2014-10-27 16:02:33

திருத்தந்தை: நாம் ஒளியின் மக்களா? இருளின் மக்களா? சிந்திப்போம்


அக்.27,10,2014. நாம் ஒவ்வொருவரும் ஒளியின் மக்களாகச் செயல்படுகிறோமா? அல்லது இருளின் மக்களாக உள்ளோமா என்பது குறித்து சிந்திக்கவேண்டும் என அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் இத்திங்களன்று காலை திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வெளிவேடக்காரராய் இருப்பது, அர்த்தமற்ற வார்த்தைகளைப் பேசுவது, தீயவைகளைப் பேசுவது, நன்னெறி விழுமியங்களுக்குப் புறம்பானவைகளைப் பேசுவது என்பவை நற்செய்தியின் வார்த்தைகள் அல்ல, அவை வெறுமையானவை மற்றும் வெளிவேடத்தோடு இணைந்தவை என்றார்.
கடவுளைப் பின்பற்றுவது, அன்பிலும் நன்மைத்தனத்திலும், தாழ்ச்சியிலும் நடப்பது ஒளியின் மக்களுக்குரிய அடையாளம் என்றும் எடுத்துரைத்த திருத்தந்தை, கருணையுடையவர்களாக, பிறரை மன்னிப்பவர்களாக, அன்பில் நடைபோடுபவர்களாக செயல்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
ஒளியின் மக்கள், இருளின் மக்கள் என்ற இரு நிலைகளுக்கு இடையில், சாம்பல் நிறத்தின் மக்கள் என ஒரு குழு உள்ளதையும் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவர்கள் கடவுளின் மக்களாகவும் தீயோனின் மக்களாகவும் இல்லாமல், குழப்பத்தையும் எதிர்மறை சாட்சியங்களையும் விதைப்பவர்களாக உள்ளனர் என உரைத்தார்.
நாம் இந்த மூன்று குழுக்களுள் எதனைச் சார்ந்திருக்கிறோம் என்பது குறித்து சிந்திக்கவேண்டியது அவசியம் எனவும் அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.