2014-10-30 15:44:49

பாரசீக நாட்டின் Farsi என்ற மொழியில், விவிலியத்தின் மொழி பெயர்ப்பு


அக்.30,2014. பாரசீக நாட்டில் இன்றையக் காலக்கட்டத்தில் பயன்படுத்தப்படும் Farsi என்ற மொழியில், விவிலியம் மொழி பெயர்க்கப்பட்டு, அண்மையில் இலண்டன் மாநகரில் வெளியிடப்பட்டது.
Wycliffe விவிலிய மொழிபெயர்ப்பாளர்கள் என்ற அமைப்பும், Elam பணியாளர்கள் என்ற அமைப்பும் இணைந்து வெளியிட்டுள்ள இந்த விவிலிய மொழிபெயர்ப்பின் 3 இலட்சம் பிரதிகள், அடுத்த மூன்று ஆண்டுகளில் ஈரான் நாட்டிற்கும் உலகின் வேறு பல நாடுகளுக்கும் அனுப்பப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது.
கடந்த 18 ஆண்டுகளாக, 30 அறிஞர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய இந்த மொழிபெயர்ப்பு, இன்றைய காலக்கட்டத்தில் ஈரான் நாட்டில் பயன்படுத்தப்படும் மொழியில் உருவாக்கப்பட்டுள்ளது என்று சொல்லப்படுகிறது.
இந்த மொழிபெயர்ப்பு முயற்சியை ஒருங்கிணைத்த போதகர் Mehrdad Fatehi அவர்கள் உரையாற்றுகையில், தூய ஆவியாரையும், இறை வார்த்தையையும் யாரும் சங்கிலியால் பிணைக்க முடியாது என்று கூறினார்.
இதற்கு முந்தைய விவிலியப் பதிப்பானது 100 ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்தது என்றும், அந்த பதிப்பில் பயன்படுத்தப்பட்ட பாரசீக மொழி, தற்போதைய மக்களுக்குப் புரியாத மொழி என்றும் ஒருங்கிணைப்பாளர் Fatehi மேலும் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.