2014-10-30 15:42:16

கருவிலிருந்து கல்லறை வரை மனித வாழ்வு மதிப்புள்ளது - பேராயர் Bernadito Auza


அக்.30,2014. வாழ்வு என்ற அடிப்படை உரிமை, கருவிலிருந்து கல்லறை வரை பாதுகாக்கப்படவேண்டும் என்பது கத்தோலிக்கத் திருஅவையின் அசைக்கமுடியாத கொள்கை என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஐ.நா.அவை அமர்வுகளில் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளராகப் பங்கேற்கும் பேராயர் Bernadito Auza அவர்கள், நியூ யார்க் நகரில் நடைபெற்றுவரும் ஐ.நா.வின் 69வது அமர்வில் இப்புதனன்று உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.
மனித உரிமைகளை மையப்படுத்தி நடத்தப்பட்ட இந்தப் பொது அமர்வில், மரண தண்டனைக்கு எதிராக திருஅவை என்றும் குரல் கொடுத்து வருகிறது என்று பேராயர் Auza அவர்கள் குறிப்பிட்டார்.
மரண தண்டனைக்கும், வாழ்நாளெல்லாம் சிறைக் காவல் என்ற மறைமுகமான மரண தண்டனைக்கும் எதிராக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பல்வேறு தருணங்களில் கூறிவந்துள்ள கருத்துக்களை பேராயர் Auza அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.
வாழ்வு என்ற அடிப்படை உரிமையோடு, கருத்துரிமை, மனச்சான்றின்படி வாழும் உரிமை, மத உரிமை ஆகிய அனைத்து உரிமைகளும் இன்றையக் காலத்தில் பெரும் சவால்களைச் சந்தித்து வருகின்றன என்பதையும் பேராயர் Auza அவர்கள் தன் உரையில் குறிப்பிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.