2014-10-23 16:15:31

திருத்தந்தை - சமுதாயத்தில் நலிவுற்றோருக்கு சட்டங்கள் காட்ட வேண்டிய தனிப்பட்ட அக்கறை


அக்.23,2014. பாகுபாடுகள் ஏதுமின்றி, ஒவ்வொரு மனிதரின் மாண்பையும், உரிமையையும் நிலைநிறுத்துவதும், நீதி, அமைதி ஆகிய விழுமியங்களை வளர்ப்பதும் திருஅவை மேற்கொண்டு வரும் நற்செய்தி அறிவிப்புப் பணி என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
குற்றவியல் சட்டங்களை நிலைநிறுத்தும் பன்னாட்டு அறிஞர்கள் அடங்கிய ஒரு குழுவை இவ்வியாழனன்று திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, நீதி வழியில் அவர்கள் ஆற்றிவரும் பணிகளுக்கு தன் பாராட்டையும், நன்றியையும் தெரிவித்தார்.
பழிக்குப் பழி வாங்குதல், பொதுவான தவறுகளை ஒரு சிலர் மீது சுமத்துதல் ஆகிய எண்ணங்கள் குற்றங்களுக்கான சட்டங்களை உருவாக்குவதில் ஆற்றும் பங்கைக் குறித்து திருத்தந்தை தன் உரையின் துவக்கத்தில் பேசினார்.
மனித வாழ்வு, மாண்பு ஆகியவற்றின் முதன்மை இடம், மரண தண்டனை, சித்திரவதைகள், ஆகியவற்றைக் குறித்து திருத்தந்தை தன் கருத்துக்களை முன்வைத்தார்.
சட்டத்தின் முன் சிறுவர், சிறுமியருக்கும், வயது முதிர்ந்தோருக்கும், சமுதாயத்தில் நலிவுற்றோருக்கும் காட்டப்பட வேண்டிய தனிப்பட்ட அக்கறை குறித்து திருத்தந்தை தன் எண்ணங்களை வெளியிட்டார்.
மனித மாண்பைக் குலைக்கும் வண்ணம் உலகின் பல நாடுகளில் பரவியிருக்கும் மனித வர்த்தகம், அரசுகளில் நிலவி வரும் ஊழல் ஆகிய குறைகளையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.
சிறு குற்றங்களில் சிக்கிக் கொள்ளும் வறியோருக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் வேளையில், பெரும் சுறாமீன்களைப் போல் பலரை விழுங்கிவரும் குற்றவாளிகள் சுதந்திரமாகத் திரிவதைக் குறித்தும் திருத்தந்தை தன் உரையில் எடுத்துரைத்தார்.
அனைத்து நீதிக்கும் ஊற்றான இறைவன் குற்றவியல் துறையில் பணியாற்றும் அனைவரையும் ஆசீர்வதிக்கவேண்டும் என்ற விண்ணப்பத்துடன் திருத்தந்தை தன் உரையை நிறைவு செய்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.