2014-10-27 14:48:08

வாரம் ஓர் அலசல் – உழைப்பவரே உயருகிறார்


RealAudioMP3 ‘உழைப்பவரே உயர்ந்தவர்’; ‘உழைப்பே உயர்வு தரும்’; ‘உழைப்பில் இருந்து ஒதுங்குகிறவர் வாழ்வில் இருந்து ஒதுங்குகிறவர்’.... இப்படி, வாழ்வை உயர்த்த உதவும் கூற்றுக்களை அவ்வப்போது நாம் வாசிக்கிறோம், சிந்திக்கிறோம், செயல்படுத்தவும் முனைகிறோம். வாழ்வில் உண்மையாகவே உழைப்பவர்கள் தோற்பதில்லை, தொடர்ந்து வெற்றிக்குமேல் வெற்றிக்கொடி நாட்டுகிறார்கள் என்பதையும் கண்டு வருகிறோம். கடந்த வெள்ளிக்கிழமையன்று(அக்,24,2014)ஆஸ்திரேலியாவின் சிட்னி நகர செயின்ட் வின்சென்ட் மருத்துவமனையில், இறந்த இதயத்தை மீண்டும் உயிர்பெறச் செய்து, அதை மற்றொரு நோயாளிக்கு வெற்றிகரமாக பொருத்தி சாதனை படைத்துள்ளனர் மருத்துவர்கள். இதனால் உலகில் இதய மாற்று அறுவை சிகிச்சையில் புதிய அத்தியாயமே துவக்கப்பட்டுள்ளது. 57 வயதுடைய மைக்கேல் க்ரிபிளஸ் என்ற நோயாளிக்கே இந்தச் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதயமாற்று அறுவை சிகிச்சையில் வழக்கமாக மூளைச்சாவு அடைந்தவரின் துடிக்கும் இதயத்தை எடுத்து, அதை குளிர்சாதனப் பெட்டியில் நான்கு மணி நேரம்வரை பாதுகாத்துத்தான் மற்றொருவருக்கு பொருத்துவர். இறந்தவரின் இதயம் இதுவரை பயன்படுத்தப்பட்டது இல்லை. இந்த அறுவை சிகிச்சையை முன்னின்று நடத்திய மருத்துவர் குமுத் திதால் கூறுகையில், ‘‘இறந்த இதயத்தில் காற்றை செலுத்தியுள்ளேன். நவீன தொழில்நுட்பத்தில், இதயத்தைப் பாதுகாக்கும் திரவத்தில் வியக்கத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இது இதயத்தைச் சூடாகப் பாதுகாத்து மீண்டும் செயல்பட வைத்துள்ளது என்று கூறியுள்ளார். இந்த மருத்துவர்கள் குழுவில் இந்திய மரபுவழியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரும் இடம்பெற்றுள்ளார்.
அன்பர்களே, இந்த உலக சாதனையை நிகழ்த்தியுள்ள மருத்துவர்கள் குழு, இதற்காக எவ்வளவு காலம் உழைத்திருப்பார்கள்! இதற்குப் பயன்படுத்தப்பட்ட நவீனக் கருவிகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் எத்தனைபேர் ஈடுபட்டிருப்பார்கள்! ஆம். உலகில் சாதிப்பவர்கள் எல்லாருமே உழைப்பால் உயர்ந்தவர்கள்தான். உழைப்பு மட்டுமே நம்மை உயர்த்தும். உழைப்பின் பயனால் கிடைக்கும் உயர்வே மனநிறைவு அளிக்கும். நம்பிக்கையோடு உழைத்தால் வாழ்வில் வெற்றி பெறுவது நிச்சயம். இந்தியாவில் கை ரிக்ஷா இழுத்த ஒருவர், குடியரசுத்தலைவர் மாளிகையின் விருந்தினராகும் நிலைக்கு உயர்ந்திருக்கிறார். இந்த உயர்வுக்கு அவரது கடின உழைப்பே காரணம் என்று தெரிகிறது.
51 வயதாகும் தரம்வீர் கம்போஜ் என்பவர் அரியானா மாநிலத்தின் தம்லா கிராமத்தைச் சேர்ந்தவர். அவர், 1986ம் ஆண்டு தனது தந்தையுடன் ஏற்பட்ட வாய்த்தகராறில் 23 வயது இளைஞராக வீட்டைவிட்டு வெளியேறி பழைய டெல்லிக்கு வந்து வேலைதேடித் திரிந்தார். அவர் எதிர்பார்த்ததைப் போல் எந்த வேலையும் கிடைக்காததால் வாடகைக்கு கை ரிக்ஷா இழுத்து வயிற்றுப் பிழைப்பை ஓட்டி வந்தார். ஆட்களை ஏற்றிக் கொண்டு வியர்க்க வியர்க்க ரிக்ஷாவை இழுத்த தரம்வீருக்கு, அவ்வப்போது காய்கறிகள் மற்றும் மருத்துவக் குணங்கள் அடங்கிய மூலிகைகளை ஏற்றிச் செல்லும் ‘சவாரி’யும் கிடைப்பதுண்டு. அந்த அரிய வகை மூலிகைகள் ஒவ்வொன்றின் மருத்துவப் பலன்களையும் வாடிக்கையாளர்களிடம் கேட்டறிந்து மனதில் பதிய வைத்துக் கொண்டார். எதிர்பாராத விதமாக விபத்து ஒன்றில் சிக்கிய தரம்வீர், அரியானாவில் உள்ள சொந்த ஊருக்கே திரும்பிச் செல்ல நேர்ந்தது. அங்கு வேளாண்மை உற்பத்தியில் அதிக மகசூல் பெறும் நவீன வழிமுறைகளைக் கடைப்பிடித்து, தனது பண்ணை விவசாயத்தில் பல புதுமைகளைப் புகுத்தினார் இவர். அந்தப் பகுதியிலேயே முதன்முதலாக ‘ஹை ப்ரீட்’ ரக தக்காளிகளைப் பயிரிட்டு 1990களில் சாதனை படைத்த தரம்வீருக்கு விவசாயம் சார்ந்த தொழில் கருவிகளை உருவாக்குவதில் அதிக ஆர்வம் ஏற்பட்டது. இதன் விளைவாக, டேப் ரெக்கார்டர் மோட்டர் மூலம் இயங்கும் சிறிய ரக மருந்து தெளிப்பான் இயந்திரம், பயிர்களை அழித்து நாசப்படுத்தும் புழுபூச்சிகளைக் கவர்ந்து இழுத்து கொல்லும் ‘பொறி’ ஆகியவற்றையும், வளர்ந்து நிற்கும் கரும்புப் பயிர்களுக்குச் சேதம் ஏற்படுத்தாமல் நிலத்தை உழும் நவீன ரக கலப்பை இயந்திரம் ஆகியவற்றையும் தனது சொந்த சிந்தனையினாலும், விடாமுயற்சியினாலும் இவர் உருவாக்கினார். இந்தக் கண்டுபிடிப்புகளின் உச்சகட்டமாக ஒரு மணி நேரத்துக்குள் 200 கிலோ தக்காளியைப் பிழிந்து கூழ் தயாரிக்கும் இயந்திரத்தை 2008ம் ஆண்டு தரம்வீர் தயாரித்தார். இந்த நவீன இயந்திரத்தின் மூலம் இதர பழ வகைகள், மூலிகை மற்றும் மலர்களில் இருந்து சாற்றையும் மிக எளிதில், விரைவாகப் பிரித்தெடுக்க முடியும். நாட்டில் அபூர்வமானக் கண்டுபிடிப்புகளை உருவாக்கிய ஐந்து நபர்களை இந்தியக் குடியரசுத்தலைவர் மாளிகை ஆண்டுதோறும் வரவழைத்து இருபது நாட்கள் விருந்தினராக அங்குத் தங்க வைத்து கவுரவித்து வருகிறது. இந்த ஐவரில் ஒருவராக, கவுரவத்துக்குரிய ஒரு விருந்தாளியாக, தரம்வீர் கம்போஜு அவர்கள், கடந்த ஜூலையில், வயிற்றுப் பசியுடன் கை ரிக்ஷா இழுக்கும் கூலித் தொழிலாளியாக அல்ல, மாறாக, அயராத உழைப்பால் அருஞ்சாதனை படைத்தவராக, தனது குடும்பத்தாருடன் அந்த மாளிகையில் தங்கினார் என்று வாசித்தோம். ஆம். உழைப்பவரே உயர்ந்தவர்.
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த சீனாவின் மிகப்பெரிய சிந்தனையாளரும், சீன ஞானியுமான கன்ஃபூசியஸ் அவர்கள் ஒருநாள் ஒரு கிராமம் வழியாகப் போய்க்கொண்டிருந்தார். அப்போது அவர் வழியில் கண்ட காட்சி ஒன்று அவர் மனதை நெருட வைத்தது. வயதான ஒருவர் தனது பேரனுடன் கிணற்றிலிருந்து நீர் மொண்டு வயலில் இறைத்துக்கொண்டிருந்தார். தள்ளாத வயதில் வியர்க்க வியர்க்க அவர் வேலை செய்ததைப் பார்த்து, கன்ஃபூசியஸ் அவர்கள் அவரிடம் சென்றபோது பேரன் மதிய உணவு எடுத்துவரப் புறப்பட்டான். எனவே அந்த வயதானவரிடம், இந்த வயதில் நீங்கள் இவ்வளவு கஷ்டப்பட வேண்டுமா, எவ்வளவோ பிற வசதிகள் வந்துவிட்டனவே, காளை மாடுகள், குதிரைகள் ஆகியவற்றை வைத்து நீர் எடுக்கலாமே, உங்களுக்கு இது தெரியாதா என்று கொஞ்சம் படபடப்புடன் சப்தமாகவே கேட்டார் கன்ஃபூசியஸ். அதற்கு அந்த முதியவர், எனக்கு காது நன்றாகக் கேட்கும், கொஞ்சம் மெதுவாகப் பேசுங்கள், நீங்கள் சொல்வது என் பேரனுக்குக் கேட்டுவிடப் போகிறது என்று சொன்னார். ஆனால் கன்ஃபூசியஸ் அவர்கள், உங்கள் பேரனுக்குக் கேட்கட்டுமே என்று, தான் முதலில் சொன்னதையே மீண்டும் உரக்கச் சொன்னார். அதற்கு அந்த முதியவர்....
எனக்கு இதுபற்றி நன்றாகவே தெரியும். தயவுசெய்து இதை உரக்கச்சொல்லி விடாதீர்கள். என் பேரனுக்குக் கேட்டுவிடப் போகிறது, அதன்பிறகு அவனுக்கு உழைக்கவே மனம் வராது, உழைப்பிலிருந்து அவன் விலகி விடுவான், உழைப்பிலிருந்து விலகுவது வாழ்விலிருந்து விலகுவதாகும், உழைப்பு துண்டிக்கப்பட்டால் உலகமே துண்டிக்கப்படும், கஷ்டப்பட்டு உழைப்பதால் என்ன குறைந்துவிடப்போகிறது, கஷ்டப்பட்டு உழைப்பவர்தான் மகிழ்ச்சியை அனுபவிக்க முடியும், உழைக்கத் தவறியவர்க்கு மகிழ்வின் சுகம் தெரியுமா என்று சொன்னார். அதைக் கேட்ட கன்ஃபூசியஸ் அவர்கள், அந்த முதியவரை அப்படியே அணைத்துக்கொண்டாராம்.
அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் ஆபிரகாம் லிங்கன் பற்றி நாம் வாசித்திருக்கிறோம். ஒருமுறை அவரை வெளியே அழைத்துச் செல்வதற்கு இராணுவத் தளபதி ஒருவர் வந்தார். அந்த நேரத்தில் லிங்கன் அவர்கள், தனது காலணிகளுக்கு பாலிஷ் போட்டுக்கொண்டிருந்தார். இதைப் பார்த்து அதிர்ந்த அந்தத் தளபதி, உங்கள் காலணிகளுக்கா... என்று இழுக்க..., அதைக் கேட்டுப் புன்னகைத்துக்கொண்டே, ஆமாம், நீங்கள் வேறு யாருடைய காலணிகளுக்கு பாலிஷ் போடுவீர்கள் என்று கேட்டுக்கொண்டே அவற்றை அணிந்துகொண்டு புறப்பட்டார் லிங்கன். அப்போது, அந்தத் தளபதி, மற்றவர் காலணிகளுக்கு நான் பாலிஷ் போட்டதில்லை, எனது காலணிகளுக்குத்தான் மற்றவர்கள் பாலிஷ் போடுவார்கள் என்று கொஞ்சம் கோபமாகவே பதில் சொன்னார். அதற்கு ஆபிரகாம் லிங்கன் அவர்கள், அப்படியா, அது இன்னும் கேவலமான விடயம், நமக்காகப் பிறரை வேலை வாங்குவது வெட்கப்பட வேண்டிய விடயம் என்று சொன்னார்.
அன்பர்களே, குழந்தைகள், சிறார்கள், சமூகத்தில் வாய்ப்பிழந்தோர், குரலற்றோர் போன்றோரை வேலை வாங்கியே பணத்தில் குளிக்கும் ஒரு பெரிய கும்பல் இந்த உலகில் இருக்கத்தான் செய்கிறது. இந்தத் தீபாவளிக்கென பட்டாசுகள் தயாரித்தபோது தொழிற்சாலைகளில் எத்தனை சிறார்கள் முகத்திலும் பிற உறுப்புக்களிலும் காயங்களுடன் தொடர்ந்து வேலை செய்தார்கள்! தனது குடும்பத்தின் வயிற்றை நிறைக்க இச்சிறார் கூட்டம் ஆபத்தான தொழிற்சாலை தேடி ஓடுகிறது, ஆனால் இன்னொரு கூட்டம் வயிற்றைக் குறைக்க ஓடுகிறது.... இஞ்ஞாயிறன்று ஊடகம் ஒன்றில் நாம் வாசித்த ஒரு செய்தி இதோ....
சவுதி மன்னர் தனது மகளின் திருமணத்திற்கு, தனது அன்பின் அடையாளமாக இதுவரை யாரும் அளித்திராத தங்கக் கழிப்பறையைப் பரிசாகக் கொடுத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளாராம். தன் அன்பு மகளுக்கு தன் சொத்தின் பெரும்பகுதியை செலவு செய்து முழுக்க, முழுக்க தங்கத்தில் உருவாக்கப்பட்ட கழிப்பறையைப் பரிசளித்துள்ளார்.
இந்தத் தகவல், அன்பர்களே, உங்கள் சிந்தனைக்கு மட்டுமே. காந்திஜி அவர்கள், தனது அறையைத் தானே கூட்டினார், தனது துணிகளை தானே துவைத்தார், தனது இல்லத்தில் தங்கியவர் கழிப்பறைச் செல்வதற்கு, தானே தண்ணீர் எடுத்துக் கொடுத்து உதவினார் என்றெல்லாம் வாசிக்கிறோம். ஆனால், தனது காலணி வார்களைக் கட்டுவதற்குக்கூட வேலையாள்கள் தேவைப்படும் பணம்படைத்தவர்களையும் நாம் பார்க்கிறோம். ஆனால் உழைப்பதால் உடல் உரமடைகிறது, பொலிவடைகின்றது. உழைப்பவர்க்குச் செரிமானக் கோளாறு இருக்காது. வாழ்நாள் முழுவதும் வெற்றிபெற தொடர்ந்து விடாமுயற்சியுடன் கடுமையாக உழைப்பது அவசியம். இதற்கு, சுவாமி விவேகானந்தர் சொன்னது போல, ஒவ்வொருவரிலும் அளவற்ற ஆற்றலும் அளவற்ற அறிவும், வெல்லமுடியாத சக்தியும் உள்ளன. இவற்றை ஒவ்வொருவரும் வெளியே கொண்டுவர முயற்சி செய்தல் பலன்தரும். எனவே, வாழ்வில் உழைப்பின் பலனை உணருவோம். உழைப்போம், உயர்வடைவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.