2014-10-30 15:43:34

சிஸ்டின் சிற்றாலயத்தில் ஒளி வசதிகளும், காற்றோட்ட வசதிகளும் சீரமைக்கப்பட்டுள்ளன


அக்.30,2014. உலகப் புகழ்பெற்ற கலைக் கருவூலமான சிஸ்டின் சிற்றாலயத்தில் அண்மைய மாதங்களில் ஒளி வசதிகளும், காற்றோட்ட வசதிகளும் சீரமைக்கப்பட்டு, செய்தியாளர்களுக்கு இப்புதனன்று காட்டப்பட்டது.
சிஸ்டின் சிற்றாலயத்தில் காணப்படும் அனைத்து ஓவியங்களையும் தெளிவாகக் காணும் வகையில், 7000 LED விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன என்றும், பார்வையாளர்களின் மூச்சுக் காற்றினால் உருவாகும் ஈரப்பதத்தை நீக்கும்வண்ணம் புதுவகையான காற்றோட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்றும் வத்திக்கான் அருங்காட்சியக பொறுப்பாளர்கள் கூறினர்.
சிஸ்டின் சிற்றாலயக் கூரையில் வரையப்பட்டுள்ள ஓவியங்களை எளிதில் காணும் வகையில் பார்வையாளர்கள் அணிந்துகொள்ளக்கூடிய சிறப்புக் கண்ணாடிகளை விரைவில் வழங்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று, அருங்காட்சியகப் பொறுப்பாளர் அந்தோனியோ பவுலுச்சி அவர்கள் கூறினார்.
ஒரு நாளின் எந்த ஒரு குறிப்பிட்ட நேரத்திலும் 2000 பேர் அந்தச் சிற்றாலயத்தைப் பார்வையிடுகின்றனர் என்றும், ஒவ்வோர் ஆண்டும் குறைந்தது 60 இலட்சம் பயணிகள் சிஸ்டின் சிற்றாலயத்தைப் பார்வையிடுகின்றனர் என்றும் UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : UCAN








All the contents on this site are copyrighted ©.