2014-11-01 14:46:34

கடந்த ஆண்டில் இறந்த பேராயர்கள், ஆயர்களின் நினைவாக திருத்தந்தை திருப்பலி


நவ.01,2014. ஒரு நல்ல எடுத்துக்காட்டான வாழ்வு மிகுந்த நன்மையைக் கொண்டுவரும், ஆனால் வெளிவேடத்தனமான வாழ்வு மிகுந்த தீமையைக் கொண்டுவரும் என்ற வார்த்தைகளை, இச்சனிக்கிழமையன்று தனது டுவிட்டர் செய்தியாக வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், இறந்த திருத்தந்தையருக்காக, இஞ்ஞாயிறு மாலையில் வத்திக்கான் கெபியில் செபிக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த ஆண்டில் இறந்த கர்தினால்கள், பேராயர்கள் மற்றும் ஆயர்களின் நினைவாக, நவம்பர் 3ம் தேதி காலை 11.30 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்காவில் திருப்பலி நிறைவேற்றுவார்.
2013ம் ஆண்டு நவம்பர் 11 முதல் 2014ம் ஆண்டு ஆகஸ்ட் 20 வரை பத்து கர்தினால்களும், 2013ம் ஆண்டு அக்டோபர் 30 முதல் 2014ம் ஆண்டு அக்டோபர் 26 வரை, 111 பேராயர்கள் மற்றும் ஆயர்களும் இறந்துள்ளனர்.
இன்னும், நவம்பர் 01, இச்சனிக்கிழமை மாலை 4 மணிக்கு உரோம் வெரானோ கல்லறைத் தோட்டத்தில் திருப்பலி நிகழ்த்தி, அங்குள்ள அன்னைமரியா திருவுருவத்தின் முன்பாக, புனித திருத்தந்தையர் 23ம் ஜான், 2ம் ஜான் பால் ஆகிய இருவரின் திருப்பண்டங்களை வைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
1835ம் ஆண்டில் தொடங்கப்பட்ட உரோம் வெரானோ கல்லறைத் தோட்டம், 2ம் உலகப் போரின்போது 1943ம் ஆண்டில் நேச நாடுகளின் குண்டுவீச்சால் சேதமடைந்து மீண்டும் சீரமைக்கப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.