2014-10-25 15:51:03

ஐக்கிய நாடுகள் நிறுவன தினம் அக்.24


அக்.25,2014. வறுமை, நோய்கள், பயங்கரவாதம், வெப்பநிலை மாற்றம் என உலகு தொடர்ந்து அச்சுறுத்தப்பட்டுவரும் இவ்வேளையில், ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் இருப்பு இக்காலத்திற்கு அதிகம் தேவைப்படுகின்றது என இவ்வெள்ளியன்று கூறினார் ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன்.
அக்.24, இவ்வெள்ளியன்று சிறப்பிக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் 69வது ஆண்டு நிறைவுக்கென செய்தி வழங்கிய பான் கி மூன் அவர்கள், சமுதாயத்தில் நலிந்த மற்றும் ஓரங்கட்டப்பட்ட மக்களுக்கான நம் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிசெய்வோம் எனக் கேட்டுள்ளார்.
கொத்தடிமை, மனித வணிகம், பாலியல் அடிமைத்துவம், தொழிற்சாலைகளிலும், வயல்களிலும் சுரங்கங்களிலும் பாதுகாப்பற்ற சூழல்கள் போன்றவைகளில் இன்னும் இலட்சக்கணக்கான மக்கள் துன்புற்று வருவதையும் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார் பான் கி மூன்.
மனித மாண்புக்கு ஊறுவிளைவிக்கும் இத்தகைய துன்பங்களை அகற்றும் நோக்கத்திலேயே ஐக்கிய நாடுகள் நிறுவனம் உருவாக்கப்பட்டது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள ஐ.நா. பொதுச்செயலர், அனைவரும் பொதுநலனுக்காக உழைக்க முன்வருவோம் எனக் கேட்டுள்ளார்.
1945ம் ஆண்டின் ஐ.நா. அறிக்கை அமலுக்கு வந்த அக்டோபர் 24ம் தேதி, ஐக்கிய நாடுகள் நிறுவன தினமாக, 1948ம் ஆண்டிலிருந்து சிறப்பிக்கப்பட்டு வருகிறது.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.