புர்கினோ ஃபாசோ நாடு வரலாற்றில் ஒரு திருப்புமுனையைச் சந்தித்துள்ளது, தலத்திருஅவை
நவ.01,2014. மேற்கு அப்ரிக்க நாடான புர்கினோ ஃபாசோவில் கடந்த 27 ஆண்டுகளாக ஆட்சியில்
இருந்த அரசுத்தலைவர் Blaise Campaore அவர்கள் பதவி விலகியுள்ளது அந்நாட்டின் வரலாற்றில்
ஒரு திருப்புமுனையாக உள்ளது என்று அந்நாட்டுக் கத்தோலிக்கத் திருஅவை கருத்து தெரிவித்துள்ளது. அரசுத்தலைவர்
Blaise Campaore அவர்கள், மூன்றாவது முறையாக அரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு
வழியமைக்கும் வகையில் அரசியல் அமைப்பில் மாற்றம் கொண்டுவருவதற்கு ஓட்டெடுப்பு நடத்துவதற்கு
நாடாளுமன்றம் தயாரித்துவந்தது. இச்சூழலில், இவ்வியாழனன்று ஆயிரக்கணக்கான மக்கள் நாடாளுமன்றத்தின்
முன்னர் கூடி போராட்டத்தை நடத்தினர். இதனால், இவ்வெள்ளியன்று அரசுத்தலைவர் Blaise Campaore
அவர்கள் பதவி விலகினார். இந்நிலையில், நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து ஃபீதெஸ்
செய்தி நிறுவனத்திடம் பேசிய தலத்திருஅவை அதிகாரிகள், தலைநகரில் மட்டுமன்றி, பிற முக்கிய
நகரங்களிலும் போராட்டங்களும், சூறையாடல்களும் இடம்பெற்று வருகின்றன என்று தெரிவித்துள்ளனர். தற்போது
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, நாடு இராணுவத்தின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ளது என்றும்,
அரசுத்தலைவர் தேர்தல் நடைபெறும் வரையில் அடுத்த 12 மாதங்களுக்கு நாட்டை ஆளும் இடைக்கால
அரசு அமைப்பதில் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன என்றும் தலத்திருஅவை தெரிவித்துள்ளது. உலகில்
வளர்ச்சி குன்றிய நாடுகளில் ஒன்றான புர்கினோ ஃபாசோவில், 46.4 விழுக்காட்டினர் 15 வயதுக்கும்,
59.1 விழுக்காட்டினர் 20 வயதுக்கும் உட்பட்டவர்கள் என்று கடந்த ஆண்டில் ஆயர்கள் வெளியிட்ட
அறிக்கை கூறுகிறது.