2014-10-21 15:50:41

உலகில் சிறார்க்கெதிரான வன்முறை அதிகரிப்பு, திருப்பீடம்


அக்.21,2014. சிறாரின் உரிமைகள் குறித்து விவாதித்துவரும், ஐ.நா.வின் சமூக, மனிதாபிமான மற்றும் கலாச்சாரக் குழுவுக்கு அறிக்கை சமர்ப்பித்த பேராயர் Bernardito Auza அவர்கள், இன்றைய உலகில் இலட்சக்கணக்கான சிறார், ஆயுதம் தாங்கிய மோதல்கள், பாலியல் வியாபராம், இழிபொருள் இலக்கியம், ஓவியம் போன்றவற்றுக்குப் பலியாகி வருகின்றனர் என்று கூறினார்.
அண்மை ஆண்டுகளில் ஆயுதம் தாங்கிய மோதல்களில் ஏறக்குறைய முப்பது இலட்சம் சிறார் கொல்லப்பட்டுள்ளனர், அறுபது இலட்சம் சிறார் மாற்றுத்திறனாளிகளாகியுள்ளனர், நிலக்கண்ணி வெடிகளால் பல்லாயிரக்கணக்கான சிறார் உறுப்புக்களை இழந்துள்ளனர் என்றும் கூறினார் பேராயர் Auza.
கருவில் வளரும் குழந்தை மாற்றுத்திறனாளி எனவும், பெண் குழந்தை எனவும் சந்தேகிக்கப்பட்டால் அவை அழிக்கப்படுகின்றன என்றும் பேராயர் கூறினார்.
அனைத்துலக சிறார் உரிமைகள் ஒப்பந்தம் வெளியிடப்பட்டதன் 25ம் ஆண்டு நிறைவை வருகிற நவம்பரில் ஐக்கிய நாடுகள் நிறுவனம் சிறப்பிக்கவிருப்பதைக் குறிப்பிட்டுப் பேசிய பேராயர் Auza அவர்கள், இன்னும் அதிக அளவிலான சிறார்க்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்பதைச் சுட்டிக்காட்டினார்.
அனைத்துலக குடும்ப ஆண்டு அறிவிக்கப்பட்டதன் 20ம் ஆண்டு அண்மித்துவரும் இவ்வேளையில், குடும்பங்களின் வளர்ச்சி முக்கியத்துவம் பெறவேண்டும் என்று கூறிய ஐ.நா.தூதர் பேராயர் Auza அவர்கள், மூன்று இலட்சத்துக்கு மேற்பட்ட சமூக மற்றும் கல்வி நிறுவனங்கள் மூலம் கத்தோலிக்கத் திருஅவை சிறாருக்கு ஆற்றிவரும் பணிகளையும் கோடிட்டுக் காட்டினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.