிறோம் எனவும் உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறந்து காத்திருப்போர்களுக்காக நாம் செபிப்பதே நாம் அவர்களுக்கு வழங்கும் ஆன்மீக உதவியாகும் என்றார்.
இறந்தோரை நினைவுகூர்வதும், அவர்களின் கல்லறைகளைப் பராமரிப்பதும், அவர்களுக்காகச் செபிப்பதும், இறப்பு என்பது முடிவல்ல, அதையும் தாண்டிய எல்லைகளற்ற ஒரு வாழ்வு உள்ளது என்ற நம் நம்பிக்கையின் வெளிப்பாடாகும் என மேலும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.