2014-10-20 15:57:36

வாரம் ஓர் அலசல் – பாரபட்சமின்றி நல்லதைப் போற்றுவோம்


அக்.20,2014 RealAudioMP3 . ஒரு சமயம் ஈரான் அரசர் நௌஷர்கான் வேட்டையாடுவதற்காகக் காட்டுக்குப் போனார். அவருடன் சென்ற சமையல்காரர் அரசரிடம், மன்னா, சமையலுக்கு உப்பில்லை என்று சொன்னார். உடனே, அரசர் சமையல்காரரிடம், பக்கத்துக்கு ஊருக்குப் போய் உப்பை விலைகொடுத்து வாங்கிக் கொண்டு வா, இல்லாவிடில் ஊர் முழுவதும் பாழாகிவிடும் என்று சொன்னார். உடனே சமையல்காரர் அரசரிடம், மன்னா, ஒரு பிடி உப்பை விலை கொடுக்காமல் வாங்கினால் ஊர் முழுவதும் எப்படிப் பாழாகிவிடும் என்று கேட்டார். அதற்கு அரசர், தன் குடிமக்களிடம் மன்னன் ஒரு பிடி உப்பை இனாமாக வாங்கினால், அவருக்குக் கீழ் உள்ள அதிகாரிகள் அடுத்தநாள் ஊரையே விழுங்கி விடுவார்கள் என்று பதில் சொன்னார். ஆம் அன்பர்களே, எல்லாப் போதனைகளைக் காட்டிலும் வாழ்ந்துகாட்டும் போதனையே வலிமையான போதனை. யார் ஒருவர் தனது போதனைக்குத் தானே எடுத்துக்காட்டாய் வாழ்கிறார்களோ அவர்கள் போகிற பாதையில் முள்கள்கூட விலகி வழிவிடும் என்று சொல்கிறார்கள்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை நேரில் பார்த்துவிட்டு வத்திக்கான் வானொலிக்கு வருகிறவர்கள் பகிர்ந்துகொள்ளும்போது, திருத்தந்தை அவர்கள் சொல்வதுபோல் செயல்படுகிறவர் என்ற உணர்வையே நமக்கு ஏற்படுத்துகின்றது. இஞ்ஞாயிறன்று நிறைவடைந்த இரு வார குடும்பம் குறித்த உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றத்தில் கலந்துகொண்டு நம்மிடம் பேசிய திருச்சிலுவை சபையின் அருள்பணியாளர் அருள்ராஜ் அவர்கள் கூறியதைக் கேளுங்களேன RealAudioMP3 ்... இதில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஏறக்குறைய எல்லா நாள்களுமே கலந்துகொண்டார்.
எல்லாப் போதனைகளிலும் சிறந்த போதனை வாழ்ந்துகாட்டுவதே. ஏனெனில் நாம் சொல்பவற்றைக் காட்டிலும் செய்பவற்றையே இந்த உலகம், குறிப்பாக, வளரத்துடிக்கும் இளையோர் மற்றும் சிறார் உலகம் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றது. ஒவ்வொரு வாரமும் இந்த அலசல் நிகழ்ச்சியைத் தயாரிக்கத் தொடங்குவதற்கு முன்னர், இதற்கு முந்தைய வார நடப்புகளை அலசும்போது, இரத்தம் சிந்தல்கள், வன்முறைகளால் அப்பாவிகள் உயிரிழப்பு, பட்டினிச் சாவுகள், இயற்கைப் பேரிடரின் சீற்றங்கள்.. இப்படிப்பட்ட செய்திகளே அதிகமாக உள்ளன. எ.கா. நேபாளத்தில் பனிச்சரிவில் உயிரிழப்புகள், சிரியா, ஈராக், லிபியாவில் சண்டை.. எபோலா நோய்ப் பாதிப்பு, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரிப்பு, உலகம் முழுவதும், 120 கோடிப் பேர் நாளொன்றுக்கு 1.25 டாலருக்கும் (ரூ.77) குறைவாக வருவாய் ஈட்டுவதாக ஐ.நா. அறிவிப்பு ... இப்படி பல செய்திகள். அதேநேரம் நல்ல மனிதர் பலர் ஆங்காங்கே செய்யும் மனிதநேயச் செயல்களும், சிறந்த சாதனைகளும் இல்லாமல் இல்லை. ஆனால் இவை, குறைவாகவே ஊடகங்களில் இடம்பிடிக்கின்றன. மேலும், கடந்த வாரத்தில் நம் நேயர் கல்பாக்கம் மும்பை சுகுமார் அவர்கள், எங்களுக்கு மனித மேம்பாட்டுத் தகவல்களையும் தாருங்கள் என்று கேட்டிருந்தார். அன்புள்ளங்களே, கடந்த இரு நாள்களில் நாம் வாசித்த தகவல்களில் ஒரு சில இதோ....
