2014-11-01 14:42:05

இறந்தோர் அனைவரின் நினைவுநாள் - திருநாள் சிந்தனை


RealAudioMP3 அக்டோபர் 25, (2014) கடந்த சனிக்கிழமையன்று, ஈரான் நாட்டில், ரெஹானே ஜப்பரி (Reyhaneh Jabbari) என்ற 26 வயது இளம்பெண் தூக்கிலிடப்பட்டார். முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஒருவரைக் கொலைசெய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ரெஹானே கைது செய்யப்பட்டார். அந்த அதிகாரி, தன்னைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்க வந்ததால், தன் தற்காப்பு முயற்சியில் அவர் கொலையுண்டார் என்று ரெஹானே கூறினார். அவர் திட்டமிட்டுக் கொலை செய்தார் என்று கூறிய நீதிமன்றம், அவருக்கு மரண தண்டனை விதித்தது. அப்போது அவருக்கு வயது 19.
இளம்பெண் ரெஹானேயின் வழக்கு முறையாக நடத்தப்படவில்லையென்றும், அவருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை நிறைவேற்றக் கூடாது என்றும் கடந்த 7 ஆண்டுகளாக பல உலக நாடுகளும், மனித உரிமை அமைப்புக்களும் போராடி வந்தன. இவை அனைத்தும் ஈரான் நீதிமன்றத்தின் முடிவை மாற்ற முடியவில்லை; இளம்பெண் ரெஹானே கடந்த சனிக்கிழமை தூக்கிலிடப்பட்டார்.
தன் மரணத்திற்கு முன்னர், ரெஹானே, தன் தாய், ஷோலே (Sholeh) அவர்களுக்கு ஒலிவடிவச் செய்தியொன்றை அனுப்பியிருந்தார். அச்செய்தி உலக ஊடகங்களில் வெளியாகியது. இந்த ஒலிவடிவச் செய்தியில் ரெஹானே அவர்கள் கூறியிருந்த இரு எண்ணங்கள் என்னை ஆழமாகப் பாதித்தன. இன்று நாம் கடைபிடிக்கும் இறந்தோர் அனைவரின் நினைவுநாளன்று இவ்விரு எண்ணங்களும் நமக்கு உதவியாக இருக்கும் என்ற நோக்கத்துடன், ரெஹானே அவர்கள், தன் தாய்க்கு அனுப்பியிருந்த செய்தியின் இரு பகுதிகளை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.

தன் மரணம் உறுதி என்பதை அறிந்த ரெஹானே அவர்கள், தன் தாயிடம் விடுத்த ஒரு வேண்டுகோள் என்னை ஆழமாகப் பாதித்ததுடன், இறந்தோர் நினைவு நாளை புதிய கோணத்தில் சிந்திக்க உதவியது. இதோ அந்த வேண்டுகோள்:
அம்மா, இறப்பதற்கு முன்னால் உன்னிடம் ஒன்று யாசிக்கிறேன். உன்னுடைய சக்தியையெல்லாம் திரட்டி இதை நீ செய்தே தீரவேண்டும்... நீதிமன்றத்துக்குச் சென்று என்னுடைய இறுதி விருப்பம் இது என்று அவர்களிடம் தெரிவி. என் உயிரைக் காப்பாற்ற யாரிடமும் பிச்சை கேட்காதே என்று கூறிய நானே சொல்கிறேன், நீ எனக்காக நீதிமன்றத்தில் என் இறுதி ஆசையைப் பிச்சையாகக் கேள்.
அம்மா, என் உடல் பூமிக்கடியில் புதையுண்டு அழிந்துபோவதை நான் விரும்பவில்லை. என்னுடைய கண்களும், இளைய இதயமும் புழுதியாகப் போய்விடக் கூடாது. என்னைத் தூக்கில் போட்டதும், என்னுடைய கண்கள், இதயம், சிறுநீரகம், எலும்புகள் இன்னும் எதையெல்லாம் என் உடலிலிருந்து எடுத்து மற்றவர்களுக்குப் பயன்படுத்த முடியுமோ அதையெல்லாம் தேவைப்படுபவர்கள் எடுத்துக்கொள்ளட்டும். நான்தான் கொடுத்தேன் என்று யாருக்கும் தெரிய வேண்டாம். அதற்காக, ஒரு பூச்செண்டைக் கொடுத்து, அவர்கள் எனக்காக வேண்டிக்கொள்ள வேண்டாம்.
அம்மா, என் இதயத்தின் ஆழத்திலிருந்து சொல்கிறேன், எனக்காக சமாதி ஒன்றை எழுப்பி, அங்கு வந்து கண்ணீர் சிந்தாதே. எனக்காக நீ கறுப்பு உடை அணிய வேண்டாம். உன்னால் முடிந்த அளவு என்னுடைய கடினமான நாட்களை மறந்துவிடு. காற்று என்னைச் சுமந்துசெல்ல, என்னைக் கொடுத்துவிடு.

