2014-10-20 16:02:12

திரு அவையின் தீபாவளி வாழ்த்து


அக்.20,2014. இவ்வாரம் இந்தியாவில் சிறப்பிக்கப்படும் தீபாவளித் திருவிழாவை முன்னிட்டு, இணக்கவாழ்வு, மகிழ்வு, அமைதி மற்றும் வளத்திற்கான வாழ்த்துக்களை வெளியிட்டுள்ளது திருப்பீடம்
மதங்களிடையே கருத்துப்பரிமாற்றங்களுக்கான திருப்பீட அவை இத்திங்களன்று வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், பாகுபாட்டுடன் நடத்துதல், வன்முறை, ஒதுக்கி வைத்தல் போன்ற நிலைகளின் மத்தியில் கிறிஸ்தவர்களும் இந்துக்களும் ஒன்றிணைந்து அனைவரையும் வரவேற்று ஒன்றிணைக்கும் கலாச்சாரத்தை வளர்க்க வேண்டும் என விண்ணப்பித்துள்ளது.
பிறரை வரவேற்கும் ஒரு கலாச்சாரத்தை உருவாக்குவது அனைத்து மக்களின் ஏக்கமாக இருந்துவருகிறது எனக்கூறும் இந்த வாழ்த்துச் செய்தி, உலக மயமாக்கலின் நல்விளைவுகளுடன் அதன் தீய விளைவுகளையும் சுட்டிக்காட்டியுள்ளது.
மத அடிப்படைவாதம், உலக மயமாக்கலின் நல் விளைவுகளிலிருந்து ஏழைகள் ஒதுக்கிவைக்கப்படல், பொருட்களே பெரிதென்ற எண்ணம், நுகர்வுக்கலாச்சாரம், பாராமுகம், பிறர் குறித்த அக்கறையின்மை, நமக்குள்ளேயே முடங்கிப்போதல், குழந்தைகளும் பெண்களும் சுரண்டப்படுதல், முதியோர், நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அகதிகள் சரியான முறையில் நடத்தப்படாமை போன்றவை பிறரை விலக்கி வைக்கும் கலாச்சாரத்தின் விளைவுகள் எனக்கூறும் திருப்பீடச்செய்தி, பொறுப்புணர்வுகளைப் பகிர்வதன் வழியே கிட்டும் 'வரவேற்று இணைக்கும்' கலச்சாரம் உருவாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.