2014ம் ஆண்டின் அமைதிக்கான நொபெல் விருதை வென்றுள்ள பாகிஸ்தானியச் சிறுமி 17 வயது மலாலாவை உலகமே கொண்டாடிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், இந்தியாவின் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஓர் இளம்பெண்ணை மலாலாவே நிஜ நாயகியாகக் கொண்டாடுகிறார் என, தி இந்து நாளிதழில் வாசித்தோம். மேற்கு வங்கத்தின் சந்தேஷ்காளி என்ற பகுதியைச் சேர்ந்த 18 வயது அனோயாரா கடுன், சக நண்பர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன், தனது பகுதியில் நடக்கும் பெண் கடத்தல் மற்றும் குழந்தைத் திருமணங்களுக்கு எதிராக போராடி வருகிறார். அனோயாரா இதுவரை 25 குழந்தைத் திருமணங்களைத் தடுத்துள்ளார், கடத்தப்பட்ட 180 சிறுமிகளை மீட்டு, அவர்களது குடும்பத்திடம் சேர்த்துள்ளார், 85 குழந்தைத் தொழிலாளர்களை மீட்டுள்ளார், கல்வி பயில முடியாத 200 சிறுவர், சிறுமிகளைப் பள்ளியில் சேர்த்துள்ளார். அனோயாராவின் இந்தத் துணிவையும், தலைமைப் பண்பையும், மலாலாவும், மலாலா தொடங்கிய, மலாலா நிதி அமைப்பும் கொண்டாடுகிறது என முகநூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. தனது பகுதியில் வாழும் இளம்பெண்களுக்கு வேலை தருவதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை காட்டி கடத்த முயன்ற கடத்தல்காரர்களை விரட்டி அடித்துள்ளார் அனோயாரா.
யோகாவில் மூவாயிரம் வகையான செய்முறைகளை உருவாக்கியதுதான் இதுவரைக்கும் கின்னஸ் சாதனையாக இருந்திருக்கிறது. யோகாவில் பத்தாயிரம் புதிய செய்முறைகளை உருவாக்கி அந்தச் சாதனையை முறியடிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் தமிழகச் சிறுமி ஒருவர். திருப்பூரில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் தேவி என்ற மாணவி, 2013ம் ஆண்டில், தேசிய யோகாப் போட்டியில் முதல் பரிசு வென்று, தமிழகத்துக்குப் பெருமை சேர்த்துள்ளார். மேலும், மாநில அளவிலும் பல்வேறு போட்டிகளில் பரிசுகளை அள்ளியிருக்கிறார். யோகாப் போட்டியில் அனைத்துலக அளவில் சாம்பியன் ஆக வேண்டுமென்பதுதான் தேவியின் இலட்சியமாம். உடலையும் மனத்தையும் உறுதிப்படுத்தும் யோகா கலை, பண்டைய இந்தியாவில் தோன்றி, உலகம் முழுவதும் பின்பற்றப்படுகிறது. 15 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, காட்டில் வாழ்ந்த முனிவர்கள், பறவைகள் மற்றும் விலங்குகளின் செயல்களை ஆராய்ந்து, இந்த யோகாசனங்களை உருவாக்கினர் என்று சொல்லப்படுகின்றது. இந்த யோகாப் பயிற்சியால், திருநெல்வேலி மாவட்டத்தின் துவரங்காடு என்ற கிராமமே மதுவை துரத்தியுள்ளது. இரத்தக்கறை படிந்த, கள்ளச்சாராயம் புரண்ட துவரங்காடு கிராமம் காவல்துறையால் கரும்புள்ளியாக கருதப்பட்டது. ஆனால் சமூக சேவா சங்க அமைப்பினரின் உதவியுடன் இக்கிராமத்தினர் யோகாப் பயிற்சி செய்து மதுவையும், கள்ளச்சாராய உற்பத்தியையும், அடிதடி, வெட்டுக்குத்து, கொலை, வழிப்பறி என அனைத்தையும் விட்டொழித்து விட்டனர். வியக்கத்தக்க வகையில் மாதிரி கிராமமாகவும் அது மாறியிருக்கிறது.
