2014-10-22 15:27:33

அமைதி ஆர்வலர்கள் : 1958ல் நொபெல் அமைதி விருது பெற்ற Georges Pire


அக்.22,2014. 1958ல் நொபெல் அமைதி விருது பெற்ற தோமினிக் பிர்(Dominique Pire) அவர்கள், பெல்ஜிய நாட்டுக் கத்தோலிக்க அருள்பணியாளர். இவர் தோமினிக்கன் துறவு சபையைச் சேர்ந்தவர். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பாவில் புலம்பெயர்ந்த மக்களுக்கு இவர் ஆற்றிய மகத்தான சேவையைப் பாராட்டி 1958ல் இவருக்கு நொபெல் அமைதி விருது வழங்கப்பட்டது. Georges Charles Clement Ghislain Pire என்ற திருமுழுக்குப் பெயரைக் கொண்ட இவர், தனது 18வது வயதில், 1928ம் ஆண்டில் Huy நகரிலுள்ள La Sarte தோமினிக்கன் துறவு இல்லத்தில் சேர்ந்தார். நான்காண்டுகள் பயிற்சி பெற்ற பின்னர் 1932ம் ஆண்டு செப்டம்பர் 23ம் தேதியன்று அச்சபையில் இறுதி அர்ப்பணம் எடுத்து, அச்சபையைத் தோற்றுவித்த தோமினிக் என்ற பெயரையே தனது பெயராகவும் ஏற்றார். 1936ல் உரோம் ஆஞ்சலிக்கெம் பாப்பிறைப் பல்கலைக்கழகத்தில் இறையியலில் முனைவர் பட்டமும் பெற்றார். தனது படிப்பை முடித்து மீண்டும் Huy சென்று, La Sarte தோமினிக்கன் துறவு இல்லத்தில் ஏழைக் குடும்பங்கள் மாண்புடன் வாழ்வதற்கு உதவுவதற்கென தனது வாழ்வை அர்ப்பணித்தார். இரண்டாம் உலகப் போரின்போது, எதிர்ப்பு இயக்கத்திற்கு ஆன்மீக வழிகாட்டி, புலனாய்வுப் பணிக்கும் மறைவாகத் தப்பித்துச்செல்லும் அமைப்புக்கும் உதவியாளர் உட்பட பல செயல்களில் ஈடுபட்டார். கடத்தப்பட்ட நேசநாடுகளின் விமானப்படை ஓட்டுனர்கள் தங்களின் சொந்தப் படைகளுக்குத் திரும்புவதற்கு உதவினார். இத்தகைய இவரின் அமைதிப் பணிகளுக்காக, வெற்றிக் குருத்துடன் கொண்ட இராணுவச் சிலுவை பதக்கம், போர்ப் பதக்கம், தேசிய அங்கீகாரப் பதக்கம், குறுக்கான வாள்களைக்கொண்ட எதிர்ப்புப் பதக்கம் எனப் பல விருதுகளைப் பெற்றார் அருள்பணியாளர் Georges Pire.
இரண்டாம் உலகப் போரினால் புலம்பெயர்ந்த மக்கள் பற்றிய ஆய்வை 1949ம் ஆண்டில் தொடங்கி, ரைன் நதி முதல் டான்யூப் நதிவரை ஆறுபதாயிரம் புலம்பெயர்ந்த மக்கள் என்ற தலைப்பில் ஒரு நூலையும் வெளியிட்டார் அருள்பணியாளர் Georges Pire. இம்மக்களுக்கு உதவுவதற்கென ஒரு நிறுவனத்தை உருவாக்கினார். 1950களில் ஆஸ்ட்ரியாவிலும் ஜெர்மனியிலும் பல கிராமங்களை உருவாக்கி, புலம்பெயர்ந்த மக்கள் தங்குவதற்கு வழிசெய்தார். பெல்ஜியத்திலும் வயதானவர்களுக்கு இல்லங்களை அமைத்தார். இவர் ஒரு தோமினிக்கன் துறவு சபை அருள்பணியாளராக இருந்தாலும், தனது சொந்த விசுவாச வாழ்வை, தனது சமூகநீதிக்கானப் பணிகளோடு குழப்பவில்லை. 1958ல் நொபெல் அமைதி விருது பெற்ற பின்னர், அமைதி பற்றி உலக அளவில் புரிந்துகொள்ளுதலை ஏற்படுத்தும் நோக்கத்தில், அமைதிப் பல்கலைக்கழகம் என்ற அமைப்பைத் தொடங்கினார் இவர். அமைதிக்காக உண்மையிலேயே உழைக்கும் எவரும் இந்த அமைதிப் பல்கலைக்கழகத்தில் உறுப்பினராகச் சேரலாம் எனவும் இவர் அறிவித்தார். இன்னும், உலக நண்பர்கள் அமைப்பு, உலக நன்கொடையாளர்கள் அமைப்பு போன்ற அரசு-சாரா அமைப்புகளை ஆரம்பித்தார் அருள்பணியாளர் Georges Pire. உலக அளவில் பல்வேறு மரபுகளைக் கொண்டவர் மத்தியில் சகோதரத்துவ உரையாடலை ஊக்குவித்து அமைதிக்காக அனைவரும் உழைப்பதற்குத் தூண்டுவதே உலக நண்பர்கள் அமைப்பின் நோக்கம்.
