2014-10-29 15:36:28

"மோசுல் நகரின் ஒரு கிறிஸ்தவருக்கு ஆதரவு தாருங்கள்" என்ற முயற்சி பலனளித்துள்ளது - பேராயர் Amel Nona


அக்.29,2014. "மோசுல் நகரின் ஒரு கிறிஸ்தவருக்கு ஆதரவு தாருங்கள்" என்ற மையக்கருத்துடன் ஈராக் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சி தக்க பலனை அளித்துள்ளது என்று அந்நாட்டு ஆயர் ஒருவர் கூறியுள்ளார்.
ஆசிய செய்தி நிறுவனமும், வேறு சில பிறரன்புப் பணி அமைப்புக்களும் இணைந்து நடத்திய இந்த முயற்சியால், விரைந்துவரும் குளிர் காலத்தின் தாக்கங்களிலிருந்து பல்லாயிரம் புலம்பெயர்ந்தோர் பாதுக்காக்கப்பட்டுள்ளனர் என்று, மோசுல் நகர் கல்தேய வழிபாட்டு முறை பேராயர் Amel Nona அவர்கள் கூறியுள்ளார்.
புலம் பெயர்ந்துள்ள பல்லாயிரம் கிறிஸ்தவர்கள் நடுவில் தானும் ஒரு புலம்பெயர்ந்தோராய் வாழ்ந்து வரும் பேராயர் Nona அவர்கள், ஆசிய செய்திக்கு அனுப்பியுள்ள ஒரு மடலில், இந்த ஆதரவு முயற்சியின் வழியாக இதுவரை கிடைத்துள்ள 7 இலட்சம் யூரோக்கள் நிதி உதவிக்கு நன்றி கூறியுள்ளார்.
கிறிஸ்தவர்கள் சந்தித்துவரும் தொடர் இடர்பாடுகள் மத்தியிலும், அவர்களில் இருவர் இஸ்லாம் மதத்திற்கு கட்டாய மதமாற்றம் அடையும்படி வற்புறுத்தப்பட்டாலும் அவர்கள் மதம் மாறாமல் இருந்ததை, ஆயர் Nona அவர்கள் தன் மடலில் குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.