ஊழல், தவறான நிர்வாகம், வளங்கள் பற்றாக்குறை போன்றவற்றால் பாகிஸ்தானில் நலவாழ்வு அமைப்பு பாதிப்படைந்துள்ளது. ஆனால், கராச்சியில் ஓர் அரசு மருத்துவமனையில் ஒரு மனிதர் தனது தன்னலமற்ற தொண்டினால் புதுமைகளை நிகழ்த்தி வருகிறார் என பிபிசியில் ஒரு செய்தி இருந்தது. Adib Rizvi என்ற மருத்துவர் இலட்சக்கணக்கான மக்களுக்கு மாண்புடன்கூடிய இலவச சிறப்பு சிகிச்சைகளை அளித்து வருகிறார். வயதானவர்கள் தொடங்கி சிறார்வரை முஸ்லிம்கள், முஸ்லிம்கள் அல்லாதவர்கள் என எல்லா நோயாளிகளுக்கும் இவர் சிகிச்சையளித்து வருகிறார். நமது பல மருத்துவமனைகளில் நிபந்தனைகள் விதிக்கப்படுவதுபோலன்றி, Adib Rizvi அவர்கள், நோயாளிகள் தங்கள் சிகிச்சைக்கென எவ்வளவு பணம் வைத்திருக்கின்றனர் என்பதைக் கணக்குப் பார்க்காமல், நிபந்தனை விதிக்காமல் மருத்துவம் பார்க்கிறார். அவரை மக்கள் தங்கள் நண்பராக, தாங்கள் நம்பக்கூடிய ஒரு மனிதராகப் பார்க்கின்றனர். நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் எட்டுப் படுக்கைகளுடன் தொடங்கப்பட்ட இவரது SIUT மருத்துவமனையில் தற்போது 800 படுக்கைகள் உள்ளன. Adib Rizvi அவர்களுக்கு 17 வயது நடந்தபோது சுதந்திர இந்தியாவில் ஏற்பட்ட இந்து-முஸ்லிம் கலவரத்தில், புதிதாக உருவாக்கப்பட்ட பாகிஸ்தானுக்கு இவர் இந்தியாவிலிருந்து கட்டாயமாக குடியேற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. 1950களில் கராச்சியில் மருத்துவ மாணவராகத் தொடங்கிய இவரது பணி இன்று இவரை மனிதாபிமான நிலைக்கு உயர்த்தியுள்ளது.
