2014-11-01 14:47:01

புலம்பெயர்வோர் மீட்புப்பணிகளுக்கு வழங்கிவந்த ஒத்துழைப்பைக் கைவிடும் பிரிட்டனுக்கு ஆயர் எதிர்ப்பு


நவ.01,2014. மத்திய தரைக்கடல் வழியாக பிற நாடுகளிலிருந்து ஐரோப்பாவுக்குள் நுழையும் ஆபத்தான கடல் பயணத்தில் இறப்பவர்களைத் தேடும் மற்றும் அவ்வாறு வருகிறவர்களைக் கண்காணிக்கும் ஐரோப்பிய ஒன்றியப் பணிகளுக்கு உதவிசெய்வதைப் பிரித்தானிய அரசு நிறுத்திக்கொள்வதாக அறிவித்திருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார் அந்நாட்டு ஆயர் ஒருவர்.
பிரிட்டனின் கடற்படை அமைப்பு ஐரோப்பாவில் இன்னும் முன்னிலையில் உள்ளது என்றும், ஐரோப்பிய ஒன்றியத்தின் மத்தியதரைக் கடல் கண்காணிப்புப் பணிகளில் சேரவும், கடலில் இறந்தவர்களைத் தேடவும் ஒத்துழைப்பு தர மறுப்பது, போர் மற்றும் அடக்குமுறைகளால் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறும் ஆயிரக்கணக்கான மனிதர்களைக் காப்பாற்றும் பொறுப்பிலிருந்து விலகுவதாக உள்ளது என்றும் ஆயர் பேட்ரிக் லின்ச் கூறியுள்ளார்.
ஆபத்தை எதிர்கொள்ளும் நம் சகோதர சகோதரிகளுக்கு உதவும் கடமையிலிருந்து விலகுவது குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எச்சரித்துள்ளது பற்றிக் குறிப்பிட்டுள்ளார் பிரித்தானிய ஆயர் பேரவையின் குடியேற்றதாரர் ஆணைக்குழுத் தலைவர் ஆயர் லின்ச்.
ஒரு வசதியான கலாச்சாரத்தில் நம் கடமைகளை மறக்கின்றோம் மற்றும் இக்கலாச்சாரம், மற்ற மக்களின் அழுகுரல்களைக் கேட்கவிடாமல் செய்கின்றது என்ற திருத்தந்தையின் உரையையும் ஆயர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மத்தியதரைக் கடல் பகுதியில் ஈடுபட்டுள்ள கண்காணிப்பு மற்றும் மீட்புப்பணிகளிலிருந்து இத்தாலி விலகிக்கொள்வதாக அறிவித்துள்ளது. இச்சூழ்நிலையில் இப்பணிகளுக்கு வழங்கிவந்த ஒத்துழைப்பை பிரிட்டனும் கைவிடுவதாகக் கூறியுள்ளது.
மத்தியதரைக் கடல் பகுதியில் கடந்த ஆண்டில் கிட்டத்தட்ட மூவாயிரம் பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இத்தாலிய கடற்படை ஏறக்குறைய ஒன்றரை இலட்சம் பேரைக் காப்பாற்றியிருக்கிறது.

ஆதாரம் : CCN







All the contents on this site are copyrighted ©.