2014-11-03 15:53:51

ஏழைகள் மற்றும் ஒதுக்கப்பட்டோருக்கு, அரசுகள் முக்கியத்துவம் கொடுக்க கர்தினால் கிரேசியஸ் அழைப்பு


நவ.03,2014. மகராஷ்டிராவில் புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் பா.ஜ.க. ஆட்சி, அம்மாநிலத்தில் வாழும் பல்வேறு இன மக்களிடையே அமைதி நிறைந்த இணக்கவாழ்வை ஊக்குவிப்பதோடு, விவசாயிகளின் தற்கொலைகளையும் தடுக்க போதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும் என அழைப்புவிடுத்துள்ளார் மும்பை பேராயர் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ்.
புதிய மாநில அரசிற்கு தன் வாழ்த்துக்களை அனுப்பியுள்ள செய்தியில், ஏழைகள், சிறுபான்மையினோர், வறுமையில் வாடுவோர் மற்றும் முதியோருக்கு இந்த அரசு முக்கியத்துவம் கொடுத்து திட்டங்களை வகுக்க வேண்டும் என்ற விண்ணப்பத்தை வைத்துள்ளார் கர்தினால் கிரேசியஸ்.
பல்வேறு மதநம்பிக்கையாளர்களைக்கொண்ட நாட்டில், ஒன்றிப்பு, அன்பு, உண்மை, நீதி மற்றும் அமைதியை ஊக்குவிக்கும் நோக்கில் புதிய அரசின் நிர்வாகிகள் மதங்களிடையேயான பேச்சுவார்த்தைகளின் கலாச்சாரத்தை வளர்க்கவேண்டும் எனவும் விண்ணப்பித்துள்ளார் மும்பை கர்தினால்.
விவசாயிகளின் தற்கொலைகள் மகராஷ்டிர மாநிலத்தில் அதிகரித்துவருவது குறித்து இந்தியத் தலத்திருஅவை ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக உரைத்த கர்தினால் கிரேசியஸ், இதில் அரசு முக்கிய கவனம் செலுத்த வேண்டும் என்பதுடன், தலத்திருஅவையும் கல்வி மற்றும் நல ஆதரவுப்பணிகள் மூலம் தன் சமூகப் பங்களிப்பை ஆற்றிவருவதாகவும் கூறினார்.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.