2014-10-22 15:54:57

வேற்றுமைகளைப் புரிந்து, ஏற்றுக்கொள்வதன் வழியே உரையாடலை வளர்க்க முடியும் - ஆயர் Felix Machado


அக்.22,2014. நம்மைப் பிரித்துவைக்கும் வேற்றுமைகளைப் புரிந்து, ஏற்றுக்கொள்வதன் வழியே உரையாடலை வளர்க்க முடியும் என்று இந்திய ஆயர் பேரவையின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
இந்தியாவில் கொண்டாடப்படும் தீபாவளி பெருவிழாவையொட்டி, பல்சமயப் பணிகள் திருப்பீட அவை வழங்கியுள்ள செய்தியைக் குறித்து, இந்திய ஆயர் பேரவையின் பல்சமய மற்றும் கிறிஸ்தவ ஒன்றிப்பு பணிக் குழுவின் தலைவர் ஆயர் Felix Machado அவர்கள் தன் கருத்துக்களை வெளியிட்டபோது இவ்வாறு கூறினார்.
இந்தியாவில் பணியாற்றிவரும் கத்தோலிக்கத் திருஅவை, தன் கருத்துக்களை யார் மீதும் திணிக்காமல் பணியாற்றி வருகிறது என்றும், சமுதாயத்தில் நலிவுற்றோர் சார்பில் இந்தியத் திருஅவை பணியாற்றி வருகிறது என்றும் ஆயர் Machado அவர்கள் ஆசிய செய்திக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.
ஏழைகளை ஒதுக்கிவைக்கும் அக்கறையற்ற மனநிலை உலகமயமாகி வருவதைக் குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தெரிவித்து வரும் கவலை, பல்சமயப் பணிகள் திருப்பீட அவை வழங்கியுள்ள செய்தியில் வெளிப்படுகிறது என்று ஆயர் Machado அவர்கள் சுட்டிக்காட்டினார்.
மதம் என்ற எல்லையைக் கடந்து, துன்புறும் அனைத்து வறியோருக்கும், நோயுற்றோருக்கும் இந்தியத் திருஅவை ஆற்றிவரும் பணிகள், மதங்களுக்கிடையே நிலவவேண்டிய புரிதலுக்கு நல்லதொரு தீர்வு என்று ஆயர் Machado அவர்கள் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.