2014-10-22 15:56:00

"புலம்பெயர்தலின் கலாச்சார சவால்: ஆபத்துக்களும், வாய்ப்புக்களும்" கிரகோரியன் பல்கலைக் கழக பன்னாட்டுக் கருத்தரங்கு


அக்.22,2014. "புலம்பெயர்தலின் கலாச்சார சவால்: ஆபத்துக்களும், வாய்ப்புக்களும்" என்ற தலைப்பில், அக்டோபர் 27, 28 ஆகிய நாட்களில் உரோம் நகரில் உள்ள கிரகோரியன் பல்கலைக் கழகத்தில் பன்னாட்டுக் கருத்தரங்கு ஒன்று நடைபெறவுள்ளது.
"மனித இயல்பின் வலுவிழந்த நிலை, கிறிஸ்துவின் காயங்களிலிருந்து நம்மைத் தூரப்படுத்துகின்றது. நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய கிறிஸ்தவப் பண்புகள் இந்தத் தூரத்தைக் குறைக்கும்" என்று, 2014ம் ஆண்டு புலம்பெயர்ந்தோர் உலக நாளுக்கென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வழங்கியுள்ள செய்தியை மையப்படுத்தி இக்கருத்தரங்கு நடைபெறுகிறது.
திருப்பீடக் கலாச்சார அவையின் தலைவர் கர்தினால் Antonio Maria Vegliò, ஐ.நா. அவையில் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளராகப் பணியாற்றும் பேராயர் சில்வானோ தொமாசி ஆகியோர் இக்கருத்தரங்கில் உரையாற்றுகின்றனர் என்று கிரகோரியன் பல்கலைக் கழக அறிவிப்பு கூறுகின்றது.
பல நாடுகளிலிருந்து வருகை தரும் பேச்சாளர்கள், பல நாடுகளின் தூதர்கள் இக்கருத்தரங்கில் கலந்து கொள்கின்றனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.