2014-10-28 13:57:27

விவிலியத்
தேடல் புதையல், முத்து, வலை உவமைகள் பகுதி - 2


RealAudioMP3 கடலில் பயணம் செய்துகொண்டிருந்த கப்பலொன்று தரைதட்டி நின்றது. ஒரு வாரமாக முயன்றும், கப்பலை மீண்டும் கடலுக்குள் கொண்டுசெல்ல முடியவில்லை. கப்பலிலிருந்த குடிநீர் முற்றிலும் தீர்ந்துவிட்டதால், பயணிகள் தாகத்தால் துடித்தனர். அப்போது அவ்வழியே வந்த மற்றொரு கப்பலில் இருந்தவர்களிடம், "எங்களுக்குக் குடிநீர் தேவை" என்ற செய்தியை அனுப்பினார் கப்பல் தலைவர். "நீங்கள் இருக்கும் இடத்தில் வாளியை இறக்கி, நீர் எடுத்துப் பருகுங்கள்" என்ற பதில் செய்தி வந்தது. கப்பல் தலைவருக்குக் கடும்கோபம். கடல் நீரைக் குடிக்கச் சொல்வதற்கு இவர்கள் யார் என்று அவர் வெறுப்புடன் கீழ்த்தளத்திற்குச் சென்றார். அவர் சென்றபின், அருகிலிருந்த உதவியாட்களில் ஒருவர் தங்கள் கப்பல் நின்ற இடத்தில் வாளியை இறக்கி, நீர் எடுத்தார். அந்த நீரை அவர் சுவைத்தபோது, அது சுத்தமான குடி நீர் என்பதை உணர்ந்தார். அந்தக் கப்பல் தரைதட்டி நின்ற இடம், பெரும் நதியொன்று கடலில் கலந்த 'டெல்டா' பகுதி என்பதை கப்பலில் இருந்தவர்கள் உணரவில்லை. சக்தியோடு பாய்ந்த நதி நீர், கடல் நீரை ஏறத்தாழ ஒரு கிலோமீட்டர் தூரம் வரை தள்ளிவிட்டிருந்தது. சுவையான குடிநீர் தங்களைச் சூழ்ந்திருந்தபோதும், அதை அறியாததால், கப்பலில் இருந்தவர்கள் தாகத்தால் தவித்தனர்.

ஊரில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தினமும் அமர்ந்து தர்மம் கேட்டு வாழ்ந்தார் ஒருவர். பல ஆண்டுகள் அதே இடத்தில் தர்மம் கேட்டு வாழ்ந்தவர், ஒருநாள் இறந்தார். அவர் இறந்ததும், ஊர் மக்கள் ஒன்று கூடி, அவர் தர்மம் கேட்டு வந்த இடத்திலேயே அவரைப் புதைக்கத் தீர்மானித்தனர். அவர்கள் புதை குழியைத் தோண்டியபோது, அவர் அமர்ந்திருந்த அந்த இடத்தில் விலைமதிப்பற்ற ஒரு புதையல் கிடைத்தது.

புதையலுக்கு மேல் அமர்ந்துகொண்டு வாழ்நாள் முழுவதும் தர்மம் கேட்ட இவரைப் போல, நல்ல நீர் சூழ்ந்திருந்த நீர்பரப்பில் நின்றுகொண்டே தாகத்தால் துடித்த கப்பல் பயணிகளைப் போலத்தான் நாமும்... நம் வாழ்வென்ற வயலில் மறைந்திருக்கும் 'புதையல்'களை, வாழ்வென்ற கடலின் ஆழத்தில் உருவாகியிருக்கும் முத்துக்களை அடையாளம் கண்டுகொள்ளாமல் வாழ்ந்து வருகிறோம். மத்தேயு நற்செய்தி, 13ம் பிரிவில் கூறப்பட்டுள்ள புதையல், முத்து, வலை ஆகிய உவமைகளில் சென்ற வாரம் நம் விவிலியத் தேடலை ஆரம்பித்தோம்; இன்று தொடர்கிறோம்.

"நிலத்தில் மறைந்திருந்த புதையல்... விண்ணரசுக்கு ஒப்பாகும்" (மத். 13, 44) என்று இயேசு கூறியது, சென்ற வாரம் சில சிந்தனைகளை எழுப்பியது. இயற்கை மாற்றங்களால், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் பூமிக்குள் புதையுண்ட நிலக்கரி, வைரமாக மாறுவதையும், அதை மனிதர்கள் புதையலாகத் தோண்டி எடுப்பதையும் சென்ற வாரம் சிந்தித்தோம்.
இன்று மற்றொரு வகையான புதையலைப் பற்றி சிந்திக்க முயல்வோம். பூமியில் குழிபறித்து நாம் மறைத்துவைக்கும் விலையுயர்ந்தப் பொருள்கள், பல ஆண்டுகளுக்குப் பின்னர் தோண்டி எடுக்கப்படும்போது அதை புதையல் என்று சொல்கிறோம். இஸ்ரயேல் மக்கள் மத்தியில் பெருமளவில் நிலவிவந்த இந்தப் பழக்கத்தை இயேசு தன் உவமையில் நினைவுறுத்தி, விண்ணரசை புதையலுக்கு ஒப்புமைப்படுத்துகிறார்.

எகிப்தியரின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை அடைந்து, இறைவன் தங்களுக்கு வழங்கிய நாட்டில், இஸ்ரயேல் மக்கள் தங்கள் விடுதலை வாழ்வை ஆரம்பித்தனர். ஆனால், அந்த விடுதலையும் அமைதியும் நீண்ட நாள் நீடிக்கவில்லை. அசீரியர், பாபிலோனியர் என்று, வெவ்வேறு நாட்டவர், இஸ்ரயேல் மக்கள் மீது படையெடுத்து, அவர்களை தங்கள் நாட்டிற்கு அடிமைகளாகக் கொண்டுசென்றனர். அவ்விதம் தங்கள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டியிருந்த இஸ்ரயேல் மக்கள், தாங்கள் பாடுபட்டு சேர்த்து வைத்திருந்த செல்வங்களை, நிலத்தில் குழிதோண்டி புதைத்தனர். என்றாவது ஒருநாள் தங்கள் சொந்த நாட்டுக்கு மீண்டும் திரும்பும்போது, அச்செல்வங்களைப் பயன்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில் அவர்கள் இவ்வாறு செய்தனர்.
அடிமைகளாகக் கொண்டு செல்லப்பட்ட பலர் அந்நிய நாடுகளில் உயிரிழந்தனர். பல தலைமுறையினர் அடிமைகளாக வாழ்ந்து மறைந்தபின், எஞ்சியிருந்தோர் சொந்த நாட்டுக்குத் திரும்பினர். அவர்களில் பலர், தங்கள் முன்னோர் புதைத்துவைத்த செல்வங்களைத் தற்செயலாகக் கண்டுபிடித்து, அவற்றை அனுபவித்தனர்.

புதைத்தது ஒருவர், புதையலின் பலனை அனுபவித்தது வேறொருவர் என்ற வரலாற்று உண்மை, நமக்கு ஒரு பாடத்தைச் சொல்லித் தருகிறது. நமது முன்னோர் பலர் இவ்வுலகில் விட்டுச்சென்ற புதையல்கள் பல. பொருள் செல்வங்கள் மட்டுமல்லாமல், அறிவுச் செல்வம், ஆன்மீகச் செல்வம், கலாச்சாரச் செல்வம்... என்று பல துறைகளில் அவர்கள் ஈட்டியச் செல்வங்களை, விலைமதிப்பற்றப் புதையல்களாக அடுத்தத் தலைமுறையினருக்கு விட்டுச் சென்றுள்ளனர்.
எனவே, இன்று நாம் அனுபவிக்கும் செல்வங்களில் பல, நமது சொந்த முயற்சியால் நாம் திரட்டியவை அல்ல; நம் முன்னோரின் உழைப்பால் நாம் பெற்றவை என்ற நன்றி உணர்வுடன் வாழ வேண்டும். 'புதையல்' உவமை மறைமுகமாக நமக்குச் சொல்லித் தரும் பாடம் இது.

நம் முன்னோரிடமிருந்து நாம் 'புதையல்'களைப் பெற்றுக்கொண்டோம் என்றால், நமக்கு அடுத்தத் தலைமுறையினர் பயன்படுத்தும் வகையில் நாம் 'புதையல்'களை விட்டுச் செல்லவும் கடமைப்பட்டுள்ளோம் அல்லவா? ஆனால், நமது தலைமுறையினரிடையே நடப்பது என்ன? நம் முன்னோர் நமக்கு வழங்கியப் புதையல்களை தேவையான அளவு பயன்படுத்துவதையும் தாண்டி, சுயநலப் பேராசையால், இந்தப் புதையல்களை முற்றிலும் சுரண்டி வருகிறோம். அல்லது, புதையல்களின் மதிப்பைக் குறைத்து வருகிறோம்; மாற்றி வருகிறோம்.
எடுத்துக்காட்டாக, இயற்கை வளங்கள் பலவற்றை உள்ளடக்கிய ஒரு கருவூலமாக இந்தப் பூமிக்கோளம் இன்றையத் தலைமுறையினருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இன்றையத் தலைமுறையினராகிய நாம், நாளையத் தலைமுறையினருக்குத் தேவைப்படும் என்ற பொறுப்பு ஏதுமில்லாமல், பூமி என்ற புதையலைப் பாழாக்கிவருகிறோம். நமது சுயநலத்தை எண்ணிப் பார்க்கும்போது, அமெரிக்கப் பழங்குடியினர் பயன்படுத்திய ஒரு பழமொழி நினைவுக்கு வருகிறது:
"நாம் இந்தப் பூமியை, முன்னோர்களிடமிருந்து வாரிசுக்குரிய சொத்தாகப் பெறவில்லை; நமது அடுத்தத் தலைமுறையினரிடமிருந்து இந்தப் பூமியைக் கடனாகப் பெற்றுள்ளோம்" என்கிறது இப்பழமொழி.

20ம் நூற்றாண்டில், ஊடகத் துறையின் ஆசிரியர் என்றழைக்கப்பட்ட Marshall McLuhan அவர்கள், "விண்வெளியில் மிதந்துவரும் பூமி என்ற வாகனத்தில், நாம் யாரும் பயணிகள் அல்ல; நாம் அனைவருமே இந்த வாகனத்தை இயக்குபவர்கள்" என்று சொல்லும்போது, நாம் ஒவ்வொருவரும் இந்தப் பூமிக்குப் பொறுப்பானவர்கள் என்பதை உணர்த்துகிறார்.
பொறுப்பு ஏதுமின்றி, மனிதர்கள் வளர்த்துக்கொண்டுள்ள பேராசையைக் குறித்து காந்தியடிகள் கூறிய வார்த்தைகள் நம் உள்ளங்களில் அம்புகளாகப் பாய்கின்றன: "இவ்வுலகின் இயற்கை வளங்கள் அனைவரின் தேவைகளுக்குப் (need) போதுமானது, ஆனால், பேராசைகளுக்குப் (greed) போதுமானதல்ல."
நமது தலைமுறை கட்டுப்பாடின்றி வளர்த்துக்கொண்டுள்ள பேராசையை, மெய்யியல் மேதையும், கவிஞருமான Henry David Thoreau என்பவர், இவ்வாறு படம்பிடித்துக் காட்டுகிறார்:
"மனிதர்களால் இயற்கையிலேயே பறக்க முடியாது என்பதற்காக இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும். இல்லையேல், இப்பூமியைப் பாழாக்கியது போதாதென்று, அவர்கள், பறந்து திரியும் வானத்தையும் பாழாக்கியிருப்பர்."
மனித குலத்தின் பாதுகாப்பு அரணாக விளங்கும் இப்பூமி என்ற புதையலை நாம் கருத்துடன் காத்து, நமது அடுத்தத் தலைமுறையினரிடம் வழங்கக்கூடிய பொறுப்புணர்வை இறைவன் இந்தத் தலைமுறையினருக்கு வழங்க வேண்டுமென்று மன்றாடுவோம்.

இந்தப் பூமி என்ற புதையலைப் போலவே, பாரம்பரியம், கலாச்சாரம், மத நம்பிக்கைகள், நன்னெறி விழுமியங்கள், என்று நமது முந்தையத் தலைமுறையினர் கட்டிக்காத்த பல புதையல்களை நமக்கு விட்டுச் சென்றுள்ளனர். இப்புதையல்களைக் கண்டெடுத்த நாம், இவற்றைத் தொலைத்துவிட்டோமோ என்ற அங்கலாய்ப்பு அடிக்கடி எழுகிறது. அல்லது இந்தப் புதையல்கள் வழியே நமக்குக் கொடுக்கப்பட்ட 'அசல்' தங்கம், வெள்ளி ஆகிய விலையுயர்ந்த பண்புகளுக்குப் பதில், 'போலி' தங்கம், வெள்ளி என்று வெளிப்புறம் மட்டுமே மின்னுகின்ற பண்புகளை அடுத்தத் தலைமுறையினருக்கு நாம் விட்டுச் செல்கிறோமா என்ற கேள்வியும் எழுகிறது.

புதையல், முத்து என்ற இரு உவமைகளையும் இணைத்துச் சிந்திக்கும்போது, மற்றோர் எண்ணம் மனதில் எழுகிறது. நிலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த புதையலை, தன் உழைப்பு அதிகம் இல்லாமல், சந்தர்ப்பச் சூழலால், ஒருவர் கண்டுபிடிக்கிறார். முத்து உவமையிலோ, வணிகர் ஒருவர் நல்முத்தைத் தேடிச் செல்கிறார்; இறுதியில் அதைக் காண்கிறார் என்று வாசிக்கிறோம். தானாகவே, அதிர்ஷ்டவசமாகக் கிடைக்கும் புதையலும், தேடிச் சென்று கண்டுபிடிக்கும் முத்தும் நம் வாழ்வில் வந்துசேரும் பல செல்வங்களுக்கு உருவகங்களாக உள்ளன.
செல்வங்கள் எவ்வகையில் வந்தாலும், அவற்றை முழுமையாகப் பெற்று, பயன்பெற நாம் தியாகங்கள் செய்யவேண்டும் என்பதையே, இவ்வுவமைகள் வழியே இயேசு நமக்குச் சொல்லித் தருகிறார்.

நமது உழைப்பு ஏதுமின்றி நம்மை வந்தடைந்த பூமி என்ற புதையலை பாதுகாத்து அடுத்தத் தலைமுறையினரிடம் ஒப்படைக்கும் பொறுப்புணர்வை இறைவன் வழங்க மன்றாடுவோம். நமது முன்னோர் கவனமாக உருவாக்கிய பாரம்பரிய முத்துக்களின் அருமையை உணர்ந்து, அடுத்தத் தலைமுறையினரும் பயன்படுத்தும் வகையில் அம்முத்துக்களைப் பாதுகாத்து இளையோரிடம் ஒப்படைக்கும் வழிகளை நமக்கு இறைவன் காட்டவேண்டும் என்றும் மன்றாடுவோம்.








All the contents on this site are copyrighted ©.