2014-11-01 14:46:19

திருத்தந்தை : எருசலேம் புனித நகரின் அமைதிக்காகச் செபிப்போம்


நவ.01,2014. விண்ணக எருசலேமின் மகிமை பற்றி அனைத்துப் புனிதர்கள் பெருவிழாத் திருவழிபாடு குறிப்பிடும் இவ்வேளையில், யூதர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் ஆகிய மூன்று மதத்தவருக்கும் புனித நகரமாக விளங்கும் எருசலேம் நகருக்காகச் செபிக்குமாறு இம்மூவேளை செப உரையின் இறுதியில் அனைவரிடமும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அண்மை நாள்களில் பல்வேறு பதட்டநிலைகளை எதிர்கொண்டுள்ள எருசலேம் புனித நகரம், மனிதக் குடும்பம் அனைத்திற்கும் இறைவன் வழங்க விரும்பும் அமைதிக்கு அடையாளமாகவும், முன்சுவையாகவும் இருக்கட்டும் எனவும் கூறினார் திருத்தந்தை.
மேலும், இஸ்பெயினின் வித்தோரியாவில் இச்சனிக்கிழமையன்று அருளாளராக அறிவிக்கப்பட்டுள்ள மறைசாட்சி அருள்பணியாளர் Peter Asúa Mendía அவர்கள் பற்றியும் குறிப்பிட்டார் திருத்தந்தை.
ஏழைகள் மற்றும் உதவிகள் தேவைப்படும் மக்களுக்குத் தன்னை அர்ப்பணித்திருந்த இந்த அருள்பணியாளர், இயேசுவுக்கும் திருஅவைக்கும் விசுவாசமாக இருப்பதற்குத் தனது விருப்பத்தைத் தெரிவித்ததால், கைது செய்யப்பட்டு சித்ரவதைக்கு உள்ளாகி கொல்லப்பட்டார் என்றும் கூறினார் திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.