2014-10-21 15:50:34

இனம், மதம் இவற்றின் அடிப்படையில் இடம்பெறும் எவ்விதப் பாகுபாடுகளும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவை


அக்.21,2014. உலகில் பழங்குடியினத்தவரின் வாழ்வை முன்னேற்றுவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றபோதிலும், இம்மக்களின் மனித மற்றும் அடிப்படை உரிமைகளை மேம்படுத்தும் நடவடிக்கைகள் மேலும் அதிகரிக்கப்பட வேண்டுமென்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் ஐ.நா. கூட்டமொன்றில் கூறினார்.
பழங்குடியினத்தவரின் உரிமைகள் குறித்து நியுயார்க் ஐ.நா. தலைமையகத்தில், நடைபெற்ற கூட்டத்தில் இத்திங்களன்று உரையாற்றிய ஐ.நா.வுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் Bernardito Auza அவர்கள் இவ்வாறு கூறினார்.
இனம், பாலினம், மற்றும் மதத்தின் அடிப்படையில் இடம்பெறும் எவ்விதப் பாகுபாடுகளும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவை என்ற திருப்பீடத்தின் உறுதிப்பாட்டையும் எடுத்துச் சொன்னார் பேராயர் Auza.
உலகத் தாராளமயமாக்கல், தொழில்மயமாக்கல், நகர்ப்புறமயமாக்கல் ஆகிய நடவடிக்கைகள் பழங்குடியின மக்களின் விழுமியங்களைப் புறக்கணிக்கக் கூடாது என்றும், உலகின் ஒவ்வொரு மனிதரும், நாடும் தங்களின் வளர்ச்சிக்கென கொண்டிருக்கும் அடிப்படை மனித உரிமைகளை இம்மக்களும் கொண்டிருக்கின்றனர் என்றும் கூறினார் பேராயர் Auza.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.