2014-10-30 15:38:56

பழையக் கத்தோலிக்கர்கள் ஆயர்கள் பேரவையுடன் திருத்தந்தை சந்திப்பு


அக்.30,2014. கிறிஸ்துவின் திருஅவையில் எப்போதும் விளங்கவேண்டிய மனமாற்றத்தை, கத்தோலிக்கர்களும், பழையக் கத்தோலிக்கர்களும் தொடர்ந்து பின்பற்றவேண்டிய சவால் நமக்கு முன் வைக்கப்பட்டுள்ளது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
நெதர்லாந்து, ஜெர்மனி, சுவிஸ்சர்லாந்து ஆகிய நாடுகள் இணைந்து 1889ம் ஆண்டு பழையக் கத்தோலிக்கர்கள் ஆயர்கள் பேரவை என்ற அமைப்பை உருவாக்கினர்.
இவ்வமைப்பைச் சார்ந்த ஆயர்களை இவ்வியாழன் மதியம் திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், யோவான் நற்செய்தியில் "அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக" (யோவான் 17: 21) என்று கூறப்பட்டுள்ள வார்த்தைகளை மையப்படுத்தி தன் வாழ்த்துச் செய்தியை வழங்கினார்.
ஐரோப்பாவில் வாழும் மக்கள் தங்கள் சுய அடையாளம், தங்கள் வாழ்வின் குறிக்கோள் இவற்றைக் குறித்து குழப்பமான நிலையில் வாழ்ந்துவரும்போது, கத்தோலிக்கர்களும், பழையக் கத்தோலிக்கர்களும் இணைந்து இவர்களுக்கு உதவமுடியும் என்று திருத்தந்தை தன் செய்தியில் குறிப்பிட்டார்.
கிறிஸ்தவ ஒன்றிப்பு உரையாடலை வளர்க்கும் வகையில் இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கம் வெளியிட்ட Unitatis Redintegratio என்ற கொள்கைத் திரட்டின் ஐம்பதாவது ஆண்டைச் சிறப்பிக்கிறோம் என்பதையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் செய்தியில் சுட்டிக்காட்டினார்.
தன் சீடர்களின் ஒருமைப்பாட்டிற்கென இறுதி இரவுணவின்போது இயேசு மன்றாடிய செபத்தில் நம்மையே இணைத்து, இறை அருளுடன் ஒருமைப்பாட்டை நோக்கி முன்னேறுவோம் என்ற வார்த்தைகளுடன் திருத்தந்தை பிரான்சிஸ் தன் வாழ்த்துச் செய்தியை நிறைவு செய்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.