மரணத்தையும், மரணம் அடைந்தோரையும் நினைவில் கொள்ளும் நாள் இது. மரணத்தைத் தாண்டி வாழ விரும்பிய ரெஹானே அவர்கள், தன் உடல் உறுப்புக்களின் தானத்தால் இவ்வுலகில் தொடர்ந்து வாழ விரும்பியது நமக்கு நல்ல பாடம். பொருளுள்ள வகையில் அவ்விதம் தொடர்ந்து வாழ்வதால், மரணமடைந்தவரின் பிரிவு தரும் வேதனை, ஓரளவு குறையும் என்பது என் நம்பிக்கை. அதுவும், தன் பெயரை விளம்பரப்படுத்தாமல் இளம்பெண் ரெஹானே அவர்கள் இந்த நற்செயலைச் செய்ய விழைந்தது இன்னும் போற்றுதற்குரியது.
கடந்த ஓராண்டில், தமிழ் நாட்டில், விபத்துக்களில் உயிர் இழந்த பலரின் பெற்றோரும் உற்றாரும் இறந்தவர்களின் உடல் உறுப்புக்களைத் தானம் செய்த பல செய்திகளை வாசித்தோம். உடல் தானம் என்ற அர்ப்பணத்தால், மரணத்திற்குப் புதிய பொருளைத் தந்தவர்களுக்காகவும், உடல் தானம் என்ற முடிவெடுக்க காத்திருப்பவர்களுக்காகவும் இறந்தோர் அனைவரின் நினைவு நாளன்று இறைவனுக்கு நன்றி சொல்வோம்.

தானும், தன் தாயும் மறு உலகில் செய்யக்கூடிய, செய்ய வேண்டிய ஒரு பணியைப் பற்றியும் இளம்பெண் ரெஹானே இச்செய்தியில் கூறியுள்ளார்:
இந்த உலகம் நான் வாழ்வதை விரும்பவில்லை. நான் மரணத்தைத் தழுவுகிறேன். கடவுளின் நீதிமன்றத்தில் நான் அந்த காவல் துறையினர் மீது வழக்குத் தொடுப்பேன். காவல் துறையினர், நீதிபதி, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல்லாரும் பதில் சொல்லியாக வேண்டும்... குற்றம் இழைத்தவர்கள், அதற்கு உடந்தையாக இருந்தவர்கள், நீதியை நிலைநிறுத்தாமல் வேடிக்கை பார்த்தவர்கள் என்று எல்லாருமே கடவுளிடத்திலே பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள்.
இளகிய மனம் படைத்த என்னுடைய தாயே, கடவுளின் நீதிமன்றத்தில் நீயும் நானும் வாதிகளாக இருப்போம், நம்மீது குற்றம்சாட்டியவர்கள் எல்லாம் பதில் சொல்லக் கடமைப்பட்ட பிரதிவாதிகளாக இருப்பார்கள்.

மரணம் என்பது முடிவு அல்ல, அதையும் தாண்டி வேறொரு வாழ்வு தொடரும் என்பதை ரெஹானே அவர்களின் இரண்டாவது கூற்று நமக்கு நினைவுறுத்துகிறது. அந்த வாழ்வில் இறைவனைச் சந்திக்கப் போவதையும், அங்கு நீதி நிலைநாட்டப்படும் என்று அவர் கூறுவதையும் எண்ணி நமது மனம் நிறைவு பெறுகின்றது. இவ்வுலக வாழ்வு கல்லறையோடு முடிவடைவதில்லை, அதையும் தாண்டி ஒரு வாழ்வு உண்டு. இறைவனோடு நாம் வாழப்போகும் அந்த வாழ்வு, இவ்வுலக வாழ்வுக்குப் பொருள் தருகிறது என்ற எண்ணத்தை, இந்த நினைவுநாள் நம் மனதில் ஆழமாகப் பதிக்கிறது.

இவ்வுலக வாழ்வின் முடிவு, மறு உலக வாழ்வின் ஆரம்பம் என்ற எண்ணம், பல மதங்களில் பல்வேறு வழிகளில் சொல்லப்பட்டுள்ளது. இறந்தோர் நினைவுத் திருப்பலிகளில் தாய் திருஅவை பயன்படுத்தும் ஒரு செபத்தில் கூறப்பட்டுள்ள வார்த்தைகள் இவை: ஆண்டவரே, உம் விசுவாசிகளுக்கு வாழ்வு மாறுபடுகிறதேயன்றி, அழிக்கப்படுவதில்லை; இம்மண்ணக வாழ்வின் உறைவிடம் அழிந்ததும் விண்ணகத்தில் நிலையான வீடு ஆயத்தமாக இருக்கிறது (ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது).
இதையொத்த எண்ணத்தை, அழகிய ஓர் ஆங்கில வாக்கியத்தில் வாசித்திருக்கிறேன்: Christian death is like putting out the candle, since daylight has come. அதாவது, "பொழுது விடிந்ததும், இரவுக்காக ஏற்றிவைத்த மெழுகுதிரியை அணைப்பதுபோலத்தான் ஒரு கிறிஸ்தவரின் மரணம்" என்ற உருவகம், மறுவாழ்வில் நாம் தொடரப்போகும் உயர்ந்ததொரு வாழ்வைப் படம்பிடித்துக் காட்டுகிறது.

இவ்வுலக வாழ்வை முடித்துச் சென்றுள்ள பலரை எண்ணிப்பார்க்கும் இந்த நவம்பர் மாதத்தில், உலக வாழ்வு ஒரு பயணம் என்பதை நாம் ஆழமாக உணரவேண்டும். உலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதரும் ஒரு பயணி என்ற உண்மையை உள்ளூர உணர்ந்தால், முழு மனதோடு இதை நம்பினால், நம் சொந்த வாழ்விலும், இந்த உலகத்திலும் பாதிப் பிரச்சனைகள் தீர்ந்துவிடும். இது என் ஆழமான நம்பிக்கை. ஆனால், உலகில் பலர் இந்த உண்மையை அறிவுப் பூர்வமாய் உணர்வதோ, மனதால் நம்புவதோ இல்லை. ஏதோ இந்த உலக வாழ்க்கைதான் நிலையானது, நிரந்தரமானது என்பதுபோல் நாம் வாழ்க்கையை நடத்துகிறோம்.
வயது முதிர்வதையும், மரணத்தையும் தள்ளிப்போடும் Cryonic அறிவியல் வழிகளை இவ்வுலகில் ஒரு சிலர் தேர்ந்துள்ளனர். இறந்த உடல் முழுவதையும், அல்லது, உடலின் ஒரு சில பாகங்களை உறைய வைத்து, பின்னர் உயிர் கொடுத்து பெறுவதற்கு ஆய்வுகள் நடந்த வண்ணம் உள்ளன.
இவ்வுலகமே நிரந்தரம் என்ற எண்ணத்தின் பயங்கரமான ஒரு வெளிப்பாடு, ஓர் எடுத்துக்காட்டு, உலகப் பெரும் செல்வந்தர்களில் சிலர் வாழும் வாழ்க்கை. அதிலும் முக்கியமாக அச்செல்வந்தர்களில் ஒருவர் மும்பையில் கட்டியுள்ள அவரது வீடு.

இந்தப் பட்டியலில் இன்னும் பல ஆயிரம் அங்கத்தினர்களை நாம் சேர்க்க முடியும். நம்மையும் இதில் சேர்த்துக் கொள்வோம். நாம் அனைவருமே இந்த உலகில் வெறும் பயணிகள்தாம் என்பதை உணர்ந்தால்... எத்தனையோ பிரச்சனைகளுக்குத் தீர்வுகண்டு, நம்மால் நிம்மதியாக வாழமுடியும்.

மரணத்தையும், மரணமடைந்தோரையும் பல வழிகளில் நாம் உருவகித்து, பொருள் காண முடியும். அந்த உருவகங்களில் என்னைப் பெருமளவு கவர்ந்த ஓர் உருவகம் இதோ:

கடற்கரையில் நான் நிற்கிறேன்.
என் கண் முன் கப்பல் ஒன்று பாய்மரம் விரித்து,
தன் கடல் பயணத்தைத் துவங்குகிறது.
நேரம் செல்லச் செல்ல, அது உருவத்தில் சிறுத்து,
ஒரு சிறு புள்ளியாக மாறி, தொடுவானத்தில் மறைகிறது.
"அதோ, அவள் போய்விட்டாள்" என்று அருகிலிருந்தவர் சொல்கிறார்.
எங்கே போய்விட்டாள்?
என் பார்வையிலிருந்து மறைந்துவிட்டாள். அவ்வளவு தான்.
அவள் குறைந்துவிட்டாளா? அழிந்துவிட்டாளா? இல்லை.
கப்பலைப் பொருத்தவரை அவள் இக்கரையிலிருந்து கிளம்பியபோது,
எவ்வளவு பெரிதாக இருந்தாளோ, அதே அளவு தான் இன்னும் இருக்கிறாள்.
அவள் குறைந்ததுபோல், ஒரு புள்ளியாய் மாறி, மறைந்தது போல் தெரிந்ததெல்லாம்
என் பார்வையில் ஏற்பட்ட மாற்றங்களே தவிர,
அவளிடம் ஏற்பட்ட மாற்றங்கள் அல்ல.

"அதோ, அவள் போய்விட்டாள்" என்று
அருகிலிருந்தவர் சோகத்துடன் சொன்ன அதே நேரம்,
வேறொரு கரையில் நிற்கும் இன்னொருவர்
அவள் வருவதைக் கண்டு ஆனந்தத்தில்
"இதோ அவள் வருகிறாள்" என்று சொல்லியிருப்பார்.
அதுதான் மரணம்.

மறை போதகரும், கவிஞருமான Henry Van Dyke சொல்லியிருக்கும் அழகான எண்ணங்கள் இவை.

இறந்தோர் அனைவரின் நினைவுநாள் அன்று நம்மைவிட்டுப் பிரிந்தவர்களை எண்ணிப் பார்க்கும்போது, மனதில் இன்னும் ஆறாமல் இருக்கும் பல காயங்கள் மீண்டும் புதுப்பிக்கப்பட வாய்ப்பு உண்டு. பிரிந்தவர்கள் விட்டுச்சென்ற, நிரப்ப இயலாத, வேதனை நிறைந்த வெற்றிடமும், அதனால் உருவான காயங்களும், தொடரும்வரை அவர்கள் நமக்கு எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதை மீண்டும், மீண்டும் எண்ணிப் பார்க்கிறோம். அவர்கள் நம்மைவிட்டுப் பிரியவில்லை, தொடர்ந்து நம்மோடு வேறு வழிகளில் வாழ்கின்றனர்; அனைத்திற்கும் மேலாக, அவர்கள் இறைவனின் அணைப்பில் மகிழ்வுடன், அமைதியுடன் வாழ்கின்றனர் என்பதை நமது கிறிஸ்தவ விசுவாசம் சொல்லித் தருகிறது. அவர்கள் பெற்றிருக்கும் நிரந்தர அமைதியையும், மகிழ்வையும் நாம் ஓரளவாகிலும் சுவைப்பதற்கு இந்த நினைவு நாள் நம் அனைவருக்கும் உதவி செய்யவேண்டும் என்று மன்றாடுவோம்.







All the contents on this site are copyrighted ©.