முஸ்லிம்கள் உலகம் முழுவதும் தியாகத் திருநாளைக் கொண்டாடிய நேரத்தில், ஆஸ்திரேலியாவில் முஸ்லிம் அல்லாத சில பெண்கள், தங்களின் உடல், தலையை மறைக்கும் ஆடையை அணிந்துகொண்டு முஸ்லிம் பெண்களுக்கு மலர்க் கொத்துக்களை வழங்கி தங்கள் பெருநாள் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டுள்ளனர். ஆஸ்திரேலியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக ஏற்பட்டுவரும் கசப்புணர்வைக் களையவும், சக முஸ்லிம் பெண்களுடன் நல்லிணக்கம் பேணவும் இப்பெண்கள் இந்தச் செயலில் இறங்கியுள்ளனர். அதோடு தங்கள் நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் தவறான பிரச்சாரத்துக்கும் கசப்புணர்வுக்கும் அவர்கள் வருத்தமும் தெரிவித்திருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவில் 200 ஆண்டுகளுக்கும் மேலாக முஸ்லிம்கள் வாழ்ந்துவருகிறார்கள். அந்நாட்டின் 2 கோடி மொத்த மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 1.7 விழுக்காடாகும். இது ஒரு நெகிழவைத்த அன்புப் பரிமாற்றம் என்று முஸ்லிம் பெண்கள் கூறியுள்ளனர்.
எங்கெங்கு நன்மை நடக்கின்றதோ அதைப் பார்த்து மகிழ்ச்சியடைபவர் நல்ல துறவிகள் என்ற ஒரு கூற்று உண்டு. அன்பு நெஞ்சங்களே, நம் பேச்சுக்கள் மற்றும் நம் எழுத்துக்களைக் காட்டிலும் நாம் புரிகின்ற செயல்கள் நிறைய நன்மைகளை ஏற்படுத்தும். இந்த உலகில் வாழ்ந்த எத்தனையோ வெற்றி வீரர்களின் வாள்களும் அம்புகளும் மறைந்துவிட்டன. மாணிக்க முத்துக்களையும் வைரங்களையும் அணிந்து உயர்ந்த பீடங்களில் அமர்ந்தவர்களுக்கு வரலாறு நினைவிடங்கள் எழுப்பிக் கொண்டாடுவதில்லை. ஆனால் எளிமையாகவும், உண்மையாகவும் வாழ்ந்து காட்டியவர்களையே உலகம் கொண்டாடுகிறது. எனவே நமது வாழ்க்கை இருளை விரட்டும் ஒளியாக அமையட்டும், களைப்பைப் போக்கும் காயகல்பமாக மாறட்டும்.
அமெரிக்க ஐக்கிய நாட்டின் 22வது மற்றும் 24வது அரசுத்தலைவராக இருந்த Stephen Grover Cleveland அவர்களுக்கு ஒருமுறை ஒரு கடிதம் வந்ததாம். அரசுத்தலைவர் அவர்களே, நான் உங்களுக்கு ஒரு விடயத்தை எழுதிவிட வேண்டுமென்று இரு ஆண்டுகளாக நினைத்து வருகிறேன். ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட தபால்தலைகளை இரண்டுமுறை மறுபடியும் பயன்படுத்திவிட்டேன். நான் செய்த நேர்மையற்ற இச்செயலை அண்மையில்தான் உணர்ந்தேன். இனி நான் அத்தவற்றைச் செய்யவேமாட்டேன் என உறுதி கூறுகிறேன். என்னை மன்னித்து விடுங்கள். அதற்கான பணத்தையும் இத்துடன் வைத்துள்ளேன். நான் அந்தச் செயலைச் செய்தபோது எனக்கு வயது 13.
சாதாரண மனிதர்களின் சிறிய, ஆனால் உன்னத வாழ்வு எப்போதும் போற்றப்படும். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இஞ்ஞாயிறன்று கூறியது போன்று RealAudioMP3 , கடவுள் புதிய செயல்கள் குறித்து அஞ்சமாட்டார். அதனாலே கடவுள் நம்மை எப்போதும் எதிர்பாராத வழிகளில் நம் இதயங்களைத் திறந்து நம்மை வழிநடத்துகிறார். எனவே நல்லவைகளைச் செய்யத் துணிவோம். நல்லவைகள் எங்கிருந்து வந்தாலும் அவற்றைப் போற்றுவோம். அப்போது நாமும் வாழ்த்தப்படுவோம். உயரிய வாழ்வில் நமது இலக்கை அமைப்போம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.