2014-10-22 15:53:51

மத்தியக் கிழக்குப் பகுதியில் உரையாடல்கள் வழி தீர்வுகள் காணப்படவேண்டும் - பேராயர் Auza


அக்.22,2014. மத்தியக் கிழக்குப் பகுதியில் உரையாடல்கள் வழி தீர்வுகள் காணப்படவேண்டும் என்பதிலும், அப்பகுதியில் துன்புறும் அனைவருக்கும் உதவுவதிலும் திருப்பீடம் எப்போதும் கருத்தாக இருந்து வருகிறது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஐ.நா. தலைமையகத்தில் திருப்பீடத்தின் சார்பில் நிரந்தரப் பார்வையாளராகப் பணியாற்றும் பேராயர் Bernardito Auza அவர்கள், "மத்தியக் கிழக்கின் தற்போதைய நிலவரம், பாலஸ்தீனம் குறித்த கேள்வி" என்ற தலைப்பில் நடைபெறும் ஒரு கருத்தரங்கில் இச்செவ்வாயன்று உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.
நடைபெறும் அக்டோபர் மாதத்தில் மத்தியக் கிழக்குப் பகுதியில் பணியாற்றும் திருப்பீடத் தூதர்களுடனும், இத்திங்களன்று கர்தினால்கள் அவையோடும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொண்ட சந்திப்புகளில் மத்தியக் கிழக்குப் பகுதியின் நிலை குறித்து பேசப்பட்டதை பேராயர் Auza அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.
இஸ்ரேல், பாலஸ்தீனம் என்ற இரு நாடுகளும் தங்களுடைய தனித்துவத்துடன் ஒற்றுமையாக வாழ்வதற்கு துணிவுடன் சில முடிவுகள் எடுக்கப்படவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் புனித பூமித் திருப்பயணத்தில் கூறிய வார்த்தைகளை பேராயர் Auza அவர்கள் வலியுறுத்தினார்.
மத்தியக் கிழக்குப் பகுதியிலும் மற்றும் உலகின் அனைத்து நாடுகளிலும் உள்ள மதத் தலைவர்கள், மதத்தின் பெயரால் வன்முறையை வளர்க்காமல், அமைதியை வளர்க்கும் உரையாடல் முயற்சிகளில் ஈடுபட திருப்பீடம் வேண்டுகோள் விடுப்பதாக பேராயர் Auza அவர்கள் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.