திருத்தந்தையுடன் Bayern Munich கால்பந்தாட்டக் குழுவினர் சந்திப்பு
அக்.23,2014. ஜெர்மன் நாட்டில் புகழ்பெற்று விளங்கும் Bayern Munich என்ற கால்பந்தாட்டக்
குழுவினரை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இப்புதனன்று வத்திக்கானில் சந்தித்தார். பதினைந்து
நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பு தங்கள் வாழ்வில் மறக்கமுடியாத ஓர் அனுபவம் என்று இக்குழுவின்
தலைவர் Philip Lahm செய்தியாளர்களிடம் கூறினார். திருத்தந்தை ஆற்றிவரும் பல்வேறு பிறரன்புப்
பணிகளுக்கென்று இக்குழுவின் சார்பில் 10 இலட்சம் யூரோக்கள் நன்கொடையாக வழங்கப்பட்டது
என்றும், இக்குழுவினரின் கையொப்பங்கள் அடங்கிய ஒரு கால்பந்தும், 1 என்ற எண்ணும் 'பிரான்சிஸ்'
என்ற பெயரும் பதித்த குழுவின் சீருடை ஒன்றும் திருத்தந்தைக்கு வழங்கப்பட்டது என்றும்
குழவின் தலைவர் Lahm கூறினார். மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அர்ஜென்டீனாவில்
பேராயராகப் பணியாற்றியபோது அங்கு நிகழ்ந்த ஒரு இரயில் விபத்தில் பலியானோரின் குடும்பங்களிலிருந்து
9 பேர் வத்திக்கான் சாந்தா மார்த்தா இல்லத்தில் இச்செவ்வாயன்று நடைபெற்ற திருப்பலியில்
கலந்து கொண்டனர் என்றும், திருப்பலிக்குப் பின்னர் அவர்கள் திருத்தந்தையை ஒரு மணி நேரம்
தனியாகச் சந்தித்தனர் என்றும் Zenit செய்தி நிறுவனம் கூறியது. இந்த விபத்தைக் குறித்து
நடைபெறும் வழக்குகளில் பாதிக்கப்பட்டக் குடும்பங்களுக்கு நீதி கிடைக்க தான் தொடர்ந்து
செபித்து வருவதாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இக்குழுவினர் வழியே ஒலி, ஒளி செய்தி
ஒன்றை அனுப்பியுள்ளார் என்றும் Zenit செய்தி கூறியுள்ளது.