2014-10-21 15:49:38

திருத்தந்தை : இயேசுவுக்காக எப்படிக் காத்திருப்பது என்பதை அறிந்தவரே கிறிஸ்தவர்


அக்.21,2014. இயேசுவுக்காகக் காத்திருப்பது எப்படி என்பதை அறிந்த மனிதரே கிறிஸ்தவர், இவர் நம்பிக்கையின் மனிதர் என்று, இச்செவ்வாய் காலை வத்திக்கான் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருமண விருந்துக்குப் போயிருந்த தம் தலைவர், எபேசு திருமுகம் ஆகிய இத்திருப்பலியின் இரு வாசகங்கள் குறித்த சிந்தனைகளை தனது மறையுரையில் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
திருமண விருந்துக்குச் சென்று, இரவில் வெகுநேரம் கழித்துத் திரும்பி வரும் தலைவரோடு தன்னை ஒப்புமைப்படுத்தி, அத்தலைவருக்காக விளக்குகளை ஏற்றி அவருக்காக விழித்திருந்து காத்திருக்கும் பணியாளர்கள் பேறுபெற்றவர்கள் என்று நற்செய்தி வாசகத்தில் இயேசு தம் சீடர்களிடம் கூறுகிறார். இத்தகைய பணியாளருக்குத் தலைவரே உணவு பரிமாறுகிறார் என நற்செய்தி கூறுகிறது என்றுரைத்தார் திருத்தந்தை.
தலைவரான கிறிஸ்து, கிறிஸ்தவர்களுக்காகச் செய்யும் இத்தொண்டு, கிறிஸ்தவர்களுக்குத் தனித்துவத்தை அளிக்கின்றது, கிறிஸ்து இன்றி நமக்குத் தனித்துவத்துவம் இல்லை என்றுரைத்த திருத்தந்தை, ஒரு காலத்தில் நீங்கள் கிறிஸ்து இன்றி இருந்தீர்கள் என்று புனித பவுல் கூறும் முதல் வாசகத்தோடு இணைத்து விளக்கினார்.
மக்களோடு சமாதானமாக நாம் இல்லாவிடில் அங்கே நம்மைப் பிரிக்கும் சுவர் எழுப்பப்படுவதை நாம் அறிவோம், எனினும் இந்தச் சுவரை உடைத்தெறிவதற்கு இயேசு பணி செய்கிறார் என்றும் உரைத்த திருத்தந்தை, நாம் இயேசுவுக்காகக் காத்திருக்க வேண்டும், இப்படிச் செய்யாதவர்கள் இயேசுவுக்குக் கதவை மூடி விடுகின்றனர், அமைதி, குடியுரிமை, குழுமம் போன்றவற்றுக்கான அவரின் பணியை அவர்கள் செய்யவிடுவதில்லை என்றும் கூறினார்.
நாம் எப்படிக் காத்திருக்க வேண்டுமென்ற கேள்வியை எழுப்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நியத் தெய்வங்களை வழிபடுகிறவர்கள்போல கிறிஸ்தவர்களாகிய நாம் அடிக்கடி இயேசுவை மறந்துவிடுகின்றோம், என்னால் எல்லாம் முடியும் என்ற உணர்வில் தன்னலச் செயல்களைச் செய்கிறோம், இது இறுதியில் நம்மைப் பெயரின்றி, குடியுரிமையின்றி, மோசமான நிலையில் கொண்டுசேர்க்கும் எனவும் எச்சரித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.