2014-11-01 14:47:18

இந்தியாவில் கருவில் உள்ள குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை


நவ.01,2014. இந்தியாவில் முதல் முறையாக, கருவில் உள்ள குழந்தைக்கு, இதய அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாகச் செய்யப்பட்டு உள்ளது.
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தை சேர்ந்த 25 வயது கர்ப்பிணியான சிரிஷாவின் கருவில் வளரும் குழந்தையின் இதயத்தில், மகாதமனியில் அடைப்பு ஏற்பட்டதால், இதயத்தின் வலது பகுதிக்கு இரத்த ஓட்டம் குறைந்தும், வளர்ச்சியின்றியும் காணப்பட்டது. குழந்தை பிறந்தபின், இந்தக் குறைபாட்டை சரிசெய்ய முடியாது என்பதால் கருவில் இருக்கும்போதே அறுவை சிகிச்சை செய்துள்ளனர் மருத்துவர்கள். மருத்துவர் நாகேஸ்வர ராவ் தலைமையில், 12 நிபுணர்கள் கொண்ட குழு, தாயின் வயிற்றின் வழியாக, கருவில் உள்ள குழந்தையின் இதயத்திற்கு, மெல்லிய வயருடன் கூடிய ஊசி மூலம் பலூனைச் செலுத்தி அடைப்பை நீக்கியுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கருவில் இருந்த குழந்தை, இடம் மாறி இருந்ததால், அறுவை சிகிச்சை முதலில் செய்ய முடியாமல் கைவிடப்பட்டது. ஒரு வாரத்திற்குப்பின், தாய்க்கும், கருவில் உள்ள குழந்தைக்கும் மயக்க மருந்து அளித்து, குழந்தை நகராமல் இருக்கும்படி செய்யப்பட்டது. பின், தாயின் வயிற்றின் மூலம், குழந்தையின் இதய மகாதமனிக்கு, மெல்லிய வயருடன் கூடிய ஊசி மூலம் சிறிய பலூனை செலுத்தி, அடைப்பை நீக்கி, இரத்தக் குழாயை விரிவடையச் செய்தனர் மருத்துவர்கள்.
அறுவை சிகிச்சை முடிந்து, இரண்டு வாரங்களுக்குப்பின் பரிசோதித்தபோது, குழந்தையின் இதயம் வளர்ச்சியடைந்து, நன்கு செயல்பட்டதுடன், எடையும், 830 கிராமில் இருந்து, 1,200 கிராமாக உயர்ந்திருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : தினமலர்







All the contents on this site are copyrighted ©.