2014-10-23 16:19:50

வத்திக்கானில் நடைபெற்ற உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றம் குறித்து அருள்பணி லொம்பார்தி பேட்டி


அக்.23,2014. கத்தோலிக்கத் திருஅவை இவ்வுலகில் பயணம் செய்யும் ஒரு திருப்பயணி என்ற எண்ணத்தை அண்மையில் நடந்து முடிந்த ஆயர்கள் சிறப்பு மாமன்றம் உணர்த்தியது என்று திருப்பீட செய்தித் தொடர்பாளர் அருள்பணி Federico Lombardi அவர்கள் கூறினார்.
குடும்பங்களை மையக்கருத்தாகக் கொண்டு, இம்மாதம் 5ம் தேதி முதல் 19ம் தேதி முடிய வத்திக்கானில் நடைபெற்ற உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றம் குறித்து வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த அருள்பணி லொம்பார்தி அவர்கள், இம்மாமன்றத்தின் தனித்துவம் குறித்து எடுத்துரைத்தார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மாமன்றத்தின் துவக்கத்திலும், முடிவிலும் மட்டுமே தன் கருத்துக்களை எடுத்துரைத்தார் என்பதும், ஏனைய நாட்களில் அவர் அனைவருக்கும் செவிமடுத்தார் என்பதும் மாமன்றத்தில் கருத்துப் பரிமாற்றங்கள் சுதந்திரமாக நடைபெறுவதற்கு வழிவகுத்தது என்று அருள்பணி லொம்பார்தி கூறினார்.
குடும்பம், மணமுறிவு, மறுமணம், ஒரு பாலின ஈர்ப்பு ஆகியவை குறித்து வெளிப்படையான, சுதந்திரமான கருத்துப் பரிமாற்றங்கள் நிகழ்ந்தது வரவேற்கத்தக்க மாற்றம் என்று அருள்பணி லொம்பார்தி அவர்கள் தன் பேட்டியில் சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.