1960ல் பாகிஸ்தானுக்குச் சென்று வந்த பின்னர், வறுமையை ஒழிக்காமல் அமைதியை அடைய முடியாது என்பதை உணர்ந்தார் அருள்பணியாளர் Georges Pire. அமைதியின் தீவுகள் என்ற ஓர் அரசு-சாரா அமைப்பை உருவாக்கி, வளரும் நாடுகளில் கிராம மக்களின் நீண்டகால முன்னேற்றத்திற்காகத் தன்னை அர்ப்பணித்தார் இவர். உணவு உற்பத்தியை அதிகரித்தல், மருத்துவச் சேவைகளை மேம்படுத்துதல், கல்வி மற்றும் பொழுதுபோக்குச் சார்ந்த திட்டங்களை வளர்த்தல் போன்றவைகளில் கவனம் செலுத்தினார். அருள்பணியாளர் Georges Pire அவர்களின் திட்டங்களில் கிராம முன்னேற்றம் முக்கிய அங்கம் வகித்தது. 1962ம் ஆண்டு முதல் 1967ம் ஆண்டுவரை பங்களாதேஷின் கோகிராவில் வளர்ச்சித்திட்டப் பணிகளை நடத்திய பின்னர் தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள களக்காட்டிலும் பணிகளைகளைத் தொடங்கினார். இந்தக் கத்தோலிக்க அருள்பணியாளர், அமைதியையும் மனித மாண்பையும் ஊக்குவிக்கும் தனது 32 வருடப் பணிகளின்போது தனது La Sarte தோமினிக்கன் துறவு இல்லத்தில் தங்கிக்கொண்டு பல இடங்களுக்கும் சென்று வந்தார். இவர் தனது 58வது வயதில் 1969ம் ஆண்டு சனவரி 30ம் தேதி லுவெய்ன் கத்தோலிக்க மருத்துவமனையில் காலமானார்.
அருள்பணியாளர் Georges Pire அவர்கள், 1958ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதியன்று, நொபெல் விருது பெற்ற நிகழ்ச்சியில், "சகோதரத்துவ அன்பு : அமைதிக்கு அடித்தளம்" என்ற தலைப்பில் உரையாற்றினார். அமைதி என்பது, ஏதோ அதைப் பற்றிச் சொற்பொழிவாற்றுவது அல்ல, ஆனால் அதை நடைமுறைப்படுத்துவதாகும். நாம் அனைவருக்கும் உதவி மனிதத் துன்பங்களை அகற்ற வேண்டும். உலகில் எந்த ஒரு மனிதரும் மறக்கப்பட்டவராய் இருக்கக் கூடாது. மத நம்பிக்கையாளரோ, நம்பிக்கையற்றவரோ யாராக இருந்தாலும் உங்களின் பாசத்தையும் ஆதரவையும் தந்து உண்மையான நட்புறவு மேலும் வளர உதவுங்கள் என்று அவர் உரையாற்றினார். அமைதி ஆர்வலரான அருள்பணியாளர் Georges Pire அவர்கள், இவ்வுலகில் அமைதியின் ஒரு முத்தமாக, அமைதியின் ஒளிக்கற்றையாக, தனிமையை உணரும் இதயத்துக்கு ஆறுதலாக, ஓர் உன்னத வாக்குறுதியாக, கடவுளின் கரங்கள் போன்று வருடிக் கொடுப்பவராக வாழ்ந்தவர் எனப் போற்றப்படுகிறார்.
அருள்பணியாளர் Georges Pire, 1910ம் ஆண்டு பிப்ரவரி 10ம் தேதி பெல்ஜியத்தின் Dinantல் பிறந்தார். 1914ல் முதல் உலகப் போர் தொடங்கியவுடன், ஜெர்மன் படைகளின் தாக்குதல்களிலிருந்து தப்பிப்பதற்காக, இவரது குடும்பம் பிரான்சுக்குப் படகில் இடம்பெயர்ந்தது. பின்னர் போர் முடிந்தபோது 1918ல் மீண்டும் இவரது குடும்பம் Dinantக்கு வந்தது. அச்சமயம் அந்நகரம் போரினால் மிகவும் சேதமடைந்திருந்தது. நான்கு பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் அருள்பணியாளர் Georges Pire அவர்களே மூத்தவர். புலம்பெயரும் வாழ்வின் துன்பங்களை இவர் சிறு வயதிலேயே அனுபவித்தவர். இத்துன்ப அனுபவங்களே, இந்தக் கத்தோலிக்க அருள்பணியாளரின் 32 வருட அமைதி மற்றும் மனித மாண்புப் பணிகளுக்கு ஊக்கமளித்தன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.