2014-11-01 14:47:10

நகர்ப்புறங்கள் நன்கு திட்டமிட்டு அமைக்கப்பட வேண்டும், ஐ.நா.


நவ.01,2014. உலகின் நகர்ப்புறப் பகுதிகள் அளவிலும், மக்கள் தொகையிலும் தவிர்க்க இயலாத நிலையில் வளர்ந்துவரும்வேளை, இப்பகுதிகள் சுற்றுச்சூழல் வசதிகளுடன் நன்கு திட்டமிட்டு அமைக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் நிறுவனம் கூறியுள்ளது.
உலக நகரங்கள் தினம் முதன்முறையாக இவ்வெள்ளியன்று(அக்.31) கடைப்பிடிக்கப்பட்டபோது இவ்வாறு உரைத்த ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் அவர்கள், உலகில் மாநகரங்கள் மற்றும் நகரங்களின் உறுதியான வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கத்தில் இவ்வுலக தினம் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்
உலக மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பாகத்துக்கு மேற்பட்டோர், அதாவது 500 கோடிப்பேர் 2030ம் ஆண்டுக்குள் நகரங்களில் வாழ்வார்கள் என்றும், இந்நிலை, நகரங்களின் சுற்றுச்சூழல், குடியிருப்புகள், வளங்கள், இன்னும் பிற வசதிகளை மேம்படுத்தவேண்டியதன் அவசியத்தை முன்வைக்கின்றது என்றும் பான் கி மூன் கூறியுள்ளார்.
அத்துடன், நகர மக்கள் தொகையில் 60 விழுக்காட்டுக்கு அதிகமானோர் 18 வயதுக்கு உட்பட்டவர்களாக இருப்பார்கள் என்றும் பான் கி மூன் கூறியுள்ளார்.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.