2014-10-29 15:38:31

அமைதி ஆர்வலர்கள் : 1959ல் நொபெல் அமைதி விருது(Philip Noel-Baker)


அக்.29,2014. 1959ல் நொபெல் அமைதி விருது பெற்ற பிலிப் ஜான் நோயெல் பேக்கர் அவர்கள் உறுதியான மற்றும் தடுமாற்றமில்லாத பற்றுறுதியுடையவர். அரசியலிலும் சமய வாழ்விலும் செல்வாக்குடையவராக வலம் வந்தவர் இவர். நார்வே நொபெல் விருதுக்குழு அவருக்கு இந்த அமைதி விருதை அறிவித்தவுடன் பத்திரிகையாளர் ஒருவருக்கு இவர் அளித்த பேட்டியில், “போர் வெறுக்கத்தக்க, அழிவுக்குரிய, அழுக்கான ஒரு பொருள். ஒரு கலாச்சாரம் மாறி அடுத்த கலாச்சாரம் என, மாறி மாறி கலாச்சாரங்களை இது அழித்துள்ளது, போர் பற்றிய எனது நம்பிக்கை இது” என்று சொன்னார். இந்த அளவுக்கு எதையும் துணிச்சலுடன் சொல்லக் கூடியவர் பிலிப் நோயெல் பேக்கர். கானடாவில் ஜோசப் ஆலன் பேக்கர் என்பவரின் ஏழு பிள்ளைகளில் ஒருவராக, 1889ம் ஆண்டு நவம்பர் முதல் தேதியன்று பிறந்தார் பிலிப் ஜான் பேக்கர். இந்தக் குடும்பம் இங்கிலாந்துக்குக் குடிபெயர்ந்து, நல்ல இலாபம் ஈட்டும் இயந்திரங்களை உற்பத்தி செய்யும் தொழிற்கூடத்தைத் தொடங்கியது.
பிலிப் ஜான் பேக்கர் அவர்கள் பள்ளியில் படிக்கும்போதே சிறந்த மாணவராக விளங்கினார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கிங்ஸ் கல்லூரியில் வரலாறு மற்றும் பொருளாதாரப் பாடங்களில் சிறப்புப்பட்டத் தேர்வில் வெற்றி பெற்றார். 1911 மற்றும் 1913ம் ஆண்டுகளில் அனைத்துலகச் சட்டத்தில் Whewell நிபுணர் என்ற பெயரையும் பெற்றார். 1912ல் கேம்பிரிட்ஜில் விவாதக்கழகத்தின் தலைவராகவும், 1910 முதல் 1912 வரை கேம்பிரிட்ஜி பல்கலைக்கழகத்தின் விளையாட்டுக் கழகத்தின் தலைவராகவும் பணியாற்றினார் பிலிப் ஜான் பேக்கர். 1912ல் Stockholmல் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுகளில் பங்கெடுத்த இவர், 1920ல் Antwerpலும், 1924ல் பாரிசிலும் நடந்த ஒலிம்பிக் விளையாட்டுக்களில் பிரித்தானியக் குழுவின் தலைவராக இருந்து வழிநடத்தினார். எனினும் கல்வித்துறையில் இவருக்குக் கிடைத்த பதவிகளை ஏற்கவில்லை. ஆனால் 1914ல் ஆக்ஸ்ஃபோர்டில் ரஸ்கின் கல்லூரியில் துணை முதல்வர் பதவியை ஏற்றார். ஆயினும் முதல் உலகப்போர் தொடங்கியவுடன், இவர் “நண்பர்கள் அவசர மருத்துவ வாகனப் பிரிவை” உருவாக்கி அதை வழிநடத்தினார். இப்பிரிவு, 1914 முதல் 1915 வரை பிரான்சில் போர்முனையில் இருந்தவர்களோடு தொடர்பு கொண்டிருந்தது. அதோடு, இத்தாலிக்கான பிரித்தானிய அவசர மருத்துவ வாகனப் பிரிவின் உதவியாளராக 1915 முதல் 1918 வரை இருந்தார் இவர். இதனால் 1915ல் பிரான்சில் Mons Star விருது, 1917ல் இத்தாலியில் Military Valor வெள்ளிப்பதக்கம், 1918ல் போர்ச் சிலுவை விருது என பல விருதுகளைப் பெற்றார் இவர். 1915ல் ஐரின் நோயெல் என்ற தாதியர் பெண்ணையும் திருமணம் செய்தார் பிலிப் ஜான் பேக்கர். 1943ம் ஆண்டில், தனது மனைவி நோயெல் என்பவரின் பெயரை, தனது பெயரோடு இணைத்துக்கொண்டு நோயெல் பேக்கர் என்ற பெயரிலே பின்னாளில் அழைக்கப்படலானார்.
நோயெல் பேக்கர் அவர்கள், இருபதாம் நூற்றாண்டின் இருபெரும் பன்னாட்டு அரசியல் நிறுவனங்களான நாடுகளின் கூட்டமைப்பு, ஐக்கிய நாடுகள் நிறுவனம் ஆகிய இரண்டின் உருவாக்கம், நிர்வாகம் மற்றும் அவற்றின் சட்ட வரைவுகளிலும் பங்கெடுத்தார். 1918, 1919ம் ஆண்டுகளில் பாரிசில் நடைபெற்ற அமைதிக் கருத்தரங்கில், நாடுகளின் கூட்டமைப்பு உடன்படிக்கைத் தொகுப்பைத் தயாரித்த Lord Robert Cecil குழுவுக்கு இவர் முக்கிய உதவியாளராகச் செயல்பட்டார். இக்கூட்டமைப்பின் முதல் பொதுச்செயலாளர் Sir Eric Drummond அவர்களுக்கு, நோயெல் பேக்கர் அவர்கள் 1920 முதல் 1922 வரை முக்கிய உதவியாளராகவும், அதன் செயலகத்தின் உறுப்பினராகவும் இருந்தார். மேலும், Fridtjof Nansen அவர்களின் அகதிப் பணிக்கும், போர்க்கைதிகளுக்கு உதவும் பணிக்கும் சிறந்த ஆலோசகராகச் செயல்பட்டார் இவர். ஆயுதக்களைவு மாநாட்டின் தலைவராகப் பணியாற்றிய Arthur Henderson அவர்களுக்கு ஓராண்டு உதவியாளராகவும் பணியாற்றினார் நோயெல் பேக்கர்.
இந்த நாடுகளின் கூட்டமைப்பில் கிடைத்த அனுபவங்களைக் கொண்டு, அனைத்துலகப் பிரச்சனைகளை அமைதியான முறையில் தீர்ப்பது(1925), பணியில் நாடுகளின் கூட்டமைப்பு(1926), ஆயுதக்களைவும் Coolidge கருத்தரங்கும்(1927) போன்ற தலைப்புகளில் நூல்களை எழுதி வெளியிட்டார். Hagueல் அனைத்துலக சட்டக் கழகத்தில் 1927ல் சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார். Yale பல்கலைக்கழகத்தில் 1933, 1934ம் ஆண்டுகளில் சொற்பொழிவுகள் நிகழ்த்தியதைத் தவிர இவர் தனது வாழ்வை அரசியலிலும், அனைத்துலக விவகாரங்களிலுமே செலவிட்டார். நாற்பது ஆண்டுகள் பிரித்தானியத் தொழிற்கட்சியில் முக்கியமானவராகத் திகழ்ந்தார் நோயெல் பேக்கர். 1936 முதல் 1942 வரை பிரித்தானிய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தரப்பில் இவர் இருந்தாலும், 1942ல் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் அவர்களால் முன்மொழியப்பட்ட போர் பரிமாற்றத் துறை அமைச்சரின் செயலராக பணி செய்தார் நோயெல் பேக்கர். இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர் ஐக்கிய நாடுகள் நிறுவன அலுவலகராகப் பணி செய்தார் இவர். ஆயுத வியாபாரக் கட்டுப்பாடு, அணுஆயுதக் கட்டுபாடுகளுக்கானத் திட்டம், அகதிகளுக்குப் பொருளாதார உதவி, நான்சன் கடவுச்சீட்டு அமைப்பை மீண்டும் நிறுவியது.... இப்படி பல பணிகளைச் செய்தார். தனது வாழ்வின் கடைசி காலத்தில் தனது ஒரே மகனான பிரான்சிஸ் நோயெல் பேக்கருக்கு பிரித்தானிய நாடாளுமன்றத்தில் உதவி செய்தார். 1959ல் நொபெல் அமைதி விருது பெற்ற பிலிப் நோயெல் பேக்கர் 1982ல் காலமானார்.
கிரேக்க மெய்யியலாளர் சாக்ரடீஸ் சொன்னதற்கேற்ப, வாழ்வது முக்கியமன்று; சிறப்பாக வாழ வேண்டும் என்பதே முக்கியம் என வாழ்ந்து காட்டியவர்கள் அமைதிக்காக உழைக்கும் ஆர்வலர்கள். எனவே நம் நல்ல செயல்களின் மூலம் பிறருக்கு வழி காட்டிகளாக இருப்போம்(இங்கர்சால